தொழுநோயை போக்கிய கரும்புளி சாஸ்தா



தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ளது குலசேகரநத்தம். இங்கு வீற்றிருக்கும் சாஸ்தா கரும்புளி சாஸ்தா என்றழைக்கப்படுகிறார். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மலையாண்டி என்ற தொழுநோயாளி இவ்விடம் வந்து தங்கினார். இப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க வருபவர்களும்,  அந்த வழியாக வந்து செல்வோரும் கொடுப்பதை உண்டு வாழ்ந்து வந்தார். எல்லோரும் இவரை போத்தி என்று அழைத்து வந்தனர்.

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் கொடிய நோயாக தொழுநோயை அப்போது மக்கள் கருதினர். அதனால் இவரை முக சுழிப்போடுதான் பார்த்தனர்.  இதனால் வேதனை கொண்ட போத்தி, ஒரு முறை ஒரு பௌர்னமி அன்று அவ்விடம் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நீராடியவர் சாஸ்தா முன்பு வந்தார். சாஸ்தா, இன்றோடு எனது நோய் மாற வேண்டும். இல்லையேல் இன்றே எனது ஜீவன் போக வேண்டும் என்று வேண்டியவர் சாஸ்தாவின்  விக்கிரகத்தின் முன்பு மண்டியிட்டு, தலையை மண்ணில் முட்டினார். அப்போது, அசரீரி ஒலித்தது.

‘‘மகனே கவலை படாதே உன்  நோய் பூரண குணமடையும். நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று கிழக்கே கருமிளகு வியாபாரம் செய்யும்  வியாபாரிகள் வண்டி கட்டி செல்வார்கள். நாளை பொழுது புலர்ந்த பின் அவர்களிடம் சென்று கைப்பிடி அளவு மிளகு வாங்கி வா... நான் உன்னை  குணப்படுத்துகிறேன்’’ என்றார் சாஸ்தா. அந்த காலத்தில் பொதிகை மலையில் மிளகு அதிகம் விளைந்தது. இங்கு விளைந்த மிளகுக்கு அயல்நாட்டில்  நல்ல மவுசு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க பழைய துறைமுகமான கொற்கை துறைமுகத்தில் இருந்து அயல் நாடுகளுக்கு மிளகை  ஏற்றுமதி செய்து வந்தனர்.

மிளகை  மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்பவர்கள் சாண்பத்து என்ற இடத்தில் இருந்தனர். இந்த சாண்பத்து தான் 18ஆம் நூற்றாண்டில்  கிறிஸ்தவத்தை பிரசாரம் செய்வதற்காக வெள்ளைக்காரர்கள் வந்து தங்கிய பகுதி, இப்போது நாசரேத் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மிகப்பெரிய  சந்தை ஒன்று இருந்தது. இந்த சந்தைக்கு வியாபாரிகள் கள்வர்கள் பயம் காரணமாக தனித்தனியாக வராமல் 10, 20 மாட்டுவண்டிகளில் வருவார்கள்.  மறுநாள் பொழுது புலர்ந்தது. தொழுநோயாளி அதிகாலையிலே தன்னை தயார் செய்து கொண்டு, மாட்டு வண்டி வழிதடத்தில் வந்து காத்திருந்தார்.

அப்போது  தூரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வருவது தெரிந்தது. கடந்து செல்வதற்குள் மாட்டு வண்டியை பிடிக்க வயல்  வரப்புக்குள் விழுந்து எழுந்தவாறு உடல் முழுக்க சகதியுடன் முன்னே வந்த மாட்டு வண்டி முன்பு போய் நின்றார். வண்டிக்காரரிடம், ஐயா, ‘‘எனது  நோய் தீர ஒரு கைப்பிடி கருமிளகு தந்து உதவுங்கள்” என பணிவோடு கேட்டார். அப்போது உள்ளேயிருந்த வியாபாரி அவரிடம், ‘‘உங்களுக்கு கருமிளகு  தர எங்களுக்கும் ஆசை தான். ஆனால் இது கருமிளகு அல்ல கரும்பயிறு’’ என்று கூறிவிட்டார்.

மீண்டும் பேசிய போத்தி, “ஐயா, பின்னால் வரும் மற்ற வண்டியிலாவது கருமிளகு இருக்குமா என்றார். எல்லா வண்டியிலுமே கரும்பயிறு தான்”  என்று கூறினார். அதைக்கேட்டு, தொழுநோயாளி ஏமாற்றத்துடன் கோயிலுக்கு திரும்பினார். ‘‘சாஸ்தாவின் சந்நதி முன் நின்று, ‘‘அய்யனே.. நீர்  சொன்னபடி கரு மிளகு வாங்கச் சென்றேன். என்னுடைய போதாத காலம் அந்த வியாபாரிகள் இன்று கருமிளகு கொண்டு வரவில்லை போலும்,  கரும்பயிறு கொண்டு செல்கிறார்கள்’’ என்று மனம்நொந்த படி கூறிவிட்டு, அங்குள்ள புளியமரம் ஒன்றின் கீழ் சாய்ந்து இருந்தார்.

பின்னர் அப்படியே தூங்கி விட்டார். இதனிடையே, வியாபாரிகள் சாண்பத்து(நாசரேத்) சந்தைக்கு சென்றனர். வழக்கத்தை விட அன்று கரு மிளகுக்கு  நல்ல வரவேற்பு. அதை வாங்க வெளிநாட்டு வியாபாரிகள் ஆவலோடு எதிர் பார்த்து காத்திருந்தனர்.   இன்றைக்கு நல்ல விற்பனை என நினைத்த  வியாபாரிகள்  மூட்டைகளை பிரித்தபோது  மிளகு எல்லாம் கரும்பயிராக மாறி இருந்தது. அதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். வண்டியில் நாம் கரு  மிளகை தானே ஏற்றினோம். எப்படி கரும்பயிராக மாறியது என்பது புரியாமல் அவர்கள்  தவித்தனர்.

