திருவினை புரியும் சிவ திருவிளையாடல்கள்



ஆடல்வல்லான் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் கண்ட திருத்தலம் மதுரையம்பதி. அந்த விளையாடல்களில் சிலவற்றை, இந்த மஹாசிவராத்திரி வேளையில் படித்துக் களிப்போம்.

விருத்தாசுரனை வென்ற செருக்குடன் ஐராவத யானையின் மேல் வந்த இந்திரன், துர்வாசர் தந்த சிவ பிரசாதத்தைத் தான் பணிந்து ஏற்றுக்கொள்ளாமல், தன் யானையை வாங்கிக்கொள்ளச் செய்தான். அது சிவபிரசாதம் என்றறியாத ஐராவதம் அதை வாங்கி காலில் போட்டு மிதித்தது. அதனால் இந்திரனும் ஐராவதமும் துர்வாசரின் சாபத்திற்கு ஆளாயினர். ஐராவதம் மதுரை சொக்கலிங்கரை வணங்கி கடம்பவனத்திலேயே தங்கிவிட எண்ணம் கொண்டது.

ஈசனின் ஆணைப்படி இந்திரன் மதுரைக்கு வந்து ஐராவதத்தை அழைத்துச் சென்றான். இந்திர விமானத்தின் கீழ் சுந்தரேஸ்வரர் அருளும் கருவறையை இன்றும் எட்டு வெள்ளைநிற யானைகள் தாங்கி நிற்கும் அழகைக் காணலாம். இத்திருவிளையாடல் ‘வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்’ என்று போற்றப்படுகிறது. மன்னன் வீரபாண்டியன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது விதிவசத்தால் இறந்தான். அதைக் கேள்விப்பட்ட அவனது ஆசை நாயகிகள் அவனது அரண்மனை பொக்கிஷங்களோடு மாயமானார்கள்.

வீரபாண்டியனின் புதல்வனுக்கு முடிசூட்டும்போது அணிவிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த நவமணிகள் இழைத்த மகுடமும் அந்த பொக்கிஷங்களோடு களவு போயிற்று. அப்போது சோமசுந்தரக் கடவுள் வைரவியாபாரி போல் வந்து அற்புதமான மணிகள் இழைத்த மகுடத்தை தந்து இனி மன்னரின் மகனை அபிஷேக பாண்டியன் என்று அழைக்குமாறு அருளி மாயமாய் மறைந்தார். இந்த திருவிளையாடல் ‘மாணிக்கம் விற்ற படலம்’ என்று புகழப்படுகிறது.

சகலவிதமான சிவச்சின்னங்களோடும் மதுரை மீனாட்சி ஆலயத்தில் ஈசன் சித்தராகத் தோன்றி அருள்விளையாடல்கள் செய்தார். இந்த சித்து வேலைகளால் மக்களின் மனம் கவர்ந்தார். அவரால் ஆற்ற இயலாத செயலே இல்லை என்று பக்தர்கள் நினைத்ததால் அவரை ‘எல்லாம் வல்ல சித்தர்’ என போற்றினர். இந்த திருவிளையாடல் ‘எல்லாம் வல்ல சித்தரான படலம்’ எனப் புகழப்படுகிறது.

எல்லாம் வல்ல சித்தரின் சக்தியை சோதிக்க எண்ணிய அபிஷேகப் பாண்டியன் சுந்தரேஸ்வரரின் இந்திர விமானத்தைத் தாங்கி நிற்கும் அஷ்ட கஜங்களுள் ஒன்றை கரும்பை உண்ண வைக்க முடியுமா எனக் கேட்டான். அது கேட்ட சித்தர் ஒரு கல் யானைக்கு கரும்பைத் தந்தார். அந்த யானை பளிச்சென்று உயிர் பெற்று பிளிறி கரும்புச்சாறு வாயில் ஒழுக கரும்பை உண்டது. இத்திருவிளையாடல் ‘கல் யானைக்குக் கரும்பு தந்த படல’மாய் நிலை பெற்றது.

