மடங்கின மூன்று விரல்கள், முகிழ்த்தன மூன்று சபதங்கள்



குரு பரம்பரை வைபவம் -ஸ்ரீ ராமானுஜர்

ஆளவந்தார் காஞ்சியிலிருந்து வந்த அடியார்களிடம் ராமானுஜரைப் பற்றி கேட்க அவர்கள் பதில் சொன்னார்கள்: ‘‘ஸ்ரீராமானுஜர் யாதவப் பிரகாசரோடு இல்லை. காஞ்சிபுரம் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த பிரசாத கைங்கர்யம் செய்து வருகிறார். காஞ்சி தேவப் பெருமாளின் உள்ளம் உகக்க, கைங்கர்யம் செய்து வருகிறார்.

’’ இதைக் கேட்டவுடனே ஆளவந்தார் மிகவும் சந்தோஷமடைந்தார். நம் பிரார்த்தனையை தேவப் பெருமாள் செவி சாய்த்திருக்கிறார் என்று பெரும் உவகை அடைந்தார்.

இந்தச் சமயத்தில் ஸ்தோத்ர ரத்னம் என்கிற நூலை ஆளவந்தார் அருளினார். அதை அப்படியே பெரிய நம்பிகளிடம் கொடுத்து, ‘‘இதை காஞ்சிக்குச் சென்று ராமானுஜர் எங்கு எழுந்தருளியிருக்கிறாரோ அங்குபோய் அவர் காதுபட இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதன் பொருளை அவர் புரிந்து கொள்வார். மேலும், இங்கு நம்மை தரிசிக்கவும் வருவார்’’ என்றார். பெரிய நம்பிகள் இந்த ஸ்லோகத்தைப் பெற்றுக்கொண்டு, காஞ்சிபுரத்திற்கு வெகுவேகமாக விரைந்தார்.

தேடிச் செல்லவேண்டிய அவசியம் இல்லாதபடி சாலைக் கிணற்றிலிருந்து குடம் நிறைய தண்ணீர் நிறைத்து தோளில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார் ராமானுஜர். அவர் காதுபட ஆளவந்தார் எழுதிக் கொடுத்த ஸ்லோகத்தை பெரிய நம்பிகள் சொல்லத் தொடங்கினார். இதைக் கேட்ட ராமானுஜர் மிகவும் ஆவலோடு பெரிய நம்பிகளிடம் வந்து, ‘‘தேவரீருக்கு நமஸ்காரம், தேவரீர் யார்? எங்கிருந்து வருகிறீர்? இந்த ஸ்லோகத்தை எழுதியது யார்?’’ என்று பரம வினயத்துடன் கேட்டுக் கொண்டார்.

‘‘அடியேன் பெரிய நம்பிகள் எனப் பெயர் கொண்டவன். ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவன் திருவரங்கத்திலிருந்து வருகிறேன். இந்த ஸ்லோகத்தை அடியேனுடைய ஆசான் ஆளவந்தார் இயற்றினார். இதற்கு ஸ்தோத்ர ரத்னம் என்று பெயர்’’ என விவரமாகக் கூறினார். ஆளவந்தாரின் திருநாமத்தை தன் ஆசான் திருக்கச்சி நம்பிகள் மூலம் கேள்விப்பட்ட ராமானுஜர், ‘‘உடனே நான் அவரைப் பார்க்க வேண்டும். தரிசனம் ஆகுமா?’’ என்று வினவினார்.

அக்கணமே ராமானுஜரின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய நம்பிகள் ஓட்டமும், நடையுமாக திருவரங்கம் நோக்கிப் பயணிக்கலானார்.இதன் நடுவே, தியானம் கலைந்த ஆளவந்தார் தன் சீடர்களைப் பார்த்து, ‘திருவரங்கத்தில் பெரிய பெருமாளை விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று ஆணையிட்டார். பின்பு, சீடர்களைப் பார்த்து ‘‘ராமானுஜருக்கு சமாச்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்) செய்து வைக்கும்படி பெரிய நம்பிகளிடம் சொல்ல வேண்டும்’’ என்றார். மேலும், ராமானுஜர் இங்கு வருவார்.

