மகத்துவமிக்க மதுரை மீனாட்சி குங்குமம்!



குங்குமமிடுதல் ஓர் ஆன்மிக அடையாளம் என்பதோடு, மங்கலப் பொருளில் இதற்கென ஒரு மகத்தான இடமிருக்கிறது. பலதரப்பட்ட குங்குமத்திலும்  கலந்திருக்கும் வேதிக்கலவை நெற்றி மையத்தை தடிக்கவைத்துக் கருப்பாக்கும் ஆபத்திருக்கிறது. ஆனால், மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்தினர்  அன்றாடம் இயற்கை முறையில் தயாரித்துத் தரும் குங்குமம் கஸ்தூரி வாசனைத் தூக்கலோடு, வண்ணத்தால் பக்தர்களை வசப்படுத்தும் அதிசயம்  நிகழ்த்தி விடுகிறது.

மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘மீனாட்சி கோயிலில் கஸ்தூரி மஞ்சளுடன், வெங்காரம், படிகாரம், சிறிது நல்லெண்ணெய்  சேர்த்து இந்த குங்குமம் தயாரிக்கிறோம். கோயிலுக்குள் தெற்காடி வீதியில் குங்குமம் தயாரிப்பு மையத்தில் சுத்தம், சுகாதாரத்துடன் எவ்வித  கலப்பின்றி, சிறிதும் ரசாயணச் சேர்ப்பின்றி இயற்கைச் சிவப்பில் அன்றாடம் ஆட்களை அமர்த்தி இந்த குங்குமம் தயாராகிறது. கோயிலுக்குள் சாமி  கும்பிட வரும் பக்தர்களுக்கு அர்ச்சனையின்போதும் இந்த கோயில் தயாரிப்பு குங்குமமே தரப்படுகிறது.

தலா 40கிராம் எடையில் பிரசாத ஸ்டால்களிலும் கோயில் குங்குமம் விற்பனைக்கு இருக்கிறது. இவை தினமும் பல நூறு பாக்கெட்டுகள் விற்றுத்  தீர்கின்றன. திருவிழாக் காலங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு எகிறுகிறது’ என்கின்றனர். பொதுவாக பிற அம்மன் கோயில்களில்  அர்ச்சனைகளில் சிவப்பு நிற குங்குமம் இடம்பிடித்தபோதும், மதுரை மீனாட்சி கோயில் ‘மெரூன்’ நிறத்து குங்குமம் மேலும் அழகு காட்டி, அற்புத  ஆன்மிகம் பேசுகிறது. இத்துடன், ‘தாழம்பூ’ வாசனையில் பக்தர்களை வசப்படுத்தும் ‘தாழம்பூ குங்குமம்’ மதுரை மீனாட்சி கோயிலின் அடையாளங்களில்  ஒன்றாகி இருக்கிறது.

மதுரைக்கு வருகிறவர்கள் மீனாட்சி அம்மனை வழிபட்டுத் திரும்புகிற தருணங்களில் அவசியம், கோயிலின் கஸ்தூரி வாசனைக்குரிய குங்குமத்துடன்,  இந்த ‘தாழம்பூ குங்குமத்தை’யும் வாங்கிப்போக மறப்பதில்லை. மிகுந்த சிரத்தையோடு தயாரித்து மதுரை மீனாட்சிம்மன் கோயில் உள்கடைகளில்  விற்கப்படுகிற இந்த ‘தாழம்பூ குங்குமம்’ அத்தனை பேரின் இதயத்தை ஈர்க்கிற மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. ‘தாழம்பூ குங்குமம்’ தயாரித்துத்  தருகிற மதுரை ஜெயச்சந்திரனிடம் பேசினோம். ‘‘சுத்தமான மஞ்சள் கிழங்கினை காயவிட்டு அரைத்தெடுத்து, அதனுடன் வழக்கமான குங்குமத்  தயாரிப்பிற்கான பொருட்களைத் தூளாக்கிக் கலக்கிறோம்.

இத்துடன் கூடுதலாக ‘தாழம்பூ வாசனைத் திரவம்’ கலக்கப்படுகிறது. மஞ்சளுடன், தாழம்பூ வாசமும்  கைகோர்த்து இனம்புரியா தனிப்பட்ட ‘தூக்கல்  வாசனை’ உணர்தல் தருகிறது. ரோஜா, மல்லிகை.... என எத்தனையோ வாசனைத் திரவங்கள் இருப்பினும், தாழம்பூ வாசத்தில் மட்டுமே பல  ஆண்டுகளாக குங்குமம் தயாரிக்கிறோம். காரணம் இந்த ஒற்றை வாசமே, மதுரை மீனாட்சி கோயில் பக்தர்களை ஈர்த்து, இக்கோயில் குங்குமத்திற்கான  அடையாளப் பெருமையையும் தந்திருக்கிறது’’ என்றார்.

கலப்பட ‘குங்குமம்’ கண்டுபிடிக்கலாம்!

கலப்படக் குங்குமத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். ஒரு வெள்ளை காகிதத்தின் நடுவில் கொஞ்சம் குங்குமத்தைக் கொட்டி, பேப்பரை மடித்து  தேய்த்து பார்த்தால், ‘மஞ்சள்’ நிறமே காகிதத்தில் படிந்திருக்கும். சிவப்பு, மஞ்சள், மெரூன்... இப்படி எந்த வண்ணத்தில் குங்குமம் இருந்தாலும்,  வெள்ளைக் காகிதத்தில் ஒட்டும் நிறம் ‘மஞ்சளாக’ மட்டுமே இருக்கும். இதுதான் தரமான குங்குமம்... பிற வண்ணங்கள் தெரிந்தால் கலப்படம்தான்.

படங்கள்: டி.ஏ.அருள்ராஜ்
செ. அபுதாகிர்