இம்மையும் மறுமையும் மறுபிறப்பும்!



குறளின் குரல்-96

இம்மை மறுமை குறித்த நம்பிக்கை மக்களிடையே உலகெங்கும் பரவலாக உள்ளது. மரணத்திற்குப் பின் மனிதர்கள் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ  போவார்கள் என்று பல மத நூல்கள் பேசுகின்றன. பிறவி இந்த ஒன்றல்ல, இனியும் பல பிறவிகள் நேரலாம் என்பதும் மதங்களில் சொல்லப்படுகிறது.  'மறுமை என்பது மறுபிறவி அல்ல, அது மறு உலகம். இவ்வுலகம் போல் இன்னோர் உலகம் உண்டு. அது சொர்க்கத்தையும் நரகத்தையும் பகுதிகளாகக்  கொண்ட உலகம்.

அந்த உலகமே மறுமை எனப்படுகிறது’ என்பாரும் உண்டு. தமிழ் இலக்கியம் ஏழ் பிறவி என்றும் எழு பிறவி என்றும் பிறவிகளைப் பற்றிப் பேசுகிறது.  ஏழு பிறவிகள் என்ற பொருளும் மறுபடி மறுபடி எழும் பல பிறவிகள் என்ற பொருளும் சொல்லப்படுகின்றன. ஊழ் பற்றிப் பேசும் திருவள்ளுவர்,  இம்மை பற்றியும் மறுமை பற்றியும் மாறி மாறிப் பிறவிகள் வருவது பற்றியும் கூடப் பேசுகிறார். திருக்குறள் இம்மை மறுமைக் கருத்தை  ஆதரிக்கிறது.

‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’
(குறள் எண் 62)

பண்புடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவிகளிலும் தீவினைப் பயனால் வரும் துன்பங்கள் சென்று சேரா.

‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.’(குறள் எண் 98)

இனிய சொல்லானது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கியவருடைய நட்பை ஏழேழு பிறவியளவும் நன்றியுடையோர் நினைப்பார்கள்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)

ஒரு பிறப்பில் ஆமை கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலன்களையும் ஒருவன் அடக்குவானாகில் அது அவனுக்கு ஏழு பிறப்புகளிலும் சிறப்பு  சேர்க்கும்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 398)

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு அந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் ஏழு பிறவிகளிலும் உதவும் தன்மை உடையது.

‘மனநலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இன நலத்தின் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 459)

ஒருவனுக்கு மன நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனநலத்தால் மேலும் சிறப்புப் பெறும்.

‘ஒருமை செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.’ (குறள் எண் 835)

அறிவற்றவன் தனக்குக் கிடைத்த இந்தப் பிறவியிலேயே அடுத்துவரும் பிறவிகள் தோறும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன்  ஆவான்!

‘இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.’ (குறள் எண் 1042)

இல்லாமை என்கிற பாவி ஒருவனை வந்து சேர்ந்தால் அவன் பிறர்க்குக் கொடுக்க எதுவும் இல்லாதவன் என்பதால் அவனுக்கு மறுமை இன்பம்  கிட்டாது. இல்லாமை காரணமாக அவனுக்கு இம்மை இன்பமும் கிட்டாது.

‘இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.’ (குறள் எண் 1315)

‘இந்தப் பிறப்பில் உன்னை நான் பிரியேன் என்று என் காதலியிடம் காதல் மிகுதியால் சொன்னேன். அப்படியானால் அடுத்த பிறவியில் பிரிவேன்  என்றெண்ணி அவள் கண் கலங்கினாள்!’ என்கிறான், குறள் காட்டும் தலைவன். இவ்விதம் இம்மையைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் மறுபிறவி  பற்றியும் நம் சிந்தனையைத் தூண்டுகிறது வள்ளுவம். மானுட உடலுடன் உயிரோடு யாரும் சொர்க்கத்திற்குப் போகமுடியாது. ஆனால், திரிசங்கு என்ற  மன்னன் தன் மானிட உடலோடு சொர்க்கத்திற்குப் போகவேண்டும் எனஆசைப்பட்டான்.