அவருக்கு கட்டாயம் சரம ஸ்லோக அர்த்த விசேஷங்களை (பகவத்கீதையில் சொல்லப்பட்ட ‘ஸர்வதர்மான்’ என்கிற ச்லோகத்தை ஆன்றோர் சரம ச்லோகம் என்றழைப்பர்) ஒன்று விடாமல் திருக்கோட்டியூர் நம்பி சொல்லக்கடவது. பகவத் விஷயங்களை அருளிச் செய்யும்படி திருமாலையாண்டானுக்கும், ஸ்ரீ ராமாயண சார விசேஷங்களை விளக்கமாக சாதிக்கும்படி பெரிய திருமலை நம்பிகளுக்கும், பெரிய பெருமாள் திருவடிகளில் அடங்கியிருக்கிற விக்ரகத்தின் ரகசியத்தை அறிவிக்கும்படி திருவரங்கப் பெருமாள் அரையரையும் நியமித்தருளினார். இவ்வளவும் ராமானுஜரை உடனே சென்றடைய வேண்டும்,’’ என்று நியமித்தருளினார்.

மீண்டும் பத்மாசனத்தில் எழுந்தருளி வேதம் ஓதுவித்து, திருவாய்மொழி கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டு, ‘சூழ்விசும் பனிமுகில்’ என்கிற நம்மாழ்வாரின் பத்து பாசுரங்களை சொல்லச் செய்து, தன் ஆசார்யான் மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளை தியானம் செய்துகொண்டே வைகுண்ட பிராப்தியை அடைந்தார். ஆளவந்தார், இப்படியாக வைகுண்டத்தை அடைந்தவுடன் சீடர்கள் எல்லோரும் மண்ணில் புரண்டு அழுதனர். சரீரத்தை  திருப்பள்ளிப்படுத்தினர். பெரிய நம்பிகள் வரும்வரை எல்லோரும் காத்திருந்தனர். ஆளவந்தாரின் புத்திரர் பிள்ளையரசு நம்பியை எல்லோரும் அழைத்து இனி நடக்கவேண்டிய கருமங்களை விவரித்தனர்.

 இதற்கிடையே, ராமானுஜரை அழைத்து வந்த பெரிய நம்பிகள் பெரும் கூட்டம் இங்குமங்குமாக சென்று வருவதைக் காணலுற்றார். ஒருவரை நோக்கி, ‘‘ஏன் இவ்வளவு கூட்டம்? யாருக்கு என்னவாயிற்று?’’ என்று வினவினார். ‘‘உமக்குத் தெரியாதோ? ஸ்ரீஆளந்தார் பரமபதம் ஏகினார். திடீரென காலகதியை அடைந்தார்,’’ என்று அந்த வைணவர் கூற, உடனே பெரிய நம்பிகள் மூர்ச்சையாகி விழுந்தார். சோகமே உருவானவராகத் தென்பட்டார்.

ஏது செய்வோம்? அநாதையாகி விட்டோமே! வந்து தரிசிப்பதற்குள் காலகதியாகி விட்டாரே! எம்மை கச்சி மாநகருக்கு அனுப்பியதன் காரணம் யாதோ? உம்முடைய விரகம் அடியேன் தாங்க மாட்டேன் என்பதாலா?’’ என்று பலவாறு புலம்பியழுதார். கூடவே இருந்து அவர் வியோகமாவதை தரிசிக்க முடியவில்லையே என்று மீண்டும் மீண்டும் மூர்ச்சையாவதும், எழுந்து புலம்புவதுமாக இருந்தார்.

இவரைக் கண்ட எல்லா ஜனங்களும், ஆளவந்தாரின் ஏனைய சீடர்களும், ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுதனர். பிறகு, ஆகவேண்டியதை கவனிக்க வேண்டுமே என்று நினைத்து ஆசார்யரின் புத்திரனை அழைத்தனர். பிள்ளையரசு நம்பியும் புரியாமல் தேம்பித் தேம்பி அழுதவாறே ஆகவேண்டியதை கவனிக்க முடியாமல் கலக்கமுற்று கீழே விழுந்தார்.இவ்வாறு, ஆசான் காலகதியானால், அழலாமா, கலக்கமுறலாமா என்று சந்தேகம் தோன்றலாம்.

ஆம், தாய், தந்தையரின் விரகத்தைக் காட்டிலும், ஆசானின் விரகமே மிகவும் கொடியது. காரணம் பகவானையே காட்டித் தந்து ஞானத்தை அள்ளித்தந்த வள்ளல் அல்லவா? அதனால் அவரின் விரகம், உண்மையான சீடனால் தாங்க முடியாது. இதையெல்லாம்விட, ராமானு ஜருக்கு இந்த துக்கம் தாங்க முடியவில்லை. இத்தனைக்கும் ஒருநாள்கூட ஆளவந்தாரோடு பழகியதோ...
பேசியதோ கிடையாது.

இருப்பினும், விரகதாபம் உண்டானது ஏன் எனில் ஆளவந்தார் பகவத் ராமானுஜருக்கு ஆத்ம பந்துவாக இருந்ததுதான். அது இவருக்கே புரியும். ‘நாம் இவ்வளவு அருகில் வந்தும், தரிசனம் கிட்டவில்லையே! அதற்குள் காலகதியானாரே! நாம் என்ன அவ்வளவு பாபியா?’ என்று ஸ்ரீராமானுஜர் புலம்ப ஆரம்பித்து, அவரைப் பார்க்காமலேயே சென்று விடுவது என்று நினைத்திருக்கையில், இவரது திருவுள்ளக் குறிப்பை அறிந்த ஆளவந்தாரின் சீடர்கள் ராமானுஜரை போகவிடாமல் தடுத்தனர்.

பெரிய நம்பிகளும், தம் சோகத்தை சற்றே தள்ளிவைத்து, ராமானுஜரை ஆரத்தழுவி, ‘‘ராமனுக்கே காட்டுக்கு போகும்படி நேரவில்லையா’’ என்று ராமாயணத்தின் ஸ்லோகத்தை  விளக்கினார். பிறகு ராமானுஜரை ஆளவந்தாரின் திருமேனிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். ‘‘இப்படியாயிற்றே! பேறு கிடைக்கும் என்று எண்ணி வந்த அடியேனுக்கு அந்த பாக்யம் கூட இல்லையா? இந்த ஆளவந்தாரை ஆசார்யனாக அருளி அடியேனை ஆட்கொள்ளும்படி செய்ய திருவரங்கன் பெரிய பெருமாளுக்குத்தான் மனமில்லையா!’’ என்று பலவாறு புலம்பியழுதார் ராமானுஜர்.
பிறகு, பெரிய நம்பிகள் ஒருவாறு ராமானுஜரை தேற்றி, ÔÔவாரும்! சரம திருமேனியை (பூத திருவுடல்) வந்து வணங்குங்கள் என்று கூறினார்.

ராமானுஜரும் பாதம் முதல் கேசம் வரை வணங்கினார். அப்போது ஆளவந்தாரின் வலது கைவிரல்களில் மூன்று விரல்கள் மடங்கி இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு போனார். ‘‘ஆளவந்தாருக்கு
எப்போதும் இப்படி மூன்று விரல்கள் மடங்கித்தான் இருக்குமா?’’ என்று ஆளவந்தாரின் சிஷ்யர்களிடம் கேட்க, அவர்கள், ‘‘இல்லை, இதுவரை இப்படி காணப் பெற்றிலோம். அடியோர்களுக்கே இது புதியதாக உள்ளது’’ என்றனர்.

