ஜெய் ஹனுமான்!



மகாபாரதம் - 57

பீமசேனன் தனியாக இருக்கும்பொழுது திரௌபதி அவனுக்கு அருகே போய் அமர்ந்து கொண்டாள். பீமன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். ‘‘சௌகந்திக மலர்கள் வேண்டுமென்று கேட்டேனே, மறந்து விட்டதா’’ என்று சற்று கேலியாக சிரிப்போடு வினவினாள். ‘‘இல்லை. மறுபடியும் ஏதேனும் காற்று சுழன்று அடிக்க அந்த மலர்கள் இங்கு வராதா என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று வானத்தைப் பார்த்தான்.

திரௌபதி வாய்விட்டு சிரித்தாள். ‘‘இல்லை. நீங்கள்போய் அந்த மலர்களை பறித்து வரவேண்டும். மனிதருக்கு ஆகாத மலர்களா, அந்த மரக்கன்றுகள் நாம் எடுத்து வர முடியாதா. அஸ்தினாபுரத்தில் நடக் கூடாதா. அது என்ன கந்தமாதன பர்வதத்திற்கும், கந்தமான பர்வதத்தின் அரசனான குபேரனுக்கு மட்டுமே சொந்தமானதா. அங்கு மனிதர்கள் போக முடியாதாமே. மலர்களும் கூடாது.

மனிதர்களும் மேலே ஏறக்கூடாது. என்ன அற்புதமான இடம். பூமி மனிதர்களுக்குச் சொந்தமானதுதானே. கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? மீறி நீங்கள் போனால் தடுத்து விடுவார்களா என்ன?’’ அவனை உத்வேகப்படுத்துவதுபோல திரௌபதி பேசினாள். பெரிய குளக்கரையில் அமர்ந்திருந்த பீமசேனன் அந்தக் கணமே எழுந்திருந்தான். நேரே தமையனிடம்போய் நமஸ்கரித்தான்.

‘‘திரௌபதிக்கு விருப்பமான சௌகந்திக மலர்களை செடியோடு எடுத்து வர நான் கிளம்புகிறேன். ஆசிர்வதிக்க வேண்டும்’’ என்றான். அவன் சொன்னது விண்ணப்பமாக இல்லாது அவன் விருப்பமாக இருந்தது. அந்த த்வனியில் இருந்த அவசரத்தை அவர் புரிந்து கொண்டார். திரௌபதி பிடித்துத் தள்ளியிருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டார்.

‘‘சரி. போய் வா.’’ என்று சொன்னார். பறவைகள் அலகோடு அலகிட்டு குலவின. வண்ணத்துப் பூச்சிகள் இடம் மாறின. பெரிய சிவப்பு மலரொன்று மரத்திலிருந்து நழுவி பீமனின் தோளைத்தொட்டு கீழே விழுந்தது. எல்லாம் நல்ல சகுனங்கள்தானே என்று அவன் மனம் நினைத்தது. அவன் கையை வருடி நெஞ்சில் வைத்துக் கொண்டார். ‘‘மறுபடியும் போய் வா’’ என்றார்.

பீமன் மரியாதையாக பின்னடைந்தான். திரும்பினான். கந்தமாதன பர்வதத்தின் உச்சியை நோக்கி நடக்கத் துவங்கினான். உயரமான மலைகளாலும், அழுத்தமான கொடிகளாலும் அந்த மலை பின்னப்பட்டிருந்தது. மனிதர்கள் நுழைய முடியாதபடி இறுக்கமாக இருந்தது. சிறிய இடைவெளியில் மிருகங்கள் புகுந்து உலாவின. மனிதர்கள் வரவு கண்டு பட்சிகள் இடம் மாறின. உரக்கக் குரல்கொடுத்தன.

எழுந்து அடங்கின. பாறைகள் பிடித்து பீமன் ஏற வேண்டியதாயிற்று. நீலவண்ணமும், பொன் வண்ணமும், சிவப்பு வண்ணமும் உடையதான பாறைகள் பல்வேறுவிதமான தாதுக்களை கொண்டவை. அவன் உடம்பில் பட்டு அவனின் உண்மையான நிறத்தை மாற்றியது. ஏதோ கூத்துக்கு வேடம் கட்டியவன் போல் பல்வேறு வண்ணத்தில் இருந்தான். கைகளே இத்தனை வண்ணத்தில் இருந்தால் முகம் என்ன கதியாகியிருக்கும் என்று நினைத்து சிரித்தான்.