அனந்தகுண பாண்டிய மன்னனை அழிக்கும் பொருட்டு சமணர்கள் ஒரு யாகம் இயற்றி ஓர் அரக்கனை உருவாக்கினர். சைவர்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்கள் என்பதால் அந்த அரக்கனுக்குப் பசு வடிவம் தந்து ஏவி, மதுரை மக்களை முட்டி மோதி கொல்ல ஆணையிட்டனர். திக்கற்றவர்களைக் காக்க தெய்வமே துணை என்பது போல் அனந்தகுண பாண்டியன், சொக்கலிங்கரிடம் சரணடைய சொக்கர் நந்தியம்பெருமானை அனுப்பி அப்பசுவைக் கொன்றார். அரன் அருளால், அப்பசு மலையாக உருமாறியது.

அதுவே இன்றைய பசுமலை. இத்திருவிளையாடல் ‘மாயப்பசுவை வதைத்த படல’மாய் போற்றப்படுகிறது. தாருகாவனத்தில் பிட்சாடனராகத் திரிந்த ஈசனின் அழகில் மனதைப் பறி கொடுத்த ரிஷிபத்தினிகள் தாபத்தால் வளையல்கள் கழலும் அளவிற்கு தங்களை வருத்திக்கொண்டு உடல் மெலிந்தனர். நடந்ததை அறிந்த ரிஷிகள் ‘ஈசனிடம் காமமுற்ற நீங்கள் அனைவரும் மதுரையம்பதியில் பிறந்து ஈசன் கையினால் வளையல் போடப்படும்போது சாப விமோசனம் பெறுங்கள்’ என்று சபித்தனர்.

அதன்படி மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்த அந்த ரிஷி பத்தினிகளுக்கு, சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மாறி வளையலை அணிவித்தோடு அவ்வாறு வந்தது தான்தான் எனவும் உணர்த்தி அவர்களை ஆட்கொண்டார். இத்திருவிளையாடல் ‘வளையல் விற்ற படலம்’ எனப் புகழப்படுகிறது. வேட்டையாடச் சென்ற வரகுண பாண்டிய மன்னன் அறியாமல், அவனுடைய குத்ரை ஒரு அந்தணரை மிதித்துக் கொன்றுவிட்டது.

அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க தினமும் 1008 முறை என்று பத்து நாட்கள் சோமசுந்தரரின் ஆலயத்தை வலம் வந்தார். பத்தாம் நாள் அசரீரியாக ‘காவிரி சோழன் போரிட வருவான். அவனை நீ எதிர்க்கும்போது திருவிடைமருதூர் ஆலயத்தில் உன் தோஷம் நீங்கும்’ என்றுரைத்தார் ஈசன். அதன்படியே சோழனிடம் போரிட்டபோது திருவிடை மருதூரில் கிழக்கு கோபுர வாயிலில் அவன் பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

அவன் மேற்கு கோபுர வாயில் வழியே சென்று விட்டான். இன்றும் திருவிடைமருதூரில் கிழக்கு வாயில் வழியே சென்று மேற்கு வாயில் வழியே வெளிவரும் நடைமுறை உள்ளது. இவ்வாறு வரகுண பாண்டியனுக்கு சிவலோகம் காட்டியருளிய லீலை ‘வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படல’மாகத் திகழ்கிறது. சுந்தரேசபாத சேகரனின் ஆட்சி காலத்தில் தனபதி எனும் வணிகர் தனக்கு குழந்தையில்லாததால் தன் தங்கை மகனை தத்தெடுத்தார்.

தனபதியின் மனைவிக்கும் அவர் தங்கைக்கும் நடந்த வாக்குவாதத்தில் தனபதிக்கு குழந்தையில்லா குறையை அவர் தங்கை சுட்டிக்காட்ட, மனம் வெறுத்த தனபதி தன் சொத்துகளை தங்கை மகனுக்கு எழுதித் தந்து மனைவியுடன் கானகம் சென்றார். தனபதியின் பங்காளிகள் அவர் தங்கையை ஏமாற்றி சொத்துகளை அபகரிக்க முயல, அவள் சுந்தரேசரிடம் முறையிட, சுந்தரேசர் அவளை பங்காளிகள் மேல் வழக்குத் தொடர வைத்து, தனபதியின் வடிவில் வந்து தானே தோன்றி, ‘சொத்துக்களை தங்கைக்குத் தந்தோம்’ என்று கூறி அவளுக்கு மீண்டும் சொத்துகள் கிட்ட வழி செய்தருளினார். இது ‘மாமனாக வந்து வழக்குரைத்த படலம்’ எனப் போற்றப்படுகிறது.