அதைச் சாதித்துத் தருமாறு பல முனிவர்களிடம் வேண்டினான். எல்லோரும் அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இறுதியில்  விஸ்வாமித்திரரிடம் வந்து சேர்ந்தான். விஸ்வாமித்திரர் அவனுக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்தார். அதன்பொருட்டு விசேஷ யாகம்  செய்யலானார். யாகத்தின் நிறைவில் ‘திரிசங்கு! நீ சொர்க்கம் போ!’ என அவர் கம்பீரமாக உத்தரவிட்டார். என்ன ஆச்சரியம்! திரிசங்கு மானிட  உடலோடு விண்ணில் சொர்க்கத்தை நோக்கிச் செல்லலானான்!

விஸ்வாமித்திரரின் தவ ஆற்றலால் நிகழ்ந்த அந்த விந்தையைப் பார்த்து முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆச்சரியப் பட்டனர். தேவர்களின் அரசனான  தேவேந்திரன், மானிட உடலுடன் சொர்க்கம் வர இயலாது எனக் கூறி சொர்க்கத்திற்கு வந்த திரிசங்குவை அங்கிருந்து கீழே பிடித்துத் தள்ளினான்.  தடதடவென்று பூமியை நோக்கி விழத் தொடங்கிய திரிசங்கு, ‘முனிவர் பெருமானே! என்னைக் காப்பாற்றுங்கள்!’ எனக் கதறினான். பார்த்தார்  விஸ்வாமித்திரர். ‘திரிசங்கு, நில் அங்கேயே!’ என உரத்த குரலில் கட்டளையிட்டார்.

முனிவரின் தவ ஆற்றலால், திரிசங்கு கீழேவிழாமல் அந்தரத்திலேயே நிற்க முடிந்தது. திரிசங்குவைச் சுற்றி இன்னொரு சொர்க்கத்தை  உருவாக்கலானார் விஸ்வாமித்திரர். அப்படி உருவாக்கப்பட்டதுதான் திரிசங்கு சொர்க்கம். பின்னர், தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் முனிவரிடம்  மன்னிப்புக் கேட்டதாக மேலும் வளர்கிறது கதை. ஏற்கெனவே விண்ணில் இருந்த சொர்க்கத்திற்கும் இந்த மண்ணுக்கும் இடையில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட இன்னொரு சொர்க்கமே திரிசங்கு சொர்க்கம். அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இருபக்க வாய்ப்புக்களையும் இழந்து  திண்டாடும் நிலையைத் திரிசங்கு நிலை என்று சொல்லும் மரபு இருக்கிறது.
 
*சொர்க்கத்திற்குப் போனவர்கள் பின்னர் மண்ணுலகில் வாழும் தம் புதல்வர்கள் முன் மறுபடி தோன்றுவார்களா? மாட்டார்கள். ஆனால், அபூர்வமான  சந்தர்ப்பங்களில் அப்படி அவர்கள் தோன்றுவதும் உண்டு. இறந்த தசரதன், ராமாயணத்தில் அக்னிப் பிரவேச நிகழ்ச்சிக்குப் பின் இலங்கைப்  போர்க்களத்தில் ஆகாயத்தில் மறுபடி தோன்றுகிறான். தன் புதல்வர்களான ராம லட்சுமணர்களுக்கும் தன் மருமகளான சீதாதேவிக்கும் ஆசி  வழங்குகிறான். ராவண வதம் நிகழ்த்தி வெற்றிபெற்ற ராமனை வாழ்த்துகிறான்.

ராமனிடம் இரண்டு வரங்களை இப்போது என்னிடம் கேட்டு வாங்கிக்கொள் என்கிறான். உயிரோடு இருக்கும்போது இருந்த இரண்டு வரம் கொடுக்கும்  குணம், இறந்த பின்னும் போகாது போலிருக்கிறது! கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களால்தானே ராமன் கானகம் வரும் அளவு நிலைமை  மாறியது! அப்படியிருந்தும் வரம் கொடுக்கும் புத்தி மட்டும் தசரதனிடமிருந்து போகவில்லையே! கைகேயியைத் துறப்பதாகச் சொல்லி உயிர்நீத்த  தசரதர் மறுபடி கைகேயி தன் மனைவி என அறிவிக்க வேண்டும் என்றும் அவ்விதமே பரதனைத் தன் மகனாக ஏற்க வேண்டும் என்றும் ராமன் வரம்  பெறுவதாக ராமாயணம் பேசுகிறது....

‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப ...’
 
