தீமைகளைப் பொசுக்கும் தீத்தலம்!



அக்னி தலம்

கரிவலம் வந்த நல்லூர் - நெல்லை மாவட்டம்

பஞ்ச பூத தலங்கள் - 3


பாற்கடல் கடைந்த பிறகு அதன் முக்கிய நோக்கமான அமிர்தம் வெளிப்பட்டது. அதனை தேவர்கள் உண்டால் பல ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறும் என்றும் தேவர்களுக்குக் கிடைத்தால், அரக்கத்தனமும் அழிவும் அதிகரிக்கும் என்பதை அறிந்த மஹாவிஷ்ணு அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே பங்கிட்டளித்தார். இதனால் கோபமுற்ற அசுரர்கள் தம் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டார்கள்.

அவர், அவர்களுடைய ஏக்கத்தைப் போக்கும் வகையில் பூலோகத்தில், கருவைப்பதி என்ற தலத்தில் பால் தடாகம் ஒன்றினை உருவாக்கினார். இதைக் கேள்விப்பட்ட தேவர்கள், அந்தத் தடாகத்திலிருந்து அரக்கர்கள் பாலை அருந்தினார்கள் என்றால் அவர்களும் வலிமை பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். உடனே சிவபெருமானைத் தஞ்சமடைந்தார்கள். அவர் அந்தப் பால் தடாகத்தால் வரவிருக்கும் ஆபத்தினை உணர்ந்து அதனை வெறும் நீர்த் தடாகமாக மாற்றிவிட்டார். அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இவ்வாறு பால் தடாகத்தை மாற்றியதால் இங்கே கோயில்கொண்டிருக்கும் ஈசன் பால்வண்ண நாதர் என்றும், சுக்கிரன் உருவாக்கியதால், தடாகம், சுக்கிர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருமுறை இந்திரனுக்கும் அவன் மகனுக்கும் வேடர்களாக மாறும்படி சாபம் ஏற்பட்டது. அதைப் போக்கிக்கொள்ள அவர்கள் இத்தலத்துக்கு வந்து பால்வண்ண நாதரை பூஜித்து வந்தனர். இவ்வாறு இவர்கள் பூஜிக்க, இரவுநேரத்தில் யானை ஒன்றும் வந்து ஈசனை பூஜித்தது.

மறுநாள் இறைவன் சந்நதிக்குப் போகும்போது ஏற்கெனவே யாரோ பூஜித்துச் சென்றுவிட்டிருந்த அடையாளங்களை இந்திரன் கண்டான். தங்களையும் மீறி யார் இவ்வாறு பூஜித்திருப்பார்கள் என்றறிய இரவில் ஒளிந்திருந்து கண்காணித்தார்கள். அப்போது ஒரு யானை அவ்வாறு பூஜிப்பதைக் கண்டார்கள். உடனே வெகுண்டு அதனைக் கொல்ல அம்பு எய்தபோது அந்த யானை சட்டென்று வெள்ளை யானையாக, ஐராவதமாக மாறியது.

தன் தலைவனான இந்திரனைத் தேடி வந்த ஐராவதம் தான் பூஜை செய்த தலத்திலேயே அவனைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டது. ஆமாம், இந்திரனுக்கும் அவன் மகனுக்கும் சாபம் விலகி அவன் சுய உரு பெற்றிருந்தான்! இந்திரன் சாபம் தீர்ந்ததாலும், யானை (கரி) வலம் வந்து வணங்கியதாலும், இத்தலம் கரிவலம் வந்த நல்லூர் என்று பெயர் பெற்றது.

மாமுனி அகத்தியரும் இங்கே வந்து ஈசனை வழிபட்டிருக்கிறார்; ஸ்ரீசக்கர பராசக்தியை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இத்தலத்திற்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், சீவன் முக்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் என்று பல பெயர்கள் உண்டு. கோயிலில் உள்ள சுக்கிர தீர்த்தத்தில் நீராடி அக்னி ஈசனை வழிபட்டதால் அக்னி தீர்த்தம் என்றும் பெயர் கொண்டது. அவ்வாறே அம்பாளும் வழிபட்டதால் தேவிதீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
 
சிவபெருமானை க்ஷீரவர்ணேஸ்வரர், முகலிங்கநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்பாளுக்கு அதுல சௌந்தரியாம்பிகை, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி என்ற பெயர்கள் உண்டு. இக்கோயிலில் பிரம்மா, விஷ்ணு, காகபுஜண்டர், நாரதர், சூரியன், சந்திரன், லட்சுமணன் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.
  
கோயில் மிக பிரமாண்டமானது. 125 அடி உயர ராஜகோபுரம் கொண்டுள்ளது. கோயிலினுள் விதானத்தில் மூலிகை வர்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கொடிமரம், நந்தி, பலிபீடம் எல்லாம் சம்பிரதாயமாக அமைந்திருக்கின்றன. அடுத்து, அகத்தியர், சந்திரன், சூரியன் மூவரும் நம்மை வரவேற்கிறார்கள். கர்ப்பகிரகத்தில் பால்வண்ண நாதர் சுயம்புவாக, வெண்ணிறத்தவராய் காட்சியளிக்கிறார்.