அருகேதான் இருக்கிறது சிகரம் என்று நினைத்தது, நடக்க நடக்க விலகிப் போயிற்று. மலை மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது என்பது தெரிந்தது. மலையைச் சுற்றி மேகங்கள் தவழ்ந்து வர, அந்த மலைக்குச் சிறகு முளைத்ததுபோல் இருந்தது. வினோதமான பறவைகளையும், மிருகங்களையும், குளிரைத் தாங்கும் கரடிகளையும், மிகப்பெரிய இலைகளையுடைய தாவரங்களையும், கனமான கோரைப்புற்களையும், வழுக்குப் பாறைகளையும் சாமர்த்தியமாகத் தாண்டி பீமசேனன் ஒரு பாதையை அடைந்தான்.

தடாகங்களில் அப்ஸர ஸ்திரீகள் ஜலக்கீரிடை செய்து கொண்டிருந்தார்கள். பீமன் வருகையைக் கண்டதும் அவர்கள் நடுங்கி மரங்களின் பக்கம் ஒடுங்கிக் கொண்டார்கள். சுத்த வீரனான பீமசேனன் அவர்களைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நடந்தான். சிகரத்தின் ஒரு பகுதிக்கு வந்ததும் கீழே தான் வந்த வழியைப் பார்த்து சந்தோஷமடைந்தான். தொடை தட்டினான். பெரிய சங்கநாதம்போல தன் குரலை உயர்த்தி கூ..வென்று கூவினான்.

கந்தமாதன பர்வதம் அதிர்ந்தது. மிருகங்கள் நாலாபக்கமும் ஓடின. பட்சிகள் எழுந்து அடங்கின. மரங்கள் சலசலத்தன. அங்கே வசிப்பவர்கள் முன்னும் பின்னும் அலைவது தெரிந்தது. கந்தமான பர்வதத்தின் சுகத்தை எண்ணி பொறாமைப்பட்டும், குபேரனை எண்ணி கோபப்பட்டும் அவன் மறுபடி மறுபடி தன்னுடைய ரெளத்திர குரலை எழுப்பினான். கந்தமாதன பர்வதத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏரிக்கு அருகே ஒரு அடர்ந்த வாழைத்தோப்பு இருந்தது. அந்த வாழைத்தோப்புக்கு நடுவே அமைதியாய் ஹனுமான் அமர்ந்திருந்தார்.

தம்பி வந்து விட்டான். என் சகோதரனை பார்க்கப் போகிறேன். குரலே இத்தனை கம்பீரமாக இருக்கிறதே, அவன் உருவம் எப்படி இருக்கும் என்று நினைத்து புன்னகை செய்தார். எழுந்திருந்தார். ேதாள்கள் அகன்று, இடுப்பு குறுகி, கால்கள் திடமாக தரையில் ஊன்ற, வால் தரையில் புரண்டு வர, சிரித்த முகத்தோடு, முகம் நிறைய தேஜஸ்ஸோடு, கழுத்தில் உள்ள மணிமாலைகள் அசைந்தாட அவர் வாழைத்தோப்புக்கு அருகேயுள்ள வழியில் படுத்துக் கொண்டார்.

அது ஒரு பாதையாக இருந்தது. தேவலோகத்திற்கு போகும் வழியாக இருந்தது. இந்த இடத்திற்கு மேல் பீமசேனனை அங்கே நகர விடக்கூடாது என்ற எண்ணத்ேதாடு வாழைத்தோப்புக்கு அருகே இருந்த பாறையில் உட்கார்ந்து கொண்டார். பீமசேனன் மலைச்சரிவில் வேகமாக ஏறி வருவது தெரிந்தது. எழுந்து நின்று பார்த்தார். அடேயப்பா... இந்த உயரத்தை, இந்தச் சரிவை இந்த மனிதன் எத்தனை வேகமாக கடக்கிறான். எவ்வளவு திடம் அவனுக்கு. எவ்வளவு அகலமான தோள்கள்.