என்று அகநானூறு (66 ஆம் பாடல்) மறுமை பற்றிப் பேசுகிறது.

‘இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே ...’

என குறுந்தொகையின் 49ஆம் பாடல் ‘இந்த வாழ்வு முடிந்து மறுமையிலும் கூட நீதான் என் கணவன், நான்தான் உன் மனைவி!’ என்று சொல்லும்  தலைவியைச் சித்தரிக்கிறது. ‘மறு உலகத்தைப் பற்றிப் பேசாமல் இம்மையில் எல்லாச் சுகங்களையும் அனுபவியுங்கள் என்று சொல்பவர்கள் நறுமணம்  கொண்ட நெய்யில் செய்து பாகில் ஊறிய அடையை உண்ணக் கொடுக்காமல், செங்கல்லை உண்ணக் கொடுப்பவர்களைப் போன்றவர்கள்!’ என்கிறார்  மூன்றுறையரையனார் தம் பழமொழி நானூறு என்ற நூலில்.

‘மறுமையொன் றுண்டோ மனப்பட்ட
எல்லாம்
பெறுமாறு செய்ம்மினென் பாரே -
நறுநெய்யுள்
கட்டை யடையைக் களைவித்துக்
கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.’

கடல்நீர் அளவு அதிகமிருந்தாலும் அதை மக்கள் தேடிப் பருகுவதில்லை. சிறுகிணற்றின் ஊற்று நீரையே தேடிப் பருகுவார்கள். எனவே, மறுமை  இன்பத்தை நாடி அறம் செய்யாதாரின் செல்வத்தை விட, சான்றோரின் வறுமையே போற்றத்தக்கது என்கிறது நாலடியார் வெண்பா.
 
‘எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழிநல் குரவே தலை’ ...(நாலடியார் 275)

பிறர் தங்களைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்வதோடு, இதன் காரணமாக மறுமையில் எரியும் நரகத்தில் இவர்கள் வீழ்ந்து துன்புறுவார்களே  என்று இரங்குவதும் சான்றோர் இயல்பு என்கிறது நாலடியாரில் வரும் இன்னொரு வெண்பா.

 ‘தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றி மற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்!’ (நாலடியார் 58)

சிலப்பதிகாரத்தில் உடலோடு கண்ணகி சொர்க்கம் போனதாகச் சொல்லப்படுகிறது. தன் மார்பகத்தைத் திருகி எறிந்து மதுரையை எரித்த கண்ணகி  பின்னர், ஒருமுலை இழந்த திருமா பத்தினியாக ஒரு வேங்கை மரத்தின் அடியில் வந்து நிற்கிறாள். தேவேந்திரனும் தேவர்களும் அவள்மீது பூமாரி  பொழிகின்றனர். வான ஊர்தியில் கோவலன் வருகிறான். கண்ணகியை அவன் வானவூர்தியில் ஏற்றிக் கொள்ள அது விண்ணகம் செல்கிறது.

‘வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர் வந்தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழல் கண்ணகி தானென்!’

என்பன சிலப்பதிகார வரிகள். ஏழேழ் பிறவிகளிலும் கண்ணனையே அடைய வேண்டும் என்று திருப்பாவையில் வேண்டுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

‘சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!’

தமது ‘புல்லாய்ப் பிறவி தர வேணுமே!’ என்ற கீர்த்தனையில், மறுபிறவியில் புல்லாகவும் இல்லையேல் கல்லாகவும் பிறக்க ஆசைப்படுகிறார்  கிருஷ்ண பக்தரான ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்.

‘புல்லாய்ப் பிறவி தர வேணுமே- கண்ணா!
புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் பிருந்தாவன மீதிலொரு
புல்லாய்ப் பிறவி தர வேணுமே!
புல்லாகிலும் நெடுநாள் நில்லாது ஆதலினால் ஒருசிறு
கல்லாய்ப் பிறவி தர வேணுமே!’

கவியோகி சுத்தானந்த பாரதியார் ‘தூக்கிய திருவடி துணையென நம்பினேன் துரிய நடராஜனே!’ என்ற தம் கீர்த்தனையில்,

‘எத்தனையோ பிறவி எடுத்தெடுத்து இளைத்தேன்
இருவினைப் பயன்களை எய்தி எய்திக் களைத்தேன்,
சித்தம் இனி உன்மேல் வைத்திருக்க நினைத்தேன்
திக்கு வேறில்லை ஐயா! தீனரைக் காக்கும் மெய்யா!’

