தாரைகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

ராமாயணத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்களில், அரசியல் நுணுக்கங்கள் தெரிந்த-சிறந்த கதாபாத்திரம் ‘கைகேயி’ என்றால், கைகேயிக்கு அடுத்தபடியாக அவ்வாறு சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரம் - தாரை. எந்த நேரத்தில், எதை, எப்படிச் சொல்ல(பேச) வேண்டும் என்பதில் தலைசிறந்தவள் ‘தாரை’. ஒவ்வொரு பாத்திரத்தை ஒவ்வொரு விதமாக அறிமுகப்படுத்தும் கம்பர், கணவரைத்தடுக்கும் - கூந்தல் கருகும் பெண்ணாகத் ‘தாரை’யை அறிமுகப்படுத்துகிறார். அந்தத் தாரையைப் பார்க்க வேண்டுமானால், அதற்குச்சற்று முன் உள்ள நிகழ்வைப் பார்த்தால்தான், தாரையின் கதா பாத்திரம் மனதில் பதியும். அப்படியே பார்க்கலாம் !

வாலியால் அடித்து விரட்டப்பட்ட சுக்ரீவன்,ராமரின் துணை கிடைத்தபின், ராமரது உத்தரவின்படி, வாலியைப்போருக்கு அழைக்கிறான்.அந்த அழைப்பை அப்படியே,பதிவு செய்திருக்கிறார் கம்பர்.

இடித்து  ரப்பி  வந்துபோ  ரெதிர்த்திலே  லடர்ப்பனென்
றடித்த  லங்கள்  கொட்டிவாய்ம டித்த  டுத்தலங்கு தோள்
படைத்துநின்  றுளைத்தபூசல் புக்கதென்  பமிக்கிடந்
துடிப்ப  வங்குறங்  குவாலி திண்செவித்தொ ளைக்கணே   

இப்பாடலுக்குப் பொருள்தேடி அலைய வேண்டாம். ஒரே ஒருமுறை இப்பாடலை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தாலே போதும். பாடலின் பொருள் தானாகவே விளங்கும். சுக்கிரீவன் ஏற்கனவே வாலியால் மிகவும் பாதிக்கப் பட்டவன். அவன் வாலியிடம் வாங்கிய அடியின் கோபம், ராமரின் துணை கிடைத்து விட்டது என்ற தைரியம் - ஆகிய வையெல்லாம், சுக்கிரீவனின் வாக்காக வெளிப்பட்ட இப்பாடலில், முழுவதுமாகப் பிரதிபலிக்கக் காணலாம். சுக்கிரீவனின் ஆர்ப்பரி்க்கும் முழக்கத்தைக் கேட்டதும் வாலி, கடுங்கோபம் கொண்டான்.

தன்னைக் கண்டாலே அஞ்சி நடுங்கக்கூடியவன், பெரும் முழக்கமிட்டுப் போருக்கு அழைக்கிறானே என்று கடுங்கோபம் கொண்டான் வாலி; கோபத்திலும் சிரிப்பு வெளிப்படுகிறது; படுத்திருந்தவன் எழுந்தான். தோள்களை வேகவேகமாக உதறிக்கொண்டான்; கண்களில் இருந்து கோபத்தீ வெளிப்பட்டது ; மூச்சுக் காற்று புகைபுகையாய் வெளிப்பட்டது. கோபவசப்பட்ட வாலி, பாற் கடல் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தைப்போல இருந்தான். ஆலகாலம் வெளிப்பட்டால், அமிர்தமும் வெளிப்படுமே! வெளிப்பட்டது.

அதன் பெயர் தாரை ! ஆம்! அமிர்தம்போல வெளிப்பட்டாள் தாரை. கோபாவேசமாகப் புறப்பட்ட கணவரைத் தடுத்தாள் தாரை. ‘‘சுக்ரீவன் வந்து போருக்கு அழைத்ததும் கோபப்பட்டு, உடனே போருக்குப் புறப்பட்டு விட்டீர்களே! அவன் என்ன ஏதாவது புதுசக்தியைப்பெற்று விட்டானா?அல்லது புதிதாக ஒரு பிறவி எடுத்து வந்திருக்கிறானா? இரண்டுமில்லையே! ‘‘இருந்தாலும் சுக்ரீவன் இப்போது, உங்களைப் போருக்கு அழைக்கக் காரணம்? அவனுக்குப் பெருந்துணை ஒன்று கிடைத்திருக்கிறது’’ என்றாள்; அமைதியாகவும் அறிவு பூர்வமாகவும் பேசினாள் தாரை.

அதற்குப் பதிலாக வாலி, தன் ஆற்றலையும் பெருமையையும் சொல்லி, தாரையின் வாயை அடைக்க முயற்சி செய்தான். தற்பெருமை பேசிக்கொண்ட வாலியை, தான் அறிந்தவற்றை மேலும் சொல்லித் தடுத்தாள் தாரை; “அரசே! அந்த சுக்ரீவனுக்கு இன்னுயிர் நண்பனாக , ராமன் என்பவன் வந்திருக்கிறான். உங்களைக் கொல்வதற்காக, சுக்கிரீவனுடன் வந்திருக்கிறான். நம்மிடம் அன்புள்ளம் கொண்டவர்கள் மூலமாக, இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டேன்’’ என்றாள்.

‘‘சுக்கிரீவனுக்கு உயிர்த்தோழனாக ராமன் வந்திருக்கிறான். எதற்கு? வேடிக்கை பார்க்கவா? உங்களைக் கொல்வதற்காகத்தான்!’’ என்கிறாள் தாரை. வாலிக்குத்தெரியாத இத்தகவல், தாரைக்கு எப்படித் தெரிந்தது?‘‘நம்மிடம் அன்பு பொருந்தியவர்கள் மூலம் அறிந்து கொண்டேன்’’ என்கிறாள்.  அந்த அளவிற்கு அன்றாட நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்கும் உயர்ந்த கதாபாத்திரம் - தாரை. என்ன இருந்து என்ன செய்ய?நாம் பேசும் தகவலை இடைமறித்து, அதில் ஆழங்கால் பட்டாற்போலப் பேசுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?அப்படிப்பட்டவர்கள் என்றும் உண்டு. வாலியும் அப்படிப்பட்டவன் தான்.

ராமனைப்பற்றித் தாரை சொன்னதும், வாலி கொதித்தான். அடாது கூறி அபசாரப்பட்டு விட்டாய். மக்களுக்கு அறநெறிகள் இவையென, தானே கடைபிடித்துக்காட்ட வேண்டும் என்பதற்காக அவதரித்த அவதாரமூர்த்தி ராமன் ! மாற்றாந்தாய் வார்த்தைக்காக, தம்பிக்குத் தன் அரசப்பெரும் செல்வத்தையெல்லாம் அகமகிழ்ந்து அளித்து, ‘தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இல்லை’ எனும் அளவிற்கு சகோதரபாசம் உள்ளவன்.  ‘‘அப்படிப்பட்ட ராமன், என தம்பியும் நானும் போரிடும் போது, இடையில் புகுந்து அம்பு போடுவானா? அருட்கடல் அல்லவா அவன்! பாவி! பேதைமை நிறைந்த உன் மதியால் பேசி விட்டாய். நீ பெண்ணாக இருப்பதால், உன்னைக்கொல்லாமல் விடுகிறேன்’’ என்று பலவாறாகப்பேசி, ராமனைப் பற்றி விவரிக்கிறான்.