எவ்வளவு உறுதியான கைகள். எவ்வளவு அழுத்தமான நடை. எவ்வளவு சிலிர்ப்பான தலைமுடி. அவன் மூச்சு விடும் சத்தம் இதோ மேலே இந்த உச்சி வரை கேட்கிறது. சாதாரண மனிதன் விடும் மூச்சு இத்தனை அழுத்தமாக இராது. இவன் க்ஷத்திரியன். யுத்தம் செய்து பழக்கப்பட்டவன். மிகப் பெரிய நுரையீரல்களை கொண்டவன். மூச்சு அடக்கி, மூச்சு விட்டு பழக்கமுள்ளவன். இவன் மூச்சுக் காற்று வெகு தூரம் போய் அங்குள்ள இலைகளை, செடிகளை அசைக்கும். அவ்வளவு வலிவு மிகுந்தது.

மேலே வரட்டும். மடக்கி விசாரிப்போம் என்று ஒரு நாடகத்திற்குத் தயாரானார். பீமசேனன் பாதை அடைந்தான். இந்தப் பாதை வழியாகப் போனால் சௌகந்திக மலரை பறித்து விடலாம் என்று அவன் மூக்கு சொல்லியது. மற்ற வாசனைகளுக்கு நடுவே அந்த சௌகந்திக மலரின் வாசனையை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான். அருகேதான் அந்த மலர்களின் மரங்கள் இருக்க வேண்டும். இந்த ஏரி ஓரமாக பிடித்து விடலாம். வாழைத்தோப்பும் அழகாக இருக்கிறது.

அவன் விரைவாக நடந்தான். மேலேறி பள்ளத்தில் இறங்கியதும் வழியில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. அட, இது என்ன பாதையின் குறுக்கே படுத்திருக்கிறார்களே, அவன் அருகே போய் நின்றான். சாதுவா, முனிவரா, ரிஷியா, அந்தணரா, இல்லை வேறு ஏதேனும் விலங்கா. வால் இருக்கிறது. இது குரங்காக இருக்க வேண்டும். ஆனால், உடை உடுத்திக் கொண்டிருக்கிறது. இது நாகரீகம்மிக்க ஒரு விலங்காக இருக்க வேண்டும். பேசத் தெரிந்திருக்க வேண்டும். ‘ச்சூ போ’ என்று விரட்டாது. வேறு விதமாக இதை அடக்கி பார்க்க வேண்டும்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. அருகே போய் கை தட்டினான். ஹனுமார் புரண்டு படுத்தார். மிக வயதான குரங்கு. முப்புரிநூல் வேறு இருக்கிறது. முகத்தில் தெளிவு இருக்கிறது. வேதம் படித்ததுபோல் இருக்கிறது. நிச்சயமாக பேச்சுத்திறன் இருக்கும். ஆகவே, நாம் பேசுவது புரியும். கை தட்டுவது வயதானவருக்கு செய்யும் அவமரியாதை. நாம் பிரியத்துடனே நடந்து கொள்வோம். பீமசேனன் தனது இயல்பான, இனிமையான குணத்தோடு மறுபடியும் குனிந்து ஹனுமாரைப் பார்த்தான்.

‘‘பெரியவரே சற்று எழுந்திருங்கள். நான் இந்த வழியே போக வேண்டும்.’’ அவர் எழுந்திருந்து மல்லாக்க படுத்து ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை மடித்து ஊன்றிய முழங்காலில் வைத்தார். ஒரு சுகாசனம்போல இருந்தது. கைகளை பின்னுக்கு தள்ளிக் கொண்டார். தலை மேட்டில் இருந்தது. கைகள் புல் தரையில் இருந்தது. உடம்பு பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. வால் நீண்டு பாதையின் மறுபக்கம் படர்ந்திருந்தது.

‘‘என்னப்பா? நிதானமாகக் கேட்டார்.’’ ‘‘இந்த வழியே போக வேண்டும்.’’ ‘‘போ.’’ ‘‘மறித்துக் கொண்டிருக்கிறீர்களே...’’ ‘‘அப்படியா. வழியிலா படுத்துக் கொண்டிருக்கிறேன்.’’ ‘‘ஆமாம்.’’ ‘‘எனக்கு வயதாகி விட்டதப்பா.’’ ‘‘தெரிகிறது.’’ ‘‘நகர முடியவில்லை.’’ ‘‘அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.’’