ஆனால், ராமானுஜர் விடாமல் கேட்கவே, ‘‘ஆளவந்தாரின் திருவுள்ளத்தில் எப்போதும், பராசர, வியாஸ பகவானைப் பற்றிய சிந்தனைகளும், நம்மாழ்வார் மீது பக்திப் ப்ரேமையும், விசிஷ்டாத்வைதபரமாக வ்யாஸருடைய பிரம்ம சூத்திரத்தில் வாஞ்சையும் உண்டாகியது. ஆனால், இவை அனைத்தையும் இந்த ஜென்ம ஆயுளில் செய்யப் பெற்றிலமே! உசாத்துணையும், காலமும் போதவில்லையே என்று பலகாலும் சொல்லக் கேட்டிருக்கிறோம்’’ என்றவுடன் பளிச்சென்று ராமானுஜர் எழுந்து கொண்டார்.

உடனே, நீரை எடுத்துக் கொண்டு ஆசமனம் செய்தார். கையை உயரத் தூக்கி பின்வரும் மூன்று சபதங்களைச் செய்தருளினார் ராமானுஜர். அந்த சபதங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல முறையே ஒவ்வொரு ஆளவந்தாரின் ஒவ்வொரு விரல்களும் பிரிந்து மற்ற விரல்களைப்போல் ஆயின. முதல் சபதம்:

‘‘மத்யே த்லிஜானாம் ஸர்வேஷாம் ஜகாதக்ஷ வசனம்ததாறு
அஹம் விஷ்ணுமதே ஸ்தித்வா ஜனான் அஞ்ஞானமோஹி தான்
பஞ்ச ஸம்ஸ்கார ஸம்பன்னான் த்ராலிடாம்ராய பாரகான்
ப்ரபந்தி தர்மநிரதான் க்ருத்வா ரக்ஷாமி ஸர்வதா’’
‘‘நான் வைஷ்ணவ மதத்தில் நின்று,

அஞ்ஞானத்தால் மயங்கி நிற்கும் ஜனங்களை, பஞ்ச சம்ஸ்காரங்கள் பெற்றவர்களாகவும், தமிழ் வேதத்தில் கரைகண்டவர்களாகவும் சரணாகதி தர்மத்தில் ஈடுபட்டவர்களாகவும் செய்து எப்போதும் ரக்ஷிக்கக் கடவேன்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மடங்கிய மூன்று விரல்களில் ஒன்று நிமிர்ந்தது.
இரண்டாம் சபதம்:
‘‘ஸம்க்ருஹ்ய நிகிலான்அர்த்தான் தத்லஜ்ஞானபரம்சுபம்
ஸ்ரீபாஷ்யம் சகரிஷ்யாமி ஜனரக்ஷணஸேதுரா’’
‘‘எல்லா சாஸ்திரார்த்தங்களையும் திரட்டி

உண்மையறிவை விளைவிப்பதாய், மங்களமானதான ஸ்ரீ பாஷ்யத்தை உயிர்கள் உய்யும் பொருட்டு இயற்றக் கடவேன்’’ என்று கூறிய மறுகணமே இரண்டாவது விரல் நிமிர்ந்தது.
மூன்றாம் சபதம்:

‘‘ஜீவேச்வராதி லோகேப்ய: க்ருபயா ய: பராசர:
ஸந்தர்சயன் தத்ஸ்வபாவான் ததுபாயகதீஸ்ததா
 புராணரத்னம் ஸஞ்சக்ரே முனிவர்ய: க்ருபாநிதி:
தஸ்ய நாம்நா மஹாப்ராஜ்ஞ வைஷ்ணவஸ்யச கஸ்யசித்
அபிதானம் கரிஷ்யாமி நிஷ்க்ரயார்த்தம் முனேரஹம்
இத்யேவம் லக்ஷ்மணாசார்யே புனர்வததி ரிச்சலே’’