இவ்வளவு சொன்ன வாலி,அறம் பிழைத்தால் அண்ணல் ராமன், தண்டனை அளிப்பார் என்பதை மறந்து விட்டான் போலும்! அத்துடன் நிறுத்தவில்லை; ‘‘சுக்ரீவனையும் அவனுடன் வந்தோரையும் கொன்று திரும்புவேன் நான்’’ என்று, கோப கர்ஜனை செய்தான். அச்சத்தால் வாய் மூடினாள் தாரை; ‘‘சுக்ரீவனுக்குத் துணையாக ராமன் வந்திருக்கிறான்’’ என்று தெளிவாகச் சொல்லியும், ‘‘சுக்ரீவனையும் கூட வந்தோரையும் கொல்லுவேன்’’ என வாலி சொன்ன பிறகு, வாய் திறக்க வாய்ப்பு ஏது தாரைக்கு? உயிரோடு இருக்கும்போது, தாரையின் சொல்லைக் காதில் வாங்காமல்போன வாலி, அடுத்தமுறை தாரை சொல்லும்போது, உயிருடன் இல்லை !

ஆம்! தாரை சொன்னவாறே, ராமன் அம்பால் தாக்கப்பட்டு வாலி இறந்து கிடந்தபோது,அவன் உடம்பில் விழுந்து கதறினாள் தாரை. அக்கதறலில் தாரையின் மனது அப்படியே வெளிப்பட்டிருக்கிறது.  இறந்து கீழேகிடக்கும் கணவர் உடலைக்கண்டு தாரை,‘‘உங்ளைக் கைபிடித்த நாளில் இருந்து இன்றுவரை, மகிழ்ச்சிக்கடலில் இருந்தேன். இன்றோ, துயரக்கடலில் விழுந்து விட்டேனே!’’  ‘‘நான் செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்வீர்களே தவிர, அதற்காக என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டீர்களே!

நீங்கள் இறந்துபோனது தெரிந்தும்,இன்னும் இறக்காத என்னை வெறுத்து விட்டீர்களா?’’ என்றெல்லாம் கணவரைக் குறித்துப் புலம்பிய தாரை, அடுத்து விதியை நொந்து கொள்கிறாள். ‘‘விதியே! இந்த நல்லவரை(வாலியை)அகாலத்தில் மரணமடையச் செய்த நீ, குற்றவாளி தான்! என் உயிரான இவர்(வாலி) இறந்தபின்னும் இன்னும் நான் இறக்காமல்  இருக்கின்றேனே! உயிர்போனால்,உடம்பு வாழ்ந்திருக்குமா? விதியே! சொல்!’’ எனப் புலம்பினாள்.

விதியை இவ்வாறு நொந்துகொண்ட தாரை, யமனை ஏசத் தொடங்கினாள். காரணம் ? பாற்கடல் கடைந்தபோது, வாலி தன்னந்தனி ஆளாக நின்று பாற்கடலைக் கடைந்து, கிடைத்த அமிர்தத்தை ஒரு துளிகூடத் தான் எடுத்துக்கொள்ளாமல், அப்படியே தேவர்களுக்குக் கொடுத்தவன் வாலி; (என ஒரு வரலாறு உண்டு). அமிரதம் பெற்ற அவர்களில் யமனும் ஒருவன். அத்தகவலைச் சொல்லி, யமனை ஏசி அழுகிறாள் தாரை.  ‘‘நீங்கள், அமிர்தத்தை உண்ணும்படியாக அளித்ததால் தான், யமன் உயிரோடு இருக்கிறான். அதை யமன் அறிய மாட்டான் போலும்;  இல்லாவிட்டால் நீங்கள் செய்த உதவியை மறந்து, நன்றி கெட்டவன் எனும் பெயர் படைத்த அற்பனாக இருப்பான்’’ என்று யமனை ஏசுகிறாள்.

