சினம் தணிந்த தணிகை வேலவா! மனதை கனியாக்கும் கருணை சூழ வா!



எழில்மிகு பொழில் சூழ் திருத்தணியில் குயில்கள் இன்னிசை பயில அந்த பொழில்களில் உள்ள தாமரை மலரின் மது இனிதா! இல்லை கந்தன் மலர்  அடி பொழியும் கருணை மது இனிதா! என்று குழம்பி வண்டு ரீங்காரம் இட இதன் நடுவே மறை ஒலியோ திரைகடல் அலை ஒலியோ என்று திகைக்க  வைக்கும் ஒரு குரல்!

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.

இது திருத்தணியா இல்லை சிவ பதி என்னும் கயிலையா? என்று புகழ்ந்து ஒரு அடியவர் பாடிப் பரவிக்கொண்டிருந்தார்.  இதனிடையே வேறு ஒரு  குரலும் கேட்டது. ‘‘கேட்டாயா சங்கதியை விலை மாதர் பின்னே திரிந்து அவரை பேணி செல்வம் அனைத்தும் தொலைத்து உடல் முழுதும் பிணி மூடி  திரிந்த இவன் இன்று சிறந்த முருகன் அடியனாம். இவன் பின்னே திரியவும் ஒரு கூட்டம் வேறு சீ சீ” என்று திருப்புகழ் தந்த தனிப்பெரும் புலவரை  அதாவது அருணகிரி அடிகளாரை இகழ்ந்தனர். இது அவர் காதிலும் விழுந்தது. அவர் மணம் நொந்தார்.

காரணம் அவர்கள் இகழ்ந்தது இவரை இல்லை. கந்தன் கருணையை அல்லவா? தவசிகளுக்கு மட்டுமே இல்லை இறைவன். நம்மை போல்  தவறியவர்களுக்கும் அவன்தானே இறைவன். அதனால் தானே அப்பர் ஒரு பற்று இல்லாமையும் கண்டு இறங்காய் கச்சி ஏகம்பனே என்றார். அதனால்  தானே கந்தர் சஷ்டி கவசம்  எத்தனை பிழைகள் எத்தனை குறைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்   கடன்  என்று சொல்கிறது. ஆதலால் கந்தன் கருணையை இந்த கலியுக மக்கள் உணரும் வண்ணம்...

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர்
குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்

- என்று ஒரு திருப்புகழை பாட ஆரம்பித்தார். இவர் பாடப்பாட இவரை நிந்தித்தவர்களின் உடலில் சூடு ஏறியது.  ( சம்பந்தர் குடிலுக்கு கூன்  பாண்டியன் இட்ட தீ அவனுக்கு நோயாய் வந்தது ஒப்பு நோக்கத் தக்கது) உடல் சூடு ஏறஏற அவர்கள் சொன்ன சூடு சொல்லின் பலன் தான் இது  என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் நாடி தேடி ஓடி அருணகிரியார் பதம் பணிய அவர் , ‘‘என் அப்பனே தணிகாசலபதே அடியேன் செய்த பெரும் பிழை  பொறுத்த நீ இவர்கள் செய்த சிறு பிழை பொறுக்க மறுப்பதேனோ?

எம்பெருமானே இவர்கள் துயர் துடைத்து அருளுக என்று அவர் ஆரம்பித்த திருப்புகழை முடித்தார்.  அந்த சுடு சொல்லர்களின்  சூலை நோய் இருந்த  தடம் தெரியாமல் ஓடி ஒளிந்தது. இதைத்தான் அருணகிரிநாதர் உடல் நோய் மட்டும் இல்லாமல் பிறவி நோயும் சேர்த்து நீக்கும் வைத்திய  நாதபெருமாளே என்று பாடினார் போலும்.       
                                                      
‘‘சுவாமி பாவத்திலேயே மிகக் கொடுமையானது எது?’’ என்று கிளிக் குரலில் நம் எம்பெருமாட்டி தேவசேனை  முருகவேளை கேட்க, முருகனும்  வாயில் பக்கம் பார்க்காதவன்போல் கொடுத்த பொருளை கேட்பதுதான் என்று ஒரு போடு போட்டான். “ஐயனே... பொடிவைத்துப் பேசி மேலும் என்  மனதை பொடியாக்க வேண்டாம். சூரன் எனக்கும் என்னைச் சேர்ந்தவருக்கும் இட்ட விலங்கை அறுத்து இந்திர பதவியை மீண்டும் கொடுத்து, என்  மகளை மணந்து எனக்கு பெறற்கரிய பேரு தந்து என்னை ஆண்டவனே!