- என்று பாடி, மனிதர்கள் பலப்பல பிறவிகள் எடுப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றார். ‘மரணத்திற்குப் பிறகு மனிதனுக்கு என்ன ஆகிறது?’ என்ற  கேள்வி குறித்த ஆய்வுகள் தொடர்ந்து உலகெங்கும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. காலந்தோறும் பலர் பலவிதமாக இதற்கு விளக்கங்கள் கொடுத்து  வருகின்றனர். கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாத புத்த மதம் கூட மறுபிறப்பை ஏற்கிறது. பிளேட்டோ, பித்தகோரஸ், லியர்னாடோ டாவின்சி  போன்ற வெளிதேசப் பிரமுகர்கள் மறுபிறவி குறித்து ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

அன்னிபெசன்ட் அம்மையார் மறுபிறவித் தத்துவம் குறித்து ஆராய்ந்து, ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற தலைப்பில் ஓர் அரிய புத்தகத்தை எழுதியுள்ளார்.  வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான ஐயான் ஸ்டீஃபன்சன் என்பவர், போனபிறவி குறித்துப் பேசிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மனிதர்களை நேரில் கண்டு பேசி ஆராய்ந்தார். அவர்களின் கூற்றில் உண்மை இருப்பதாக அறிவித்த அவரது ஆய்வு, மறுபிறவித் தத்துவத்திற்கு  வலுவூட்டியிருக்கிறது. ‘மரணத்திற்குப் பின் மனிதர் நிலை’ என்ற தலைப்பில் தமிழறிஞர் மறைமலையடிகள் ஒரு நூல் எழுதியுள்ளார்.

மரணத்திற்குப் பின்னான மனிதர் நிலை பற்றி ஆராயும் நோக்கத்திலேயே தியசாபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபையை பிளாவட்ஸ்கி  அம்மையார் தோற்றுவித்தார். ‘சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ என்ற குறுநாவல் உள்படப் பல சிறந்த புனைகதைகளைச் சிற்றிதழ்களில் எழுதிப்  புகழ்பெற்றவர் காலஞ்சென்ற எழுத்தாளர் சம்பத். அவர் எழுதிய ‘இடைவெளி’ என்ற தமிழின் முக்கியமான நாவலும் மரணத்தைப் பற்றியே விசாரணை  செய்கிறது. இம்மை, மறுமை, மறுபிறவி போன்றவை பற்றிய கருத்தாக்கங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன.

திருவள்ளுவர் காலம்தொட்டுத் தமிழர்களிடம் இவை பற்றிய நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ளன.... ஒரு கூட்டத்தில் வாகீச கலாநிதி கி.வா.  ஜகந்நாதனைப் பேச அழைத்திருந்தார்கள். கொடுக்கப்பட்ட தலைப்பு ‘இம்மையும் மறுமையும்’ என்பது. கி.வா.ஜ. ‘பெரியோர்களே!’ என்று பேச்சைத்  தொடங்கினார். ஒலிபெருக்கியில் ஏதோ பழுது. அது கிறீச்சிட்டது. கி.வா.ஜ. பேச்சை நிறுத்தினார். வேறோர் ஒலிபெருக்கி கொண்டுவந்து வைத்தார்கள்.

‘தாய்மார்களே!’ என்றார் கி.வா.ஜ. என்ன சங்கடம்! அந்த இரண்டாம் ஒலிபெருக்கியும் பழுது பட்டிருந்தது. அதுவும் கரகரவென்றது. ‘ஒலிபெருக்கியே  வேண்டாம், நான் சப்தம் போட்டுப் பேசுகிறேன்!’ என்று சொன்ன கி.வா.ஜ. தம் பேச்சை இப்படித் தொடங்கினார்: ‘இம்மையும் மறுமையும் என்ற  தலைப்பில் பேச வந்தேன். எனக்கு இம் - மைக்கும் பயன்படவில்லை. மறு - மைக்கும் பயன்படவில்லை!’ கூட்டத்தினரின் கைதட்டல் விண்ணைப்  பிளந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

(குறள் உரைக்கும்)
திருப்பூர் கிருஷ்ணன்