ஏழு பிராகாரக் கோயில்



பெருமாள் கோயில்களில் திருவரங்கம் ஏழு பிராகாரங்களைக் கொண்டது. அது போல் சிவாலயங்களில் ஏழு பிராகாரங்கள் கொண்டது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில். இக் கோயிலில் 7 கோபுரங்கள், 7 பிராகாரங்கள், 7 கிணறுகள் என்று உள்ளன. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி தனியாக அம்பிகையுடன் சாம்ப தட்சிணாமூர்த்தி என்னும் பெயரில் காட்சி அளிக்கிறார்.

முழு தரிசன பலன்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள், முதலில் புஷ்கரணி தீர்த்தத்தின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் ஆதிவராஹ மூர்த்தியை தரிசித்த பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு தரிசனம் செய்தால்தான் முழு பலன் கிடைக்கப் பெறும்
என்பது ஐதீகம்.

கண்ணொளி தருபவர்

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்தில் வலப்புறம் மலையடிப்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. அங்குள்ள குளத்தில் நீராடி, கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமமிட்டு பூஜித்து ஆரத்தி காட்ட அறுவை சிகிச்சை செய்து பார்வை சரிவர கிடைக்காதவர்களுக்கும் பரிபூரண பார்வை கிட்டும் என்பது அனுபவ நம்பிக்கை.

பெருமாள் சாஸ்தா

திருநெல்வேலி, ஆழ்வார்குறிச்சியில், ராம நதிக்கரையில் ‘காக்கும் பெருமான் சாஸ்தா’ கோயில் கொண்டிருக்கிறார். ராம பிரானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும். இந்த ஆற்றங்கரையில் பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா விளங்குவதால் இவருக்கு மகிமை அதிகம். சபரிமலை ஐயப்பன் கோயில் சிலை போலவே இவரது சிலையும் காணப்படுகிறது. எப்படிப்பட்ட துன்பத்தையும் இவரது கருணைப் பார்வை விரட்டிவிடும்.

தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன்