மலர்ந்தும் மலராத காலைப்பொழுது!



இரவு விடைபெற்றுச் செல்கிறது. பகல் மெல்ல மெல்ல வருகிறது. கிழக்கும் வெளுக்கிறது. கீழ்வானமும் சிவக்கிறது. இரண்டும் சேர்ந்து இணைந்திருக்கும் அதிகாலைப்பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் விடியல்பொழுது.

எங்கும் பனிப்பொழிவு. ‘குளுகுளு’வென்ற குளிர் நிறைந்த மாதத்தின் அழகு! இது இறைவழிபாடு நிறைந்திருக்கும் மனம் குளிர்ந்த மார்கழி மாதத்தின் தனி அழகு.இறைவன் விழித்தெழுந்ததும், அவனுடைய அருட்பார்வை தங்களின் மீது விழவேண்டும், அதனால் எல்லா நன்மைகளையும் பெறவேண்டும் என்பதற்காகப் பக்தர்கள் இந்த மார்கழி மாதத்தில் இறைவழிபாட்டில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று தன்னை ஸ்ரீகிருஷ்ணன், கீதையிலே கூறிக்கொள்கிறான். அதனால் கோபியர்கள் இந்த மார்கழி மாதத்திலே, அதிகாலைப்பொழுதிலே, யமுனையில் நீராடி கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று ‘பாவை நோன்பு’ நோற்ற அற்புத மாதம் இந்த மார்கழி.மார்கழி மாதத்தில் பக்தர்கள் விடியற்காலையிலே எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றியில் திருநீரோ, திருமண்ணோ,

திலகமோ இட்டு இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்வதற்காக ஒன்றாக இணைந்து இறைவனின் நாமங்களை உச்சரித்து, அவன் கல்யாண குணங்களை வாய்விட்டு பாடி நாமகீர்த்தனம் செய்து கொண்டும், பகவானின் பக்திப் பாடல்களைப் பாடி ‘பஜனை’ செய்து கொண்டும் தெருவழியே வலம் வந்து பயபக்தியோடு இறைவனை தரிசிக்க ஆலயத்திற்கு செல்வதை இந்த மார்கழி மாதத்திலே விடியற்காலைப் பொழுதிலே காணலாம். இது காலங்காலமாக, வழிவழியாக வந்த மார்கழி மாத இறைவழிபாடாகும்.

இந்த மார்கழி மாதத்திலே சைவர்களும் வைணவர்களும் அவரவர்களுக்குரிய இறைவனை ஒருசேர வழிபடுகின்றனர். சிவன்-விஷ்ணு இரண்டு பேரும் போற்றப்படும் மாதம் இந்த மாதம்.
மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையிலே எழுந்து, நீராடி, தூய உடைஉடுத்தி, வீட்டு வாசலில் சாணநீர் தெளித்து சுத்தப்படுத்தி, கோலமிட்டு, அந்தக் கோலத்தின் மீது சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பூசணிப்பூவை வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த சாணத்தின் மீதான  பூவை பசுமாடு மிதித்து அதன் பாதத்துளி பட்டால், லக்ஷ்மி கடாட்சம் அந்த வீட்டில் நிரம்பி இருக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீமந்நாராயணனின் நாமங்கள் பன்னிரண்டில், ‘கேசவன்’ எனும் முதல் நாமம் மார்கழி மாதத்தைக் குறிக்கிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனால் அருளப்பட்ட ‘கீதை’ என்னும் அருட்காவியம் மார்கழி மாத ஏகாதசி திதியில் உரைக்கப்பட்டதாகும். மார்கழி மாதப் பவுர்ணமியில்தான் ‘தத்தாத்ரேயர்’ அவதரித்தார். அன்றைய தினம் இவரை தரிசித்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்டதற்கு சமம். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் பிறந்தது இந்த மார்கழி மாதத்தில்தான். மகாபாரத யுத்தமும் இந்த மாதத்தில்தான் நடந்தது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாத பெருமானுக்கு நெய் சர்க்கரைப் பொங்கலிட்டு ‘கூடாரைவல்லி’ என்ற அற்புத வழிபாடு நடைபெறும். இங்கு திரு அத்யயன உற்சவமும், பகல் பத்து, ராப்பத்து என்று பெருமாளுடன் ஆழ்வார்களையும் எழுந்தருளச் செய்து ‘அரையர் சேவை’ நடக்கும். திருப்பதி, ஸ்ரீரங்கம் மற்றும் இதர விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு அதாவது, ‘வைகுண்ட ஏகாதசி’ என்ற சிறப்புமிக்க மோட்சம் அளிக்கும் சொர்க்கவாசல் வைபவம் வெகுசிறப்பாக இருக்கும்.

இதேபோல சிவாலயங்களிலும் மார்கழி மாத உற்சவங்கள் அமர்க்களப்படும். தில்லையில் ஸ்ரீநடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பு. மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, அப்பர் சுந்தரரின் தேவாரம் போன்ற சைவ சிந்தாந்தப் பாடல்களை சைவர்கள் ஒன்றுகூடிப் பாடி, மார்கழிமாத வழிபாட்டை செய்வார்கள். ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடல்களைப் பாடி கன்னிப்பெண்கள் நோன்பு இருப்பார்கள்.

இதனால் அவர்களுக்கு நல்ல கணவன் அமைவான் என்பது ஐதீகம்.ஸ்ரீராமபக்தரான ஸ்ரீஆஞ்சநேயரின் அவதாரமும் இந்த மார்கழியில்தான் ஏற்பட்டது. மார்கழி மாதத்தில் ஸ்ரீஆஞ்சநேயரை துதித்து வருபவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டாகும்.இந்த மார்கழி மாதத்தில் வரும் பல நல்ல பண்டிகைகளில் இறைவனை வழிபட்டு நற்பேறு பெறுவோம்!

-ராமசுப்பு