குருவிருந்த துறை எனும் குருவித்துறையில் சுகலன் எனும் பணக்காரருக்குப் பன்னிரண்டு பிள்ளைகள். சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட அவர்கள், தம் பெற்றோர் காலத்திற்குப் பின் காட்டிற்குப்போய் வேட்டையாடிப் பிழைக்க எண்ணம் கொண்டனர். ஆனால், அங்கு தவமிருந்த குரு பகவானை அவமதித்ததால் அவர் சாபமிட, அவர்கள் ஒரு பன்றிக்குப் பிறக்கும்படி நேர்ந்தது. ராஜராஜன் வேட்டையாட வந்தபோது ஆண் பன்றியைக் கொன்றான்.

பெண் பன்றியை அங்கு வந்த வேடன் சருச்சரன் கொன்றான். தாயையும் தந்தையையும் இழந்த குட்டிப்பன்றிகளின் அபயக் குரல் கேட்ட சுந்தரேசர் வராஹ முகத்துடனும் மனித உடலுடனும் தோன்றி பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்ட, அவை முந்தைய வடிவைப் பெற்றன. இத் திருவிளையாடல் ‘பன்றிக்குட்டிகளுக்கு முலை கொடுத்த படல’மென அழைக்கப்படுகிறது. பன்றியின் வயிற்றில் பிறந்து வராஹ வடிவம் தாங்கிய ஈசனின் திருமுலைப்பாலை உண்ட பன்னிருவரும் ஈசனின் ஆணைப்படி ராஜ ராஜ பாண்டியனின் அமைச்சரவையில் மந்திரிகளாயினர்.

அவர்கள் பாண்டியனை கண்ணை இமை காப்பதுபோல் காத்தனர். பலகாலம் பாண்டியனுக்கு துணை நின்று செயல்பட்டு பின் சிவலோக பதவி பெற்றனர். இந்த லீலை ‘பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்’ என போற்றப்படுகிறது. சுகுண பாண்டியன் காலத்தில் முன் ஜென்ம பாவத்தால் கரிக்குருவியாக மாறிய ஒரு பறவையை மற்ற பறவைகள் துன்புறுத்தின. அவற்றிடமிருந்து தப்பிக்கக் காட்டிற்குச் சென்ற கரிக்குருவி அங்கிருந்த முனிவர் ஒருவரால் மதுரையின் பெருமையை அறிந்து, அங்கு சென்று, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி மூன்று நாட்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தது.

பிறகு மீனாட்சியின் திருவருளால் சொக்கநாதரிடம் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை உபதேசமாகப் பெற்று வலியன் எனும் பெயரையும் பெற்று மற்ற பட்சியினங்களை எதிர்க்கும் ஆற்றலும் பெற்றது. இத்திருவிளையாடல் ‘கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படல’மாய்த் திகழ்கிறது. பாண்டிய நாட்டின் தென்புறத்தில் இருந்த குளத்தில் வாழ்ந்த நாரை ஒன்று அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களால் மதுரையின் பெருமையை அறிந்தது.

மதுரை மீனாட்சி ஆலயத்தில் மீன் பிடித்து உண்ண நினைத்தபோது அது பாவம் என்றெண்ணிய நாரை சோமசுந்தரரை தியானிக்க அதன் முன் தோன்றினார் ஈசன். ‘எனக்கு முக்தியருளவேண்டும். இந்த பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமலிருக்க அருளவேண்டும்,’ என அவரிடம் நாரை கேட்டபடியே அன்றுமுதல் இன்றுவரை அக்குளத்தில் மீன்கள் வளர்வதில்லை. இத்திருவிளையாடல் ‘நாரைக்கு முக்தி கொடுத்த படல’மாய் புகழப்படுகிறது.

அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டபோது வைகையில் வெள்ளப் பெருக்கெடுத்தது. வீட்டிற்கு ஒருவர் வெள்ளத்தை அடைக்க மண் சுமந்து கொட்ட வேண்டும் என மன்னன் ஆணையிட்டார். தன்மீது பக்தி கொண்ட, புட்டு விற்கும் வந்தி எனும் கிழவிக்கு அருள் புரிய திருவுளம் கொண்ட சோமசுந்தரர் அந்த கிழவியின் சார்பாக தான் மண் சுமப்பதாகக் கூறி, அதற்குக் கூலியாகப் புட்டை வாங்கி உண்டு தூங்கிவிட்டார்.

அந்த சமயம் அங்கு வந்த மன்னன் உறங்குவது சோமசுந்தரர் என அறியாமல் பிரம்பால் அவரை அடிக்க அது உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் முதுகிலும் விழுந்தது. மன்னன் சோமசுந்தரரின் கருணையையும் பெருமையையும் உணர்ந்த இந்த திருவிளையாடல் ‘பிட்டுக்கு மண்சுமந்த படலம்’ என அழைக்கப்படுகிறது. உமையவளின் கூந்தலுக்கும் இயற்கை மணமில்லை என வாதாடி, ஈசனின் நெற்றிக்கண்ணை தரிசித்தும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என அஞ்சாமல் கூறி உடல் முழுதும் எரிச்சல் கண்டு பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரர்.

சோமசுந்தரர் ரிஷபாரூடராய் அவருக்கு காட்சி தந்தருளினார். பின் நக்கீரரின் வேண்டுகோளின்படி தருமிக்கே பொற்கிழியை அளித்தான் பாண்டிய மன்னன். இந்த திருவிளையாடல் ‘கீரனைக் கரையேற்றிய படலம்’ எனப்படுகிறது. வேதத்தின் உட்பொருளாம் சிவஞானபோதம் எனும் நூலின் பொருளை பார்வதிக்கு உபதேசித்தார் ஈசன். அதை கவனியாமல் அலட்சியம் செய்த உமையம்மையை பூவுலகில் மீனவகுலப் பெண்ணாகப் பிறக்கும்படி சாபமிட்டார்.

நந்திகேஸ்வரரும் திமிங்கலமாக மாறும் சாபம் பெற்றார். அதன்படி பர்வதகுமாரியாய் மீனவர் குலத்தில் அவதரித்த பார்வதியை மணக்க மீனவ இளைஞனாக ஈசன் மாறி திமிங்கலமாக உருமாறி கடலில் திரிந்த நந்தியை அடக்கி, பர்வதகுமாரியை மணந்தார். இத்திருவிளையாடல் ‘வலைவீசிய படலம்’ என்று போற்றப்படுகிறது. குலபூஷண பாண்டியன் ஈசனிடம் மாறா பக்தி கொண்டவன். ஒருசமயம் மழை பொய்த்தது. மக்கள் பஞ்சத்தால் வாடினர். தன்னை மனமுருக வணங்கிய அவனுக்கு ஈசன் பொற்காசுகளைச் சுரக்கும் உலவாக்கிழியை அருளினார்.

நாடு பஞ்சத்திலிருந்து விடுபட வழி கேட்டவனுக்கு ‘உன் அகந்தை அழிந்தால் நாடு செழிக்கும்’ என்றார் ஈசன். அதன்படி உலவாக்கிழியிலிருந்து வரும் பொற்காசுகளை அந்தணர்களுக்கு தானமளித்து யாகங்கள் நடக்கச் செய்து மழை பொழியச் செய்து ஈசனருள் பெற்றான் மன்னன். இத்திருவிளையாடல் ‘உலவாக்கிழி அருளிய படலம்’ எனப்படுகிறது.