‘‘என்னை தாண்டிப் போகக் கூடாதா.’’ ‘‘இல்லை. அது தவறு. எந்த ஒரு உயிரினத்தையும் தாண்டக் கூடாது. உங்களைப் பார்த்தால் படித்தவர்போல் தோன்றுகிறீர்கள். உங்களை எந்த விதத்திலும் அவமரியாதை செய்ய நான் விரும்பவில்லை. தயவுசெய்து சற்று நகர்ந்து இடம் கொடுங்கள். சிறிது இடம் கொடுத்தால் கூடப் போதும். நான் தாண்டிப்போய் விடுவேன்.’’ ‘‘கை, கால்களை அசைப்பது கூட கஷ்டமாக இருக்கிறது. நீ பேசுவதும் எனக்கு தெளிவாக கேட்கவில்லை.

இருந்தாலும் வழிவிடு என்று கேட்கிறாய். எனக்கு வழி விட ஆசைதான். இயலவில்லை. அதனால்தான் தாண்டிப் போகச் சொல்கிறேன்.’’ ‘‘நிச்சயம் செய்ய மாட்டேன்.’’ ‘‘அப்பொழுது ஒன்று செய்.’’ ‘‘என்ன?’’ ‘‘இந்த வால் பகுதியை எடுத்து கொஞ்சம் நகர்த்தி விட்டால் உனக்கு ஒரு பாதம் வைக்கின்ற இடம் கிடைக்கும்.’’ ‘‘ஆமாம்.’’ ‘‘வாலை நகர்த்தி விட்டுப் போயேன்.’’ ‘‘அது சரி. வாலைக்கூட நகர்த்த முடியவில்லையா.’’

‘‘முடியவில்லையப்பா.’’ ‘‘இத்தனை வயதான காலத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்.’’ ‘‘வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.’’ அவர் மெல்லிய புன்னகையோடு சொன்னார். ‘‘இப்படி வழியில் படுத்துக் கொண்டிருப்பது தான் வாழ்க்கையா. நன்றாக இருக்கிறது நீங்கள் பேசுகிற லட்சணம். எங்கே இருக்கிறது உங்கள் வால்.’’ ‘‘அதோ, புல் தரையில் படர்ந்து கிடக்கிறதே.’’ பீமன் இடக்கையால் எடுத்தான். வால் தரையிலிருந்து நகரவில்லை. இன்னும் உள்ளே விரல் விட்டு தூக்கினான்.

நகர்த்தக்கூட முடியவில்லை. சற்று குனிந்து இடக்கையால் வேகமாக இழுத்தான். ஒரு சிறிய அசைவுகூட இல்லை. இரண்டு கைகளாலும் வாலைப் பிடித்து தூக்கினான். அப்பொழுதும் முடியவில்லை. பலம் கொண்ட மட்டும் வாலை பிடித்து இழுத்து மேலே தூக்க முயற்சித்தான். வால் பூமியோடு இருந்ததே தவிர, அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. மறு படியும் முழு பலத்தோடு தோள்களுக்குள் தன்னுடைய வலிவை கொண்டு வந்து மூச்சு அடக்கி, நுரையீரலை பெருக்கி, இருதயத்தை நிறுத்தி வலிவோடு தூக்கினான்.

ஆனால், வால் சிறிதும் அசையவில்லை. பயந்தான். பின்னடைந்தான். பீமன் வலிமை உள்ளவன். ஆனால் இயல்பிலே மிக நல்லவன். அவன் நல்ல குணம் சட்டென்று அவனை மீறி வெளியே வந்தது. ‘‘ஐயா, நீங்கள் யார்? உங்கள் வாலை அசைக்கக் கூட முடியவில்லையே. என்னை மிக பலஷ்டன் என்று சொல்வார்கள். நானும் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நினைப்பில் தான் பயங்கரமான கூச்சலை போட்டேன். ஆனால், ஒரு வானரத்தின் வாலைக்கூட அசைக்க முடியாத என் கூச்சல் அபத்தம் என்று தோன்றுகிறது.

நீங்கள் வானரமா, இல்லை வேறு ஏதேனும் தேவரா. ெதய்வங்களில் ஒருவரா. எனக்குத் தெரிய வேண்டும். நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என் பெயர் பீமசேனன். நான் வாயுகுமாரன். பஞ்சபாண்டவர்களில் ஒருவன். சகோதரர்களால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஐவருக்கும் ஒரே மனைவி திரௌபதி. துருபதனின் மகள். அவள் செளகந்திகமலர்களை விரும்பினாள் என்று நான் கந்தமாதன பர்வதத்தில் ஏறினேன்.

