இறைவன் என்ற மூன்றாம் நபர்!



நண்பர் சற்றே முகவாட்டத்துடன் வருகிறார். அவருக்கு ஏதோ பிரச்னை. என்னவென்று விசாரிக்கிறோம். அவர் விவரிக்கிறார். உடனே அதேபோன்ற நம் அனுபவத்தை வைத்தோ அல்லது நாம் ஏற்கெனவே அதேபோன்ற பிறர் அனுபவங்களை வைத்தோ நண்பருக்கு யோசனை சொல்கிறோம். நம் யோசனை அவருக்கு ஏற்புடையதாக இருந்தால் அவருடைய முகம் மலர்கிறது, நமக்கும் நிம்மதி பிறக்கிறது. அவருடைய பிரச்னைக்குத் தீர்வு சொல்ல முடிகிறது என்று சந்தோஷம் கொள்கிறோம்.

ஆனால், நமக்கென்று ஒரு பிரச்னை வரும்போது நண்பருக்குச் சொன்னதுபோல நமக்கு நாமே சொல்லிக்கொள்ள முடியாத தயக்கம் நிலவுகிறது; குழப்பம் சூழ்ந்துகொள்கிறது. இது எப்படி, ஏன்? நண்பருடைய பிரச்னைக்கு நம்மால் மூன்றாம் மனிதராக வெளியே நின்று அதனை அலச முடிகிறது. ஏனென்றால் அந்த யோசனை சரியாக இருந்தால் அவர் பலனடைவார்;

இல்லாவிட்டால் அதுபற்றி நாம் வருத்தம் கொள்ளத் தேவையில்லை, அது அவர் பாடு! அதாவது, உணர்வுபூர்வமாக நாம் அவருக்கு யோசனை சொல்லவில்லை; அறிவுபூர்வமாகத்தான் சொல்லியிருக்கிறோம். அதே உத்தியை நம் சொந்தப் பிரச்னைக்கு நம்மால் ஏன் கைக்கொள்ள முடியவில்லை? நாம் மூன்றாம் மனிதராக அந்தப் பிரச்னையை அணுக முடியாமல், உணர்வுகளால் அலைக் கழிக்கப்படுவதால்தான். பின்விளைவுகள், பக்க விளைவுகள் என்ற நலிவு, நஷ்ட கணக்குகளால் நாம் பாதிக்கப்படுவதால்தான்.

நம்மைவிட்டு வெளியே வந்து பிரச்னைகளை அலசினால் நிச்சயமாக நம்மால் தீர்வு காண முடியும். அல்லது, வெகு அமைதியாக நம்மை கவனித்துக்கொண்டிருக்கும் இறைவனிடம் முறையிட்டால், அவ்வாறு முறையிட்டுவிட்டு அமைதியாகிவிட்டல், அந்த ‘மூன்றாம்’ சக்தி நம் பிரச்னைகளைத் தூள்தூளாக்கிவிடும்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)