 யமனை இவ்வாறு ஏசிய தாரையின் மனம் மறுபடியும் கணவரை எண்ணிப் புலம்புகிறது; ‘‘பொய் சொல்லாத புண்ணியரே!’’ நான் கிடந்து இங்கே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களோ, மேலுலகம் போய் விட்டீர்கள்! ‘நீ தான் என் உயிர்’ என்று, என்னைச் சொன்னீர்களே! அது பொய்யா ?   ‘‘வீரரே! உங்கள் சிந்தையில் நான் இருந்திருந்தால், நானும் இறந்திருப்பேன். என் சிந்தையில் நீங்கள் இருந்திருந்தால், நீங்களும் என்னைப் போலவே உயிரோடு இருந்திருப்பீர்கள்!

இப்போது நடந்திருப்பதைப் பார்த்தால், உங்கள் உள்ளத்தில் நான் இல்லை; என் உள்ளத்தில் நீங்கள் இல்லை என்பது புலனாகிறது’’ என்றெல்லாம் துயரத்தைக்கொட்டிய தாரைக்கு வேறொரு சந்தேகமும் வருகிறது.  ‘‘சுவாமி! நீங்கள் மார்பால் இடித்தால் போதும்; மேரு மலையும் தூளாகப்போகும்.அப்படிப்பட்ட உங்கள் மார்பில், ஓர் அம்பு வந்து பாயுமா? நான் இதை நம்ப மாட்டேன். ஒரு வேளை, தேவர்களின் மாயமா இது? வாலியைப் போலவே இருக்கும் வேறொருவன்தான், இவ்வாறு இறந்து கிடக்கின்றானா?’’ என்றெல்லாம் கதறிப் புலம்பினாள்.

இதன்பிறகு,சுக்ரீவனின் அரண்மனை தேடி லட்சுமணன் வருகை புரிந்தபோது, அங்கே தாரையைப்பற்றிய தகவல் வெளிப்படுகிறது.அது ஏற்கனவே பார்த்தவைகளைப் போல அறிவுரை சொல்வதாகவோ, அறவுரை சொல்வதாகவோ அமைய வில்லை; தவறு செய்தவர்களை இடித்துத் திருத்துவதாகவும் தெளிவுபெற்ற ஒரு ஜீவனின் பேச்சாகவும் அமைந்திருக்கிறது. சுக்கிரீவனுக்குப் பட்டாபிஷேகம் முடிந்தபின், இழந்திருந்த செல்வசுகங்களை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில், மிதமிஞ்சிய போகங்களில் ஈடுபட்ட சுக்கிரீவன், சீதாதேவியைத் தேட ஏற்பாடுகள் செய்ய வேண்டியதை மறந்து போனான். ராமர் ஏவலால் லட்சுமணன், சுக்கிரீவனைத் தேடி நியாயம் கேட்க வந்தார்.

 லட்சுமணனின் ஆவேச வருகையைக்கண்ட கிஷ்கிந்தை வானரப்படைகள், சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து கோட்டைவாசல் கதவுகளை மூடி, திறக்கமுடியாதவாறு பலத்த தடுப்புகளையும் இட்டு வைத்தார்கள். வந்த லட்சுமணனோ, அவையெல்லாவற்றையும் தூள்தூளாக்கி விட்டு, உள்ளே புகுந்து விட்டார்; அது கண்ட வானரப்படைகள் ஓட்டம் பிடித்தன. சுக்கிரீவனோ, தன்னையே மறந்த நிலையில் இருந்தான். அங்கதன் வெகுவேகமாகத் தாயிடம்ஓடி, லட்சுமணன் வருகையையும் விளையக்கூடிய விபரீதத்தையும் கூறி, “என்ன செய்வது?” எனப் பதற்றத்தோடு கேட்டான்.

 தாரையோ, சற்றும் பதற்றப்பட வில்லை; மாறாக மிகுந்த அமைதியுடன், ‘‘நீங்களெல்லாம் தீய செயல்களையும் செய்வீர்கள்; செய்துவிட்டு, அதனால் விளையும் பாதகங்களில் இருந்து, தப்பிக்கவும் வழி தேடுவீர்கள். உதவி செய்தவர்க்கு உதவிசெய்ய மறந்த நீங்கள், பிழைக்க முடியுமா என்ன? நீங்கள் செய்த தீவினையின் பலனை, நீங்கள் அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. லட்சுமணனை எதிர்த்தால், நீங்கள் அனைவரும் இறந்து போவீர்கள்!’’ என்றாள்.