அருகேதான் இருக்கிறது என்று வாசனை தெரிவிக்கிறது. ஆனால், வழியை மறித்துக் கொண்டிருக்கிறீர்கள். தாண்டிப் போகச் சொல்கிறீர்கள். நல்லவேளை அந்த மகாபாவத்தை நான் செய்யவில்லை. நீங்கள் வெறும் வானரமல்ல. நீங்கள் வேறு ஏதோ. உங்களை விழுந்து வணங்கி நமஸ்கரிக்கிறேன். உங்கள் வயது எனக்கு ஆசிர்வாதம் தரும் வயது. என்னை ஆசிர்வதியுங்கள். நான் பீமசேனன். வாயு குமாரன்.’’

ஹனுமார் எழுந்து உட்கார்ந்தார். ஆனால் வழி அடைத்தபடிதான் இருந்தது. ‘‘தம்பி..’’ என்று அன்பொழுக கூப்பிட்டார். தலைகுனிந்த பீமன் நிமிர்ந்து பார்த்தான். அந்த கண்களிலிருந்து கருணை பொங்கியது. அவர் உதடு துடிப்பது தெரிந்தது. மயிர்கூச்செரிவது உணர முடிந்தது. ‘‘சகோதரா, நான் வாயு குமாரன். என் பெயர் ஹனுமான் என்று சொல்வார்கள். என் தந்தைக்கு இன்னொரு மகன் நீ. என் சகோதரன். உன்னை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

உங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு நேர்ந்த அவமானங்களும் இந்த கந்தமாதன பர்வதம் வரை வந்து விட்டது. நான் ராமாயண காலத்திலிருந்து ராமருடைய ஆட்சி முடியும் வரை காத்திருந்து பிறகு இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன். இங்குள்ள கின்னரர்களும், கந்தர்வர்களும் ராமாயணத்தை என் காது குளிர பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்ஸர ஸ்திரீகள் ராமாயணத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரமும் ராமரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன்.

உனக்கு ராமரைப் பற்றித் தெரியுமா? அயோத்தியின் அரசரான தசரதர், அவருக்கு நான்கு புத்திரர்கள். மூத்தவர் ராமன். அடுத்தது பரதன். பிறகு, லட்சுமணன். பிறகு சத்ருக்னன். ராமரும் லட்சுமணனும் இணைபிரியாதவர்கள். பரதனும், சத்ருக்னனும் ஒன்றானவர்கள். பரதனுடைய தாய் கைகேயி, தன் மகனுக்கு பட்டம் கட்ட வேண்டுமென்று தசரதரிடம் முன்பு கூறிய வரத்தை மறுபடியும் நினைவுபடுத்தி ராமன் வனத்திற்குப் ேபாகவேண்டும், தன் மகன் நாடாள வேண்டும் என்று கேட்க, தாயின் விருப்பப்படி அது தந்தையின் கட்டளை என்று ஏற்று எங்கள் ஐயன் ராமன் வனவாசம் மேற்கொண்டார்.

அவரோடு சீதையும், லட்சுமணனும் கிளம்பினார்கள். பரதன் நாடாள மறுத்து விட்டான். ராமருடைய பாதுகைகளை வாங்கி தன் சிரசில் வைத்து அதை சிங்காசனத்தில் ஏற்றி அதுவே நாடாளும் என்று ெசால்லிவிட்டான். தாயை கடிந்து கொண்டான். பீமா, அயோத்தியிலிருந்து தெற்கே பல இடங்கள் போய் பல முனிவர்களை தரசித்து அவர்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த பல அரக்கர்களை கொன்று, சபரி என்கிற வேடுவச்சிக்கு உயர்நிலை கொடுத்து, சூர்பணகை என்பவள் இடர்பட லட்சுமணன் அவள் மூக்கை அறுக்க, ராவணனின் தங்கையான அவள் சீதையின் வடிவை துராங்காரத்தோடு ஏறி சீதை இருக்கும் இடம் தேடினான்.

தன்னுடைய மாமனான மாரீசனை மான் வடிவம் கொண்டு ராமரையும், லட்சுமணனையும் வேறு இடத்திற்கு அப்புறப் படுத்த நினைத்தான். சீதை விருப்பத்தின்படி ராமர் மானை பின் தொடர்ந்து ஓட, மாரீசன் மீது அம்பு அடிக்க, மாரீசன், ஹே... லட்சுமணா, ஹே... சீதை.... என்று குரல் ெகாடுக்க, ராமனுக்குத்தான் ஆபத்து என்று சீதை லட்சுமணனை துரத்த, அவர் மறுக்க, கடிந்து கொள்ள, லட்சுமணன் ராமரைத் தேடி ஓடிய நேரத்தில் ராவணன் சீதையை தன் விமானத்தில் பலவந்தமாக ஏற்றி, தனது இலங்கை நோக்கி புறப்பட, வழியில் ஜடாயு என்ற கழுகு அரசன் அவனைத் தாக்கி சண்டையிட, ஜடாயுவை கொன்றுவிட்டு இலங்கை நகரத்திற்குப் போய் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தான்.