தங்கள் திருமணத்தின்போது நீங்கள் சொல்லியும் கேளாமல் என் செல்வத் திறனை காட்ட காமதேனு, ஐராவதம், கற்பகவிருட்சம் அனைத்தையும்  சீதனமாகக் கொடுத்து விட்டேன்’’ என்று வாயிலிலிருந்து உள்ளே நுழைந்தான் இந்திரன். “உண்மை மாமா! இதிலென்ன பிழை?” என்றான் முருகன்  ஒன்றும் அறியாதவன்போல். ‘‘ஐயனே! காமதேனு ஐராவதம் கற்பகம் அனைத்தும் செல்வ செருக்கொடு கொடுத்ததால் அன்று மன்மதன் எப்படி  செருக்கொழிந்தானோ அதேபோல்  என்செல்வம் அனைத்தும் போய் நானும் செருக்கொழிந்தேன்.

என் வறுமை போகுமாறு அருள்வாய் என்று சரண் புகுந்தான்” இந்திரன். “மாமா கவலை வேண்டாம். நீர் செருக்கொழிந்ததில் அக மகிழ்ந்தோம்.   ஐராவதமே நீ இனி என்னை பார்த்து இல்லாமல் என் மாமன் இந்திரன் திசை பார்த்து நிற்பாய்.  உன் பார்வையால் இந்திரன் எல்லா செல்வமும்  மீண்டும் பெறுவான்” என்று ஆணை இட்டான். “ஐயனே கொடுத்த பொருள் மீண்டும் கேட்ட பழி என்னைச் சாராமல் அழகாய் அருளிய கந்தன் கருணை  போற்றி போற்றி” என்று வாழ்த்தி விடை பெற்றான்.
                                             
‘‘மனிதர்களான என்னைப் போன்றோருக்கு உன் திரு உரு தெரியாததற்கு  என்ன காரணம் தெரியுமா, பரமேஸ்வரா ? எங்களுக்கும் முன்னே  இப்போது   சிறப்பு தரிசனம்போல் இந்திரன், வருணன் , எமன்,  பிரம்மன் போன்றோர் தலைமீது கைகூப்பி உன் பாதம் பணிகின்றனர். ஆதலால், அவர்கள் கையும்  கரிய தலைமுடியும் சேர்ந்து உன் பாதத்தை  மறைக்கிறது என்றும் அதுபோல அன்றும் வரிசையாய் அயன் இந்திரன் போன்றோர் வந்து தணிகை  வேலனைவணங்கிய வண்ணம் இருக்க, நான்கு கைகளுடன் கரிய நெடிய ஒருவரும் வந்தார். அவரை பார்த்ததும் வேலன் “மாமா தாங்களுமா என்னை  வணங்க வரவேண்டும். என்னை ஏன் சங்கோஜப் பட வைக்கிறீர்கள் “என்றான்.

நாரணனும், ‘‘மருக நீ அறியாததா?’’ என்றார் வினயமாக. ‘‘சரி மாமா. தங்கள் கைகளில் என்றும் பொலிவுடன் இருக்கும் திருவாழி எங்கே?’’ என்றான்  முருகன். ‘‘மருகா தாரகாசுரனுக்கும் எமக்கும் நடந்த யுத்தத்தில் அவன் மீது நான் ஏவிய சக்ராயுதம் ஈசன் அளித்த வர பலத்தால் அவனை  கொல்லாமல் அவன் கழுத்தில் வெற்றிப் பதக்கமாக மாறி விழுந்தது. பிறகு, அவனை நீ போரில் வென்றதும் அந்த சக்ர பதக்கம் உன் கழுத்தை இன்று  வரை அலங்கரித்து வருகிறது. உம்மிடம் இருந்து அதைப் பெறவே வந்தோம்” என்றார்.

‘‘அதற்கு என்ன? தந்தால் போயிற்று’’ என்று திருமாலுக்கு முன்பு திருவீழிமிழலையில் ஈசன் அளித்தார்போல் முருகன் தந்தான் சக்ரத்தை.  அதனால்தான் இன்றளவும் தணிகை வேலனின் மார்பில் ஒரு பள்ளம் காணப்படும் .அது முன்பு நாரணனின் சக்கரம் பதக்கமாக இருந்த இடம். அதில்  சந்தனம் பூசி வைக்கிறார்கள். மறுநாள் அந்தச் சந்தனத்தை நோய் போக்கும் மாமருந்தாக பக்தர்கள் பருகுகிறார்கள். “முத்துசாமி கண்ண தொற  சொல்றேன். கண்ண தொறடா, கால் வலிக்கறதுடா’’ என்ற மழலையின் குரல் கொஞ்சும் தொனியில்.

யாரை கூப்பிடுகிறது அது. இந்தக் கொஞ்சும் மழலை மொழி கேட்ட பின்னும் கண் திறக்காமல் இருப்பவர் யார்?? ராமஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் அவரது  மனையாள் பிள்ளைப் பேறு வேண்டி திருப்புள்ளிருக்கு வேளூர் பாலாம்பிகை சமேத வைத்தியநாதன் இணையடியை போற்றி கோயிலில் 48 நாட்கள்  தங்கி விரதம்  இருந்தனர். அங்கே வாசம் செய்யும் பாலாம்பிகை 48 ஆம் நாள் இரவு ராமசாமி தம்பதியின் கனவில் தோன்றி ஒரு முத்து மாலையை  அவர்கள் மடியில் இட்டாள். அதன் பயனாக பிறந்த குழந்தை.