அப்போதுதான் வியாபாரிகளுக்கு நினைவு வந்தது. வரும் வழியில் ஒரு தொழுநோயாளி நம்மிடம் கருமிளகு கேட்டாரே! அவரிடம் நாம் கரும்பயிறு   என்று பொய் சொன்னதால் தான்  இப்படி மாறி விட்டதோ. ஒருவேளை அந்த தொழு நோயாளி மந்திரவாதியாக இருப்பாரோ என்று கருதினர். உடனே  வந்த வழியே வண்டிகட்டி சென்றவர்கள், போத்தி ஆள் அடையாளம் கூறி, வழியில் எதிர்படுபவர்களிடமெல்லாம் கேட்டனர். அதில் ஒரு வழிப்போக்கன்  நான் வருகிறேன், உங்களோடு அவர் இருக்கும் இடத்தை காட்டுகிறேன் என்று கூறி முன்னே வந்த வண்டியில் ஏறிக்கொண்டான்.

மாட்டுவண்டிகள் அணிவகுத்து “குலசேகரநத்தம் பகுதியில் புளியமரக்காட்டில் சாஸ்தா குடிகொண்டிருக்கும் பகுதிக்கு வந்தது. வியாபாரிகள்,  போத்தியிடம் சென்று வணங்கினர். ஐயா, உங்களை பற்றி தெரியாமல் நாங்கள் பொய் சொல்லிவிட்டோம் எங்களை மன்னிக்க வேண்டும் என்றனர்.  “ஐயோ, ஐயோ, சாஸ்தாதான் என்னை உங்களிடம் சென்று கருமிளகு வாங்கி வருமாறு கூறினார்” என்ற போத்தி, தொடர்ந்து “சரி, நான் இருக்கும்,  இந்த அத்தாந்திர காட்டுக்குள் உங்களை கூட்டியாந்தது யாரு” என்றார். வியாபாரிகள் வழிபோக்கனை காட்டினர்.

அங்கே அவன் இல்லை. அக்கம் பக்கம் திரும்பி பார்த்தனர். காணவில்லை. வழிப்போக்கனாக  வந்தவர் வேறு யாரும் இல்லை. சாட்சாத் சாஸ்தாவே  தான் என்று கூறினார் போத்தி. வியாபாரிகள் தவறை உணர்ந்து, சாஸ்தா முன்பு நெடுஞ்சாண் கிடையாக கிடந்து, ‘‘அய்யனே எங்களை மன்னித்து  விடுங்கள். நாங்கள் உமது மகிமை அறியாமல் தவறு செய்துவிட்டோம். உம்மிடமே கரு மிளகை கரும் பயிறு என்று பொய் சொல்லிவிட்டோம்” என்று   அழுதனர். சாஸ்தாவும் மனமிறங்கி, ‘உங்களது செயலை  மன்னித்துவிட்டேன்.

உங்கள் மூட்டைகள் எல்லாம் மீண்டும் கருமிளகாக மாறி இருக்கும் போய்வாருங்கள்” என அருள்புரிந்தார். வியாபாரிகள்  வேகமாக  சந்தைக்கு சென்று  தங்களது மூட்டைகளை திறந்து பார்த்தபோது கரும்பயிறு மீண்டும் கருமிளகாக மாறி இருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக அதிக விலைக்கு  கருமிளகு விற்பனையானது. இதனால் கூடுதல் லாபம் கிடைத்தது. வீடு திரும்பும் வழியில் அவர்கள் சாஸ்தா  கோயிலுக்கு வந்து  தங்களுக்கு  கிடைத்த லாபத்தொகையை எல்லாம் அவர் முன்பு வைத்தனர்.

“கரு மிளகை கரும்பயிறு ஆக்கிய கரும்புளி ஆண்டவரே எங்களை மன்னித்து அருள வேண்டும். நாங்கள் வியாபாரத்திற்கு செல்லும் போதெல்லாம்  ஒரு மூட்டை கருமிளகை உமக்கு காணிக்கையாக வழங்குகிறோம்” என வேண்டினர். சாஸ்தாவும் அவர்களது வேண்டுதலை ஏற்று ‘‘அப்படியே  ஆகட்டும் என்று அருள் புரிந்தார்.   தொழு நோயாளியின் நோய் தீர்ந்து குணமடைந்தார். கோயிலில் பூஜை செய்வதற்காக அவர் அங்கேயே நிரந்தரமாக  தங்கிவிட்டார். நாளடைவில் அது பெரும் கோயிலாக மாறியது.

பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. வியாபாரத்திற்கு செல்லும் போதெல்லாம் வியாபாரிகள் ஒரு மூட்டை கரு மிளகை காணிக்கையாக  செலுத்தியதன் மூலம் கோயில் பூஜைக்கு தேவையான பொருளுதவி கிடைத்தது.  இதனால் கோயில் மிகவும் பிரபலமானது. கரு மிளகை  கரும்பயிறாக்கிய சாஸ்தா என்பதால்   வியாபாரிகள் கரு மிளகு சாஸ்தா என்றழைத்தனர் என்றும் அது மருவி கரும்புளி சாஸ்தா ஆகி இருக்கலாம்  என்றும் ஒரு பெயர்க்காரணம் கூறப்படுகிறது.  

முத்தாலங்குறிச்சி காமராசு