தன்னை மணக்கும்படி வற்புறுத்தினான். சீதை துல்லியமாக மறுத்தார். ராவணன் எங்கு இருக்கிறான் என்று தேடி ராமர் வரும்போது அங்கே வாலியின் சகோதரனான சுக்ரீவனின் தோழமை ஏற்பட்டு, என் மூலம் அது பலப்பட்டு சுக்ரீவனும் வாலியும் மறுபடியும் சண்டையிடச் சொல்லி, அதில் வாலியை கொன்று, வாலியின் மைந்தன் அங்கதனை அரசனாக்கி, சுக்ரீவனோடு, வானரப் படைகளோடு இலங்கையை நோக்கி சீதையைத் தேடி அலைந்தார்.

நான் தெற்குப் பக்கம்போய் இலங்கையில் சீதை இருப்பார் என்று நினைத்து அந்த இடத்தை பெரிய உருவம் எடுத்து கடலை தாண்டினேன். இலங்கைக்குப்போய் இறங்கினேன். இலங்கையில் ராவணன் என்னை கைது செய்தான். தீயிட்டு அழித்தேன். ஜானகிக்கு என்னுடைய வருகையை தெரிவித்தேன். ராமர் கொடுத்த கணையாழியை காட்டினேன். ராமதூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். ராமர் வருவார் என்று உற்சாகப்படுத்தினேன்.

ராமர் இலங்கையைத்தாண்ட, வானரங்கள் உதவியால் அணை கட்டினார். வானரப்படை தாண்டியது. ராவணனை பலநாள் தோற்கடித்த பிறகு ஹதம் செய்தார். சீதையை மீட்டார். சீதையின் பத்தினித் தன்மையை நிரூபிக்க அவரை தீயில் குளிக்கச் சொன்னார். அக்னி பகவான் சீதையை குற்றமற்றவள் என்று ெகாண்டுதர, சீதையோடு அயோத்திக்குப் போய் பதினோறாயிரம் வருடங்கள் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு நான் இந்த இடத்தில் அமர்ந்து அவர் நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இதுதான் ராமருடைய கதை’’ என்று கண்களில் நீர் தழும்பச் சொல்ல, பீமன் கண் கலங்கினான். கை கூப்பினான். மறுபடியும் அவர்தாள் பணிந்தான். ‘‘ஒரே ஒரு விண்ணப்பம்’’ என்றான். ‘‘என்ன?’’ ‘‘நீங்கள் சொன்ன கதையில் எனக்கு பிடித்த இடம் நீங்கள் பெரிய ரூபம் எடுத்து இலங்கையை தாண்டியது. மறுபடியும் நீங்கள் அப்படி பெரிய ரூபம் எடுத்து எனக்கு காட்ட வேண்டும்’’. ஹனுமார் வாய்விட்டு சிரித்தார்.

‘‘ராமருடைய கதையில் வேறு எதுவும் பிடிக்காது என் ரூபம்தான் பிடித்ததா, அதைத்தான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா. எல்லா சமயங்களிலும் அது எனக்கு இருக்கக் கூடியது அல்ல. அப்படி எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனவே, நீ அதைப்பற்றி
கவலைப்படாது இந்த இடத்திலிருந்து போ. நீ விரும்பிய மலர்கள் அதோ, அந்தப் பக்கமுள்ள தோப்பிலே இருக்கின்றன. இந்த ஏரியை ஒட்டி சிறிது தூரம் நடந்தால் அந்த மரங்கள் தெரியும். வேண்டுமென்ற மலர்களை எடுத்துக் கொண்டு உன் மனைவிக்கு கொடு.