  அதற்குள் லட்சுமணன்,மிகுந்த கோபாவேசத்தோடு அரண்மனை வாசலை நெருங்கி விட்டார். அது கண்ட ஆஞ்ச நேயர் தாரையிடம், ‘‘தாயே! நீங்கள் சென்று, லட்சுமணனைத் தடுத்துப் பேசினால்தான், நிலைமை சரியாகும்’’ என்றார். தாரை மறுக்க வில்லை; தானே போய், லட்சுமணன் முன் நின்றாள். வேகவேகமாக வந்த லட்சுமணன் நடை தடை பட்டது. தாரை பேசத் தொடங்கினாள்; ‘‘வீரனே! உன்னைப் போன்றவர்கள் வருகைபுரிய வேண்டுமானால், முடிவில்லாத நெடிய காலம், கடுந்தவம் செய்திருந்தால் தவிர, இந்தப் பாக்கியம் கிடைக்குமா? உன் வருகையால், மிகவும் உயர்ந்த இகலோக வாழ்வை அடைந்தோம். நாங்கள் செய்த தீவினைகள் எல்லாம் நீங்கி, பரலோக வாழ்வுக்கும் உரியவர்களாக ஆனோம்! இதைவிட வேறு என்ன வேண்டும்?’’ என்றாள்.

தாரையின் இனிமையான வார்த்தைகளும் அவள் கொண்ட  கைம்மைக் கோலமும், லட்சுமணன் மனதை உருக்கின. தாயைப் பார்ப்பது போல இருந்தது; ராமர் சொல்லச் சொன்ன தகவல்களைச் சொல்லி, விவரித்தார். வாலி, அங்கதன் முதலானோர்க்கு அறிவுரை கூறிய தாரை, லட்சுமணனிடம் மேலும் பேசத் தொடங்கினாள். ‘‘வீரா! கோபம் கொள்ளாதே! சிறியவர்கள் தவறு செய்தால், தாய்போன்ற கருணையோடு நீ பொறுத்துக்கொள்ள வேண்டாமா? அதைவிட்டு, நீயே கோபம் கொண்டால், வேறு யார் தான் பொறுப்பார்கள்’’ ?

 ‘‘சுக்கிரீவன்,தான்சொன்ன சொல்லை மறக்கவில்லை. சேனைகளைத் திரட்டிவர ஏற்பாடுகளைச் செய்து விட்டு, அந்த வீரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறான் அவன். அதனால்தான் தாமதமாகி விட்டது. படைகள் வரும்காலம் நெருங்கி விட்டது. சரண் அடைந்தவர்களுக்குத் தாயினும இரக்கம் மிகுந்த நீங்கள்,சற்று தாமதமாவதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’’ என்று விரிவாகப் பேசினாள் தாரை.  இதன் பிறகும் லட்சுமணன் கோபம் இருக்குமா என்ன? லட்சுமணன் அமைதியடைந்தார்.

தாரை கதாபாத்திரம் மிகவும் உன்னதமானது. உலக நடப்புகள்; விவரமறியாத கணவருக்கு நல்லதைச்சொல்லி அவரைத் திருத்தப் பார்ப்பது, கணவரிடம் உள்ள நல்லவைகளையெல்லாம் சொல்லி அழுவது; தன்னைச்சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், அவர்கள் செய்த தவறுகளை எடுத்துச் சொல்லி நல்வழி காட்டுவது. இனிமையான பேச்சினால், எப்படிப்பட்ட இடையூறுகளையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவது எனப் பல வழிகளிலும் பாடம் நடத்தும் கதா பாத்திரம் தாரை.

பி.என் பரசுராமன்