சிவராத்திரி மகத்துவம்!



பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முயலுகையில் வாசுகி என்ற பாம்பு வலி தாங்காமல் நஞ்சு கக்கியது. நஞ்சு பாதிப்பு ஏற்படுத்திடாமல் காத்திட சிவன் தானே அந்த நஞ்சை விழுங்கினான். நஞ்சினால் சிவனுக்கு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதென்று தேவர்கள் அன்றைய இரவு முழுவதும் கண்விழித்து சிவனிடமே வேண்டினர். அந்த இரவே சிவராத்திரி எனப்படுகிறது.

நித்திய சிவராத்திரி என்பது நாள்தோறும் இரவு சிவராத்திரி என்பதாகும். மாதத்திற்கு இருமுறை வருவது பட்ச சிவராத்திரியாகும். மாதத்திற்கு ஒரு முறை வருவது மாத சிவராத்திரியாகும். யோக சிவராத்திரி என்பது யோகியர் தவவலிமையால் உருவாக்கிக் கொள்வதாகும். மகா சிவராத்திரி என்பது ஆண்டுக்கொரு முறை மாசி மாதத்தில் வருவதாகும்.

சிவராத்திரி மகிமையை திரு நந்திதேவர் உபதேசிக்க சூரியன், முருகன், மன்மதன், யமன், இந்திரன், அக்னி மற்றும் குபேரன் முதலானோர் அனுஷ்டித்து பலன் பெற்றனராம். மகாவிஷ்ணு சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து திருமகளையும் சக்ராயுதத்தையும் பெற்றதாக புராணம் கூறும். பிரம்மன் இந்த விரதத்தை முறைப்படியாக கடைப்பிடித்து, சரஸ்வதியை மனைவியாக அடைந்தாராம்.

ஒப்பற்ற மங்கலப் பொருளாகத் திகழும் வில்வம், மருத்துவ மகத்துவமும் நிறைந்தது. சிவராத்திரி காலத்தில் சிவபூஜைகளில் அர்ச்சனைப் பொருளாகப் பயன்படுவது வில்வமே. சிவனாருக்கு விருப்பமான வில்வ தளங்களில் மகாலட்சுமி உறைந்திருக்கிறாள். எனவே சிவனாருக்கே உரிய திருவாதிரை நட்சத்திர நாளில்... லட்சுமியுடன் இருக்கும் ஸ்ரீவேங்கடாஜலபதிக்கு வில்வ தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

முதல் ஜாமம்: பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், பச்சைப் பயிறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம். இரண்டாம் ஜாமம்: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக் கற்பூரம், பன்னீர் சேர்த்து அடைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வ அர்ச்சனை, பாயச நிவேதனம், யஜுர்வேத பாராயணம்.

மூன்றாம் ஜாமம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வ அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம். நான்காம் ஜாமம்: கரும்பு சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம். அதர்வண வேத பாராயணம்.

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு திதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்கென ஒதுக்கப்பட்டது இறுதி திதியான சதுர்த்தசி. சிவன் அழிக்கும் தெய்வம். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி ‘பெரிய இரவு’ என்று சொல்லப் படுகிறது. அன்றே மகாசிவராத்திரி
அனுஷ்டிக்கப்படுகிறது.

- நந்தியம்பெருமான்