ஆனால் இந்தப் பாதையை தேர்ந்தெடுக்காதே. இது சொர்க்கத்திற்கு போகும் இடம். மனிதர்கள் இதற்கு மேல் வரக் கூடாது. வந்தால் சாபத்திற்குள்ளாவார்கள். நீ யாராலும் சபிக்கப்படக் கூடாது என்று அஞ்சிதான் நான் உன்னை தடுக்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்...’’ ‘‘எனக்கு புரிகிறது. உங்கள் கட்டளையை மீற மாட்டேன். ஆனால், அந்த விஸ்வரூபம் நீங்கள் எனக்கு காட்ட வேண்டும்’’ ‘‘இல்லையப்பா. அது இப்ெபாழுது வராது’’ ‘‘இல்லையென்றால் நான் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்’’ என்று பீமன் கைகளைக் கட்டிக் கொள்ள, அவன் பிடிவாதம் பார்த்து அண்ணனான ஹனுமான் சிரித்தார்.

‘‘சரி.. செய்கிறேன்’’ என்று மிகப்பெரிய ரூபத்தை வெகு விரைவில் எடுத்தார். கந்தமாதன பர்வதத்தின் எல்லா சிகரங்களையும் தாண்டி ஒரு சூரியனைப்போல ஒரு ஒளியோடு திகழ்ந்தார். ‘‘எதிரிகள் முன்பு என்னுடைய உருவம் இன்னும் பெரிதாக இருக்கும். நான் மனதில் எந்த அளவு உயர வேண்டும் என்று நினைக்கிறேனோ அந்த அளவை விட உயரமாகத்தான் நான் உயர்வேன்.

இது எனக்கு கிடைத்த வரம். பார்த்தாயிற்றா’’ என்று கேட்க, பீமன் கண்களை மூடிக் கொண்டான். நமஸ்கரித்தான். சுற்றி வந்தான். மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான். ‘‘பழையபடி உருவம் எடுத்துக் கொள்ளுங்கள். என்னைத் தழுவிக் கொள்ளுங்கள்’’ என்று கெஞ்சினான். ஹனுமார் பழைய உருவம் எடுத்தார். அவனை ஆரத்தழுவிக் கொண்டார். தன் சக்தியின் பெரும்பகுதியை அவனுக்குள் செலுத்தினார். பீமன் இதுவரை இல்லாத ஒரு புத்துணர்ச்சியை அடைந்தான்.

‘‘அண்ணா, எனக்கு இன்ெனாரு சந்தேகம் இருக்கிறது. அதை நீஙகள் தெளிவிக்க வேண்டும். ‘‘என்ன?’’ ‘‘ராமருடைய காலம் ஏதோ ஒன்று. நாங்கள் இருக்கிற காலம் ஏதோ ஒன்று. இதற்குப் பிறகும் உலகம் இருக்கப் போகிறது. என்ன யுகம்? எத்தனை யுகம்? யுகம் என்றால் என்ன? ஒவ்வொரு யுகத்தின் தன்மை என்ன? என்று எனக்கு விளக்க வேண்டும்’’ என்று கேட்க, ஹனுமார் பீமனை எதிரே உட்கார வைத்து யுகங்களைப் பற்றி விளக்கினார். 

‘‘பூமி தோன்றிய போது முதலில் ஏற்பட்டது த்ருதயுகம். த்ருதயுகத்தில் தேவர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், மனிதர்கள் என்ற பேதங்களெல்லாம் இல்லை. எல்லோரும் எல்லா இடத்துக்கும் போக முடிந்தது. அவரவர் காரியங்களை செவ்வனே செய்து  கொண்டிருந்தார்கள். அங்கே கொடுக்கல் வாங்கல் கிடையாது. எந்த தொழிலும் இல்லை. விவசாயம் என்று ஒன்று நடைபெறவில்லை.

பூமி என்ன வழங்கிற்றோ அது அப்பொழுது இருந்த மக்களுக்கு போதுமானதாக இருந்தது. செய்யக் கூடிய கர்மங்கள் எதுவும் இல்லாததால் போட்டியோ, உயர்வு, தாழ்வோ எதுவும் இல்லை. எல்லோரும் அமைதியாக வாழ்ந்தார்கள். ஆனால், காலகிரமத்தில் இதில் குறைபாடு வர, சத்திய யுகம் தோன்றியது. சத்திய யுகத்தில் ஒரே ஒரு தர்மம் மிஞ்சியது. சுயநல தியாகத்தை மனிதர்கள் எளிதில் செய்தார்கள். நெல்முனையளவும் சுயநலம் இல்லாது யார் எது கேட்டாலும் கொடுத்தார்கள். வாரி வழங்குவதில் கண்ணாக இருந்தார்கள்.