வரகுண பாண்டியனின் ஆட்சி காலத்தில் வடநாட்டைச் சேர்ந்த ஹேமநாதன் எனும் கலைஞன் உலக நாடுகளிலுள்ள யாழிசைக் கலைஞர்களை வென்று மதுரையில் போட்டியிட வந்தார். அவருடன் போட்டியிட ஈசன் பக்தரான பாணபத்திரர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சோமசுந்தரரை சரணடைய ஈசன் விறகு விற்பவனாக உருமாறி ஹேமநாதன் இருப்பிடம் சென்று சங்கீத லட்சணங்களின்படி பாட்டிசைத்து தான் பாணபத்திரரின் சீடரென்றும் தனக்கு சங்கீதம் வரவில்லை என பாணபத்திரர் தன்னை விரட்டிவிட்டார் என்றும் கூறினார்.

‘இத்தனை ஆற்றல் மிக்கவனையே பாணபத்திரர் ‘ஞானசூனியம்’ என்று சொல்லி விரட்டிவிட்டாரானால், அவர் எத்தகைய மேதையாக இருப்பார்!’ என்று பிரமித்து, இரவோடு இரவாக அவர் மதுரையை விட்டே ஓடினார். இத்திருவிளையாடல் ‘விறகு விற்ற படலம்’ என்று புகழப்படுகிறது. ஊழிக்காலம் முடிந்தபின் தோன்றிய உலகில் நைமிசாரண்ய முனிவர்கள் வேதத்தின் பொருள் அறியாது திகைத்தனர்.

அவர்கள் மதுரையம்பதிக்கு வந்து சோமசுந்தரரை நோக்கி தவம் இருந்தனர். அப்போது ஈசன் 32 லட்சணங்கள் கூடிய இளைஞனாய் அவர்கள் முன் தோன்றி வேதத்தின் பொருளை அவர்களுக்கு விளக்கினார். இத்திருவிளையாடல் ‘வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்’ என போற்றப்படுகிறது. ராஜசேகரபாண்டியன் 63 கலைகளையும் கற்று மீதி ஒரு கலையான நாட்டியக்கலையும் கற்க எண்ணி அதனைக் கற்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு நாள் முடிந்ததும் நடனமாடிய கால்கள் அவனுக்கு வலிக்கும். அவன் மதுரையம்பதியில் வெள்ளியம்பலத்தில் வீற்றிருந்த நடராஜப் பெருமானை பார்த்து, ‘சில நாட்கள் நடனமாடிய எனக்கே கால்கள் வலிக்கிறதே? ஐயனே! எப்போதும் நடனமாடிக்கொண்டே இருக்கும் தங்கள் கால் வலிக்காதா? எனக்காக காலை மாற்றி ஆடுங்கள்,’ எனக் கல்லும் கரையும் வண்ணம் வேண்டினான். அவன் பக்தியை மெச்சிய ஈசன் இடது காலை கீழ் வைத்து வலது காலை தூக்கி கால் மாறி நடனமாடி அவனுக்கு அருள்புரிந்தார். இத்திருவிளையாடல் ‘கால்மாறி ஆடிய படலம்’ எனப்படுகிறது.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமணத்திற்கு வகைவகையான உணவுவகைகள் மலைபோல் செய்து குவிக்கப்பட்டிருந்தன. கூட்டம் குறைவாக இருப்பது போல் உணர்ந்த அன்னை உணவுப்பண்டங்கள் வீணாகாமல் காக்க அருள வேண்டும் என்று கூறுவது போல் தன் செல்வச் செருக்கை ஈசனிடம் உணர்த்தினாள். அன்னைக்குப் பாடம் கற்பிக்க நினைத்த ஈசன் குண்டோதரனை அழைத்து ‘முதலில் இவன் ஒருவன் பசியை தீர்க்க முயற்சி செய்’ என்றார். அனைத்து உணவுவகைகளையும் ஒரு நொடியில் உண்ட குண்டோதரன் மீண்டும் மீண்டும் பசி பசி என கதற, அன்னையின் கர்வம் அடங்கியது. குண்டோதரனின் தாகம் தீர்க்க ஈசனால் உருவாக்கப்பட்டதுதான் வைகை நதி. இத்திருவிளையாடல் ‘குண்டோதரனுக்கு அன்னமிட்ட படல’மாக போற்றப்படுகிறது.

தொகுப்பு: ந.பரணிகுமார்