ஆனந்தமாய் வாழவைப்பார் ஆவூர் திருவகதீஸ்வரர்



திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம். இக்கிராமத்தின் பெரிய ஏரிக்கரையின் அருகே மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் திருவகதீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. கோயில் தெற்குப்புற நுழைவு வாயில் கொண்டிருக்கிறது. ஆலயத்தில் இறைவன் திருவகதீஸ்வரர், லோகநாயகி அம்மன், விநாயகர் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள்.

மடப்பள்ளி, திருக்கல்யாண மண்டபம் ஆகியவையும் உள்ளன. இத்திருக்கோயில் கலை நயம் மிக்க கற்றளியாகத் திகழ்கிறது. இங்குள்ள கல்வெட்டு தகவல்கள்படியும், ஆய்வாளர்களின் கருத்துப்படியும் இந்த ஆலயம் 10ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. கோயிலில் உள்ள கல்தூண்களில், குறிப்பாக திருக்கல்யாண மண்டபத்தின் கல்தூண்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், அப்போதிருந்த சிற்பக் கலையின் உன்னத நிலையை அறிய உதவுகிறது. இதில் நாயக்க மன்னர்களின் சிற்பங்களும் உண்டு.

இதிலுள்ள 28 கல்வெட்டுகளில் ராஜராஜசோழன் கால கல்வெட்டு ஒன்றும், பாண்டிய அரசர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், பல்லவ மன்னர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், ஹய்சாள மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும் உள்ளன. 15ம் நூற்றாண்டில் மன்னர்கள் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆலயம் சிதிலமடைந்து போயிற்று.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பே இந்த ஆலயம் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தக்குளம் ‘மகாதேவ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் குளம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக்குளம் இதுவரை வற்றியதே இல்லை என்கிறார்கள். மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை நாடுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வணங்கி சென்றால் அவர்களுடைய தொல்லைகள் எல்லாம் நீங்கும் என்பது பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை. பவுர்ணமி நாட்களில் முதலில் வேட்டவலம் ஸ்ரீஅகதீஸ்வரரை வணங்கி, பின்பு ஆவூரிலுள்ள இந்த திருவகதீஸ்வரரை வணங்கி அதற்குப் பிறகுதான் கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலைக்குச் செல்கிறார்கள்.

- ஹரிநிவாஸ்