கொடுப்பதில் சந்தோஷமடைந்தார்கள். அதனால் எவரிடமும் சண்டை இல்லை. சச்சரவு இல்லை. சோம்பேறித்தனம் இல்லை. ேகாள் சொல்லுதல், பொறாமை, பயம், அசூயை எதுவும் இல்லை. வர்ணங்கள் நான்கு பேர் இருந்தாலும் அனைவரும் சமம் என்ற நிலையில் இருந்தார்கள். பரமாத்மாவை அடைவதே சகலருடைய லட்சியமாக இருந்தது. இதற்கான நன்னடத்தை கடைபிடிக்கப்பட்டது. சத்திய யுகத்தில் சனாதன தர்மமானது நான்கு கால்கள் கொண்ட உருவத்தோடு இருந்தது.

ஆனால்,  த்ராதாயுகத்தில் யஞ்ஞங்கள், வேள்விகள், ஹோமங்கள், ஜபங்கள் ஆரம்பித்துவிட்டன. அதாவது தொழில் என்று ஒன்று துவங்கிவிட்டது. இதனால் தர்மத்தின் கால் ஒன்று குறைந்து த்ராதாயுகத்தில் மூன்று கால் கொண்ட விஷயமாக சனாதன தர்மம் இருந்தது. ஆனால், இவைகளை கடைபிடிப்பதில் அந்த மக்கள் முழு முயற்சியோடு இருந்தார்கள். உண்மையாக இருந்தார்கள். அம்மாதிரியான செயல்களை ெசய்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

அம்மாதிரி செய்யும் வேள்விகளுக்கு பலன் இருந்தது. பலன் இருந்ததால் ஜனங்கள் அதில் ஆர்வமாக இருந்தார்கள். தானங்கள் ஒரு சிறந்த விஷயமாக இருந்தது. அரசர்கள் அந்தணர்களுக்கு அள்ளிக் கொடுப்பதும், அந்தணர்கள் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதுமாக போட்டி, பொறாமை இன்றி வாழ்ந்தார்கள்.

இதற்கு அடுத்த வந்த துவாபர யுகத்தில் தர்மத்திற்கு இரண்டே கால்கள் இருந்தன. வேதங்கள் நான்காக பகுக்கப்பட்டன. நான்கு வேதங்கள் அறிந்தவர்கள் குறைவாகவும், மூன்று வேதங்கள் அறிந்தவர்களும், இரண்டு வேதம் அறிந்தவர்களும் ஒரே ஒரு வேதம் மட்டும் தெரிந்தவர்களுமாய் ஜனங்கள் பிரிந்து இருந்தார்கள். ஆனால், இவர்கள் செய்த கர்மங்களில் அதாவது, செயல்களில் பேதங்கள் ஏற்பட்டன.

தாங்கள் செய்வது சரி, அவர் செய்வது தவறு என்ற எண்ணங்கள் ஏற்பட்டன. செயல்களில் பேதங்கள் ஏற்பட்டதால் உயர்வு, தாழ்வும் ஏற்பட்டது. தவம் செய்தவர் சிலர், தவம் செய்யாதவர் சிலர் என்று மக்கள் பிரிந்து இருந்தார்கள். ஒருவரை ஒருவர் குறை சொன்னார்கள். ஆனால் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில் இருக்கிறது. மக்கள் மனோவியாதியால் பீடிக்கப்பட்டார்கள். தானங்கள் செய்யக் கூடியவர்கள் இல்லாது போனார்கள். இதனால் வியாதி, சோம்பல், கோபம் முதலிய குற்றங்கள் பெருகின.

மக்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குறை ெசால்வதிலேயே வாழ்க்கையை கடத்தினார்கள். ஏ. பீமா, கலியுகம் வரப்போகிறது. மிக மோசமான அந்தக் காலம் இந்த பூமியில் நிகழப் போகிறது. ஜனங்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள்’’ என்று சொல்ல, பீமன் அவர் பேச்சில் திருப்தியுற்றவனாய் மறுபடியும் அவரை நமஸ்கரித்தான். ‘‘இன்னொரு கேள்வி இருக்கிறது’’ ‘‘கேள் தம்பி’’ ஹனுமார் பிரியத்தோடு சொன்னார்.

(தொடரும்)

பாலகுமாரன்