அக்னி தலம் என்பதால், நம்மை நெருங்கும் தீமைகள் எல்லாம் சாம்பலாகிவிடுவதை உணர முடிகிறது. பிராகார வலம் வரும்போது துர்க்கை, 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிமூல விநாயகர் மற்றும் பஞ்சலிங்கம் என பேரின்ம தரிசனம் காணலாம். அன்னையின் தவத்திற்கு மெச்சி காட்சி தந்த ஈசன், லிங்கோத்பவராக கர்ப்பகிரகத்துக்கு பின்புறம் உள்ளார். இங்கோயிலில் வீரஷண்முகர் மிகவும் விசேஷமானவர்.

வைகாசி விசாகத்தன்று இவருக்குக் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் மக்கள் அன்று வணங்குவர். கேட்ட வரம் தரும் ஷண்முகர் இவர். இவருடைய சந்நிதானத்தில் திருமணம் முடித்தால் வாழ்க்கையில் அனைத்துப் பேறுகளையும் பெறலாம் என்பது ஐதீகம். தொடர்ந்து சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் என வணங்கி தல விருட்சமாக களாமரத்தினை அடையலாம். அடுத்து பைரவர் தரிசனத்தை முடித்துவிட்டு வெளிபிராகாரத்தில் வலம் வரலாம்.

அங்கே அகத்திய பெருமான் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர பராசக்தி எழிற்கோல தரிசனம் அருள்கிறார். அடுத்து உதயமார்த்தாண்டேஸ்வர் மேற்கு நோக்கி இருக்க எதிரே சடையப்பர் அமர்ந்திருக்கிறாள். ஈசானமூலையில் மேலிருந்து புற்றொன்று தொங்கும் அதிசயத்தைக் காணலாம். தனிச்சந்நதியில் ஓப்பனையம்மாள். பேரழகு பொலிய காட்சியளிக்கிறாள். தன்னை வணங்குவோருக்கு எழில் தோற்றம் அருள்கிறாள்.

அன்னைக்கு ஒரு மண்டலம் பூஜை நடத்தினால், மனம் குளிர்ந்த வாழ்வும், முகப்பொலிவும், அகப்பொலிவும் பெறுவார்கள் என்பது அனுபவ நம்பிக்கை. இந்திரஜித்தைக் கொன்ற தோஷம் போக லட்சுமணன் இத்தலத்து ஈசனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். ஒரு தனிசந்நதியில் மேற்கு நோக்கி காட்சிதரும் லட்சுமண ஈஸ்வரர் இச்சம்பவத்துக்கு சாட்சியாகப் பொலிகிறார்.

இக்கோயிலில் இரண்டு லிங்கங்களும் மேற்கு பார்த்து உள்ளது, மிகவும் சிறப்பம்சமாகும். நவகிரகங்கள் மற்றும் சாஸ்தாவுக்குத் தனித்தனி சந்நதிகள் அமைந்திருக்கின்றன. சங்கரநாராயணர் கோயிலுக்கு முந்தைய புராதனமான கோயில் இது என்கிறார்கள். பால்வண்ணநாதர் பூஜைக்கு சங்கரநாராயணர் கோயில் நந்தவனத்திலிருந்துதான் மலர்கள் எடுத்துச் செல்வார்கள் என்கிறார்கள்.

இக்கோயிலில் சித்திரை தீர்த்தவாரி,  வசந்த உற்சவம், வைகாசி விசாகம், ஆனி திருவம்மானை, ஆடிப்பூரம், ஆவணித்தபசு (14 நாட்கள்), புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை பத்ர தீபம், மாசி மகா சிவராத்திரி, பங்குனி பிரமோத்ஸவம் (12 நாட்கள்), சபாபதி ஆறுகால அபிஷேக ஆராதனை. சமயக்குரவர்கள், 63 நாயன்மார்கள் குருபூஜை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பௌர்ணமி, அஷ்டமி, மாதாந்திர கார்த்திகை, செவ்வாய், வெள்ளி சிறப்பு வழிபாடுகள் என இவ்வாலயத்தில் வழிபாட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆவணி, பங்குனி மாதங்களில் தேரோட்டமும் உண்டு. இக்கோயிலில் ஸ்ரீவரதுங்கராமபாண்டியர், காஞ்சிபுரம் சிதம்பரநாத முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாயக் கவிராயர், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், காளமேகப்புலவர், சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர், எட்டிசேரி திருமலை வேற்கவிராயர், சங்குப்புலவர், மலையடிகுறிச்சி பிச்சையா நாவலர், கரிவலம் வந்த நல்லூர் ராமசாமி பிள்ளை ஆகியோர் இத்தல ஈசனைப் பாடித் துதித்துள்ளனர்.

இக்கோயிலில் எதை வேண்டி ஒரு மண்டல பூஜை நடத்தினால் போதும், கேட்ட வரம் கிடைக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, இழந்த பொருட்களை மீட்டுத்தரவல்லவர் இந்தப் பால்வண்ண நாதர்! மனநோய் உள்ளவர்களின் குறை தீர்கிறது. எச்செயலிலும் வெற்றி வேண்டுவோரின் பிரார்த்தனை பலிக்கிறது. இக்கோயில் சங்கரன்கோயில் - ராஜ பாளையம் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உண்டு. சங்கரன்கோயிலிலிருந்து ஆட்டோவிலும் வரலாம். காலை 6 முதல் பகல் 12 மணி, மாலை 5 முதல் 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். மேலும் தகவல்களுக்கு ஆலயத் தொலைபேசி எண்கள்: 9786182729, 9003703677.

படங்கள்: பரமகுமார்

முத்தாலங்குறிச்சி காமராசு