சாஸ்தாவிற்கு மஞ்சள் ஆடையும், சர்க்கரைப் பொங்கலும் ஏன்?



ஒருசமயம், ஆனைமுகப்பெருமான், தன் இளைய சகோதரனான பாலசாஸ்தாவை தன் மூஷிக வாகனத்தில் அமர்த்திக்கொண்டு அகில உலகமெங்கும்  வலம் வந்துகொண்டிருந்தார். அதனை அறிந்த சரஸ்வதி தேவி அவர்களை தங்கள் லோகமான சத்யலோகத்துக்கு அழைத்தாள். ஆனை முகனும்  சாஸ்தாவும் அதனை அறிந்து சத்யலோகத்தை நோக்கி வரலானார்கள்.

இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட கலைமகள், தன் நாயகரை நோக்கி, ‘‘சிவகுமாரர்களான சாஸ்தாவும், விநாயகரும் நமது லோகத்துக்கு வருகிறார்கள்.  அவர்களுக்கு வரவேற்பளித்து நல்ல முறையில் உபசரிக்க வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டாள். ரிஷிகளும், யோகிகளும், சத்ய லோகத்தில் வாழும்  ஜீவன் முக்தர்களும் புடைசூழ, பிரம்மதேவன் விநாயகனையும், சாஸ்தாவையும் பூர்ண கும்பத்தோடு வரவேற்றார்கள்.

வேத கோஷங்கள் முழங்க அவ்விரு பாலகர்களும் சத்ய லோகத்தை அடைந்தார்கள். தாங்கள் பெற்ற இருவரையும் வரவேற்று 64 வகை  உபசாரங்களையும் செய்து மகிழ்ந்தார்கள். அவர்களை நறுமணமிக்க நீரால் மங்கள நீராட்டினர். அதன்பின்னர் விநாயகருக்கு வெண்ணிற  பட்டாடைகளையும் மகா சாஸ்தாவுக்கு மஞ்சள் நிறப்பட்டாடைகளையும் அளித்தார்கள். அழகிய ஆசனங்களில் அமர்த்தி, அறுசுவையோடு உணவளித்து  மகிழ்ந்தார்கள்.  

ஏகதந்தனுக்கு அவனுக்குப் பிரியமான  மோதகத்தையும், மகா சாஸ்தாவுக்கு சர்க்கரைப்பொங்கலையும் இட்டு மகிழ்ந்தாள் சரஸ்வதி. விநாயகரும்  மோதகத்தை விரும்பி உண்டார். சாஸ்தாவும்  ‘‘வாக்தேவியே! என்மீது கொண்ட அன்பினால் நீங்கள் எனக்களித்த மஞ்சள் பட்டாடையும், சர்க்கரைப்  பொங்கலும் எனக்கு மிகவும் மனநிறைவை அளிக்கிறது. உங்கள் அன்பின் வெளிப்பாடாக நீங்கள் அளித்த இந்த மஞ்சள் பட்டும் சர்க்கரைப்பொங்கலும்  இனி எனக்கு என்றும் பிரியமானவையாக இருக்கும். இவற்றை எனக்கு அளிப்பவர் எனது அருளை எளிதில் பெறுவர்’’ என்று வரமருளினார்.

- இ.எஸ்.சுகந்தன்.