கார்த்திகை தீப விளக்கிற்கு தூய விளக்கம்



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

ஆன்மிகம் இதழில் திருவலஞ்சுழி தலவரலாற்று கட்டுரையில் 1949 ஆம் ஆண்டு சில்பி வரைந்த அற்புதமான படத்தையும், பைரவர் படத்தையும்  வெளியிட்டு இக்காலத்தவர்கள் ஓவிய நுட்பத்தினை பார்க்க உதவியதோடு, அக்கால ஓவிய சிறப்பையும் சுட்டிக்காட்டிய ஆன்மிகம் பலன் இதழிற்கு  வாசகர்கள் சார்பில் நன்றி.
- K.சிவக்குமார், சீர்காழி.

கார்த்திகை விரதங்கள் இருக்கும் காவல் தெய்வங்கள் பற்றிய தகவல் தொகுப்பு ஒரு அரிய படைப்பு. இதுவரை இப்படியொரு தகவல்கள்  அறிந்ததில்லை என ஏற்படுத்தியது வியப்பு. இதுவே ஆன்மிகம் பலன் இதழின் தனிச் சிறப்பு. பாராட்டுக்கள்!
- அயன்புரம் த.சத்திய நாராயணன் சென்னை-72.

ஆணவம் கூடாது. அகந்தை கொண்டால் ஆண்டவனே என்றாலும் தோல்விதான் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கு இறைவன் ஆடிய நாடகம்  என்றே நான் கருதுகிறேன். தலையங்கம் பகுதி சிந்தனைக்கு விருந்து படைக்கின்றது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

இறைவனை ஜோதி வடிவமாகத் தரிசிப்பதே தீபத் திருநாளின் இறைதத்துவம் என்பதை அக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம் கட்டுரை  வெளிச்சம் போட்டுக் காட்டியது.
- இராம.கண்ணன், சாந்திநகர், திருநெல்வேலி.
- ஆர்.விநாயகராமன், செல்வமருதூர்.

அனந்தனுக்கு 1000 நாமங்கள் என்ற தொகுப்பு பக்தர்களுக்கு புதிய வகுப்பு. வேறு இதழ்களில் கிட்டாத விவரங்கள் ஆன்மிக பலனில் கிட்டுவதால்  கரங்கள் தட்டுகின்றன! கும்பிடுகின்றன!!
- ஆர்.ஜே.கல்யாணி, மணலிவிளை.

தொம்பைத் தோரணங்கள் சூழ அசைந்தாடும் பெருந்தேர் குறித்த படங்களும் தகவல்களும் அண்ணாந்து பார்க்க வைத்தன. ஆன்மிக இதழுக்கு  அச்சாணியான விவரங்கள் அழகுற தரப்படுகிற பலனால் நம்ம இதழ் உச்சாணிதான்!
- ஆர்.ஜி.பிரேமா, திசையன்விளை.

காமதேனுவின் மீது ஈசனும் அம்மையும் அமர்ந்திருக்கும் காட்சி ஆத்மானந்தத்தின் அத்தாட்சி. பிரபஞ்ச ஜீவன்களுக்கெல்லாம் மனசாட்சி!
- ஆர்.உமா ராமர், ஸ்ரீலட்சுமிபுரம், வாரியூர்.

‘பிரசாதங்கள்’ என்ற தலைப்பே பிரசாதமாக இனித்தது. உடுப்பி முறுக்கு முதல் தவாகிரில்டு டோஃபு வரை அஞ்சு அயிட்டங்களுமே படிக்கும்போதே  பஞ்சாமிர்தம். ஒரு ஆன்மிக இதழின் உன்னத அணுகுமுறை ‘கிச்சன்’ அயிட்டங்களைக்கூட பிரசாதங்கள் என்று பகிர்வதுதான். பலே! பலே!
- ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

‘ஆன்மிகம் பலன்’ கார்த்திகை தீபம் பக்தி ஸ்பெஷல் தலையங்கம் முதல் அக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம், கார்த்திகை தீபம்  கொண்டாடுவதன் ஐதீகம் பற்றி ஹரிபிரசாத் சர்மாவின் தெளிவான பதில் வரை தீப ஒளியின் மகிமையைத் தெரிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம், வந்தவாசி.

கோரி வரமருளும் கார்த்திகை மாதம் சிறப்பான தொகுப்பு அனைத்தையும் தொகுத்து தந்தது அருமை. பேரறிவை அருளும் அருணாச்சலேஸ்வரர்  கட்டுரையில், கிரிவலத்தின் தனிச்சிறப்பை அறிந்தோம். நன்றி.
- ராஜிராதா, பெங்களூரு.

ராஜஸ்தான்-கும்பல்கர்க் கோட்டை கட்டளைக் கல்லாலான திருநீலகண்டரின் லிங்கத் திருமேனி ஆலயம் பற்றிய தகவல்களும் படங்களும் அந்த  சிவாலயத்திற்கே நேரில் சென்று தரிசித்த மனநிறைவினைத் தந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சுடலை ஆண்டவர் பற்றிய விளக்கம், 61 மாடன்கள் குறித்த கட்டுரை பிரமிப்பை தரத்தான் செய்தன. கட்டளைக்கல் இதுவரை கேள்வியேப்படாத அறிய  விஷயம். இருப்பிடம் வெகு தூரமானாலும் இதமாக மனதைத் தொட்டது ‘தேர்’-பவனி. பல ஊர்களில் கண்டுகளித்த கண்களுக்கு அதன் வரலாறு  முழுவிவரம் படித்தபின் ‘தேர்’ மீது அதிகமான பக்தியை மேலோங்க விட்டுள்ளது.
- சுகந்தி நாராயணண், வியாசர்நகர்.

மகாபாரதம், பிரசாதங்கள்,
திருமூலர் மந்திர ரகசியம் அடுத்த இதழில்...