நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க!



தங்கத்தாலான (சொர்ண) சிவலிங்கம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிதம்பர ரகசியத்திற்குக் கீழே உள்ளது. இது ஏகமுக சிவலிங்கம் ஆகும். இந்தச் சொர்ணலிங்கத்திற்கு உச்சி வேளையில் ஒருகால பூஜை மட்டும் நடைபெறும். வெள்ளியாலான லிங்கத்தினை ‘ரஜத லிங்கம்’ என்பர். இந்த லிங்கம் வடநாட்டில் நேபாளத்தில் காட்மாண்டில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ‘கோரக்கநாதர்’ ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மரகதலிங்கம் சிதம்பரம் மற்றும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்களில் உள்ளது. நீலமணியாலான் சிவலிங்கத்தை, தேவகோட்டைக்குத் தென்கிழக்கே 30 கி.மீ. தூரத்திலுள்ள திருவாடானைத் திருத்தலத்தில் தரிசிக்கலாம். பச்சை நிறமுடைய சிவலிங்கத்தை திரு இடைச்சுரம் என்னும் ஊரிலுள்ள ஞாலபுரீஸ்வரர் ஆலயத்திலும் திருஈங்கோய் மலை என்னும் ஊரில் உள்ள மரகதாசலேஸ்வரர் கோயிலில்களிலும் காணலாம்.

குங்குமத்தினாலான லிங்கம் மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரா குகைகளுக்கு அடுத்துள்ள குஸ்மேஸம் என்னும் ஊரில் உள்ளது. மண்ணாலான ப்ருத்வி லிங்கம் பல தலங்களில் காணப்பட்டாலும், காஞ்சிபுரம் மற்றும் திருவொற்றியூரில் தரிசிக்க சிறப்பு. சக்தியானவள்  நீரைக் குவித்து உருவாக்கிய கல் சிவலிங்கத்தை திருவானைக்காவலில் தரிசிக்கலாம். சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே பத்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, காட்டூர் திருவாலீஸ்வரன் திருக்கோயில்.

கோயில் தலமரம் மகிழமரமாகத் திகழ்ந்தாலும், கோயில் வளாகத்தில் உள்ள மகாவில்வமரம் புனிதமானது. ‘ஏகவில்வம் சிவார்ப்பணம்’ என்பர். ஒரு வில்வத்தால் ஈசனை பூஜிப்பதே சிறப்பு. ஆனால், இங்குள்ள ஒரே வில்வத்தில் குறைந்த பட்சம் ஏழு, ஒன்பது, பதினொன்று இதழ்களும் அதிகபட்சமாக பதிமூன்று இதழ்களும் உள்ளது இறை ஆச்சரியமே! இந்த அதிசய வில்வ தளத்தால் வாலியும், அனுமனும் ஸ்ரீகாட்டூர் திரிபுர சுந்தரி, சமதே திருவாலீஸ்வரனை அர்ச்சித்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள கண்டங்குளம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ள கருப்பசாமிக் கோயிலில் மாசி மகா சிவராத்திரி அன்று நள்ளிரவு சுடுகாட்டு எலும்புகளை வைத்து நடைபெறும் ‘எலும்பு பூஜை’ மிகவும் பிரசித்தமானது. இந்தப் பூஜையில் கலந்து கொண்டால் ஸ்ரீ கருப்பண்ண சாமி அருள் கிட்டுவதுடன், தீராத நோய்கள் குணமாகும், உடல் நலம் வளம் பெறும் என்று
சொல்லப்படுகிறது.

 - பொன்மலை பரிமளம்