ஆதலால் முத்துசுவாமி என்று பெயர்  சூட்டி சகல வேதத்தையும் ஓதிவைத்து வளர்த்தனர். பின் அவர்களது குருநாதர் சிதம்பர தாச சுவாமிகளின்   கோரிக்கையின் பேரில் தனது குழந்தையை காசிக்கு அவருக்கு சேவை செய்ய அனுப்பி வைத்தனர். காசியில் தனது குல குருவிடம் மந்திர உபதேசம்  பெற்று அதை ஜபித்து வந்தார். ஒருநாள், நான் மந்திர சித்தி அடைந்தேனா..  இல்லையா.. என்பதை அறிய வேண்டும்  என்று அவர் தன் குருவிடம்  விண்ணப்பிக்க அவர், ‘‘நீ ஜபித்த மந்திரத்தை கூறி நீ ஆசைப்படும் பொருளை மனதில் நினைத்து கங்கை நீரை கையில் எடு.

நீ நினைத்த பொருள் உன் கையில் இருந்தால் நீ சித்தி பெற்று விட்டாய் என்று பொருள்’’ என்று குரு கூற,  அவர் சரஸ்வதியின் கை வீணையை  எண்ணி கங்கையை கையில் எடுத்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையில்  சரஸ்வதியின் வீணை இருந்தது. அதைக்கண்ட அவரது குரு, ‘‘வீணை  பெற்றுவிட்டாய், நாத உபதேசம் பெற வேண்டாமா?’’ என்று கூறி ஆறுமுகனின் அருமையான மந்திரத்தை உபதேசித்து தணிகைமலையில் தவம்  இருக்குமாறு கூறினார். ஈசனின் திருமகன் வரும் வரை தவத்தை விடாதே என்று கூறி அனுப்பி இருந்தார்,  அவரும்.

“வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
     இகபரசெள பாக்ய ...... மருள்வாயே”

என்று அருணகிரிநாதர் கூறுவது போல் இகபர சௌபாக்கியம் அருளும் ஷடாக்ஷர மந்திரம் ஜபித்து தவமியற்றி வந்தார். ஒரு குழந்தையொன்று நான்கு  கற்கண்டை அள்ளி வாயில் போட்டு, ‘‘இது என்னன்னு சொல்லு பார்ப்போம்’’ என்றது. அவரும் மென்றுகொண்டே ‘‘அட... கல்கண்டு’’ என்றார்.  ‘‘இது  போலவே கற்கண்டாய் பாடும்’’ என்றது. முத்துசாமியும் தவம் விடுத்து கண் திறந்து பார்த்தார். அந்தக் குழந்தை ஓடி சந்நிதானத்தில் சென்று  மறைந்தது. இவருக்கு வந்தது யார் என்று தெரிந்து விட்டது.

தமிழ்க் கடவுள் அருளால் வட மொழியில் பாடத் தொடங்கினார்.  ‘‘நாதாதி குரு குகோ ஜயதி ஜயதி’’ என்று முதல் கீர்த்தனையை பாட ஆரம்பித்த  இவர் தாம் பாடும் ஒவ்வொரு கீர்த்தனையிலும் கந்தன் கருணையை வியந்து “குரு குக” என்று குறிப்பிட ஆரம்பித்தார். இவர் தான் சங்கீத  மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர். அருணகிரியை தமிழில் பாடவைத்த முருகன் முத்துசாமி தீக்ஷிதரை வட மொழியில் பாட  வைத்தான். ஆக, அவன் வட மொக்கும் தலைவன் என்று தெரிகிறது.  இதையேதான் அருணகிரி “சிலா வட கலா வினோதவா” என்றார்.

இன்னும் தணிகை வேலனின் தனிப் பெரும் கருணையை சொல்லிக் கொண்டே போகலாம். நந்தி தேவருக்கு  ‘‘பதி பசு பாச’’ உபதேசம் செய்த இடம்  தணிகை. தணிகை செங்கல்வராயர்  என்ற மகான் அருள் பெற்ற தலம். மேலும், சூரசம்ஹாரமே இல்லாத தலம். ஆம்.  மற்ற எல்லா தளங்களிலும்  சூர சம்ஹாரம் நடக்கும் நேரத்தில் முருகன் உள்ளம் குளிர குளிர அவனது சிரசில் புஷ்பங்கள் கொட்டி மகிழ்விக்கிறார்கள். ஆக, இங்கு முருகனுக்கு  சினமே இல்லை என்று சொல்லலாம் . சினம் தணிந்து மனம் கனிந்து அருள் புரிய காத்துக் கிடக்கும் முருகனை  மும்மூர்த்திகள், முனிவர்,  தேவர்களோடு கூடி  இருந்து குளிர்வோம்.


ஜி. மகேஷ்