உலகெங்கும் நன்மையொளி பரப்பும் திருவிளக்கு பூஜை!



திருச்சி, துறையூரிலுள்ள ஓங்காரக் குடில் கடந்த தைப்பூசத்தன்று விசேஷமான தெய்வீகக் களையுடன் திகழ்ந்தது. அன்றைய தினம் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் அந்தப் பகுதியே ஆன்மிக ஒளியில் பிரகாசித்தது. 1008 பெண்மணிகள் அந்த பூஜையில் கலந்துகொண்டு அந்தக் கூட்டுப் பிரார்த்தனையை மேற்கொண்டார்கள். தங்கள் சொந்த நலன் மட்டுமல்லாமல், உலகோர் அனைவருக்கும் அவரவர் பிரச்னைகள் எல்லாம் நீங்க அருள்புரியுமாறு அந்த பூஜையின்போது அவர்கள் மானசீகமாக வேண்டிக்கொண்டார்கள் என்றால், அது, ஓங்காரக் குடில் ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம் நெறிப்படுத்திக் கொடுத்த சிறப்பான வழிபாட்டுமுறைதான் காரணம்.

உடல்நலம் தேறுமா, நீண்டநாள் நோய் தீருமா, படிப்பில் முன்னேற்றம் உண்டா, எந்த உயர்கல்வியைத் தேர்வு செய்யலாம், வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது கைகூடும், காதல், கல்யாணத்தில் முடியுமா, குழந்தைப் பேறு கிட்டுமா, மனம் விலகிய கணவன் - மனைவி ஒன்று சேருவோமா, குடும்ப ஒற்றுமை மேம்படுமா, கடன் தீருமா, சொத்துப் பிரச்னை சாதகமாகுமா, வீடு கட்டுவேனா, வாகனம் வாங்குவேனா, தொழில், வியாபாரத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிக்கல்கள் விலகுமா - வளர்ச்சி உண்டா, அக்கம் பக்கத்தாருடனான பிணக்குகள் நீங்குமா, இறை நாட்டம் ஏற்படுமா, பில்லி-சூனிய-ஏவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு விலகுமா, நீத்தார் கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்டிருக்கக்கூடிய உபத்திரவங்கள் மறையுமா, நிம்மதியான இறப்புக்கு வழி உண்டா - இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படக்கூடிய எல்லாவகை பிரச்னைகளையும் தீர்க்கவல்ல அற்புத வழிபாடாக அந்தத் திருவிளக்கு பூஜை அமைந்தது.

இதில் நெகிழ்ச்சியூட்டும், குறிப்பிடத்தகுந்த அம்சம், இந்தப் பூஜையில் கணவரை இழந்தவர் களும் பங்கு கொண்டதுதான்! இந்த பூஜையில் கலந்துகொண்டவர்கள் அவரவர் தமக்கென்று விளக்கு மட்டும் கொண்டுவர வேண்டும் என்பதும் திரி, எண்ணெய், மலர்கள் எல்லாம் ஆசிரமத்தில் வழங்கப்படும் என்பதும், இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் பக்தர்கள்பால் ஓங்காரக் குடிலுக்கு இருக்கும் தெய்வீக அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

தினமும் மூன்று வேளை அன்னதானம், ஆறறிவு படைத்த மனிதர் மட்டுமல்லாமல், உலகத்து ஜீவராசிகள் அனைத்தும் நல்வாழ்வு வாழ மேற்கொள்ளும் ‘ஜீவ தயவு’ தியானம், மாணவர்களுக்கான ஒழுக்க நெறி போதனை, அனைவருக்கும் அன்னதான பிரசாதம், குடிநீர் வழங்குதல், பசுக்களைப் பராமரித்தல், ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்துதல், ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவுதல் போன்ற அனைத்து திருப்பணிகளும் மிகவும் பொறுப்புடன் ஓங்காரக் குடிலில், வழக்கம்போல மேற்கொள்ளப்படுகின்றன.

- நடேசன்