 ‘‘சித், அசித், ஈஸ்வரன் இவற்றைப் பற்றியும், அடைய வேண்டியவரும் அடையும் தன்மை இவற்றைப் பற்றியும் பரம கருணையினாலே உள்ளபடி அறிவித்து, எந்த ஒரு பராசர மஹரிஷி புராண ரத்னம் என்று உலகப் ப்ரசித்தி பெற்று, போற்றப்படுகிற ஸ்ரீ விஷ்ணுபுராணத்தைச் செய்தருளினாரோ, கருணைக்கடலான அவர் பெயரை, ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ வைஷ்ணவனுக்கு (விஷ்ணுவையே போற்றும் ஒரு மகனுக்கு) பெயராக வைத்து அம் மஹரிஷியிடம் நன்றிக் கடனைத் தீர்க்கக் கடவேன் என்று சபதம் செய்த அத்தருணமே, மடங்கியிருந்த மூன்றாவது விரலும் நிமிர்ந்து விட்டது.

‘‘பொய்யல்ல இச்சபதங்கள் - இவற்றை உண்மையிலேயே செய்து காட்டுவேன் என மீண்டும் கையை உயர்த்தி சபதம் செய்தார்.அதிவிசித்திரமான இந்தப் பெரிய அற்புதத்தைக் கண்டு, அங்கு குழுமியிருந்த அனைவரும் ராமானுஜரை மஹாபுருஷராய், புருஷோத்தமனின் அவதாரமாக இருப்பவராகவே மதித்தனர். பேரறிவாளரான ராமானுஜரோ, யாமுனாசார்யருடைய (ஆளவந்தாருடைய) மடங்கிய விரல்களை, தன் சபதங்களாலேயே நிமிர்த்தி விட்டு சுற்றியிருந்தோர்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தினார்.

‘‘நான் இதுவரையில் வைஷ்ணவோத்தமரான யாமுனாசார்யரை அறியாமலிருந்தேன். இன்றாவது அவரைக் கண்டதில் எனக்குப் பேரானந்தம் உண்டானது. ஸ்ரீ வைஷ்ணவர்களே! என் செய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். இப்போது, அரங்கனுக்கு என்னிடம் சிறிதளவேனும் கருணையில்லை! ஆகையால் அந்தணர் தலைவர்களே! நான் இவ்வூரை விட்டுக் காஞ்சிபுரமே செல்கிறேன்.
மன்னிக்க வேண்டும்,’’ என்று கூறிவிட்டு அங்கிருந்த வைணவ பெருமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காஞ்சி நோக்கித் திரும்பினார்.

 ‘‘விசேஷ தர்மமறிந்த ராமானுஜரே! பக்தவத்ஸலனான அரங்கனை சேவித்து விட்டுப் பிறகு திரும்பிச் செல்லும். ஸ்ரீ ஆளவந்தாரைக் காண விரும்பி நீர் வெகுதொலைவிலிருந்து இங்கு வந்திருக்கிறீர். எமது ஆசார்யரான அவரது கதை இப்படியாயிற்றதே! அரங்கனை சேவித்து, பிறகு காஞ்சிக்கு செல்வதே சாலச் சிறந்தது’’ என பிறர் கூறினர்.

அதைக் கேட்ட ராமானுஜரோ! ‘‘அரங்க நகரில் வாழும் பெருமக்களே, அரங்கன் இங்கு எழுந்தருளியிருந்தாலும், அழகியதாய், பரமபாலனமாய் இருந்தாலும், ஸ்ரீ ஆளவந்தாரால் கைவிடப் பெற்ற இந்த ஸ்ரீரங்கம் க்ஷேத்ரத்தில், ஒரு கணமும் இப்போது வாழ என் மனம் இசையவில்லை. யாமுனாசார்யருடைய ஆசையை முளையிலேயே கிள்ளி அழித்து, என்னைத் துன்புறுத்திய கருணையில்லாத அந்த ரங்கராதனையும் நான் காணமாட்டேன்,’’ என்று பதிலுரைத்தார்.பிறகு காஞ்சிபுரம் நோக்கிப் பயணித்தார்.

(வைபவம் தொடரும்)

கோமடம் மாதவாச்சாரியார்