நலங்கள் அருளும் நாமக்கல் நாயகன்



நாமக்கல் நரசிம்மர் கோயிலிலிருந்து 250 அடி தூரத்தில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். ஆறேமுக்கால் அடி அகலம். ஒரே கல்லில் ஆனவர். ராகுவுக்கான தானியம் உளுந்து.

சனிக்குஎள். ராகுவும், சனியும் ஆஞ்சநேயருக்கு அடிமைப்பட்டவர்கள். ஆகவே இந்த இரு கிரக பாதிப்பும் உள்ளவர்கள், உளுந்து மற்றும் எள் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட வடைமாலையை அனுமனுக்கு சாத்தி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.

அனுமார் தோள் மீதமர்ந்து போருக்கு செல்லும் ராமபிரானை, ‘நாமக்குன்றமீதமர்ந்த நரசிங்கமே’ என்று அனுமனை நாமக்கல் மலையாகவும், ராமனை நரசிம்மராகவும் உருவகப்படுத்தி கம்பர் பாடியுள்ளார்.

திறந்த வெளியில் கை கூப்பி வணங்கும் ஆஞ்சநேயர், தன் அருகில் நரசிம்மர் மலை வடிவில் மேற்கூரை இன்றி இருப்பதால் தனக்கும் மேற்கூரை தேவையில்லை என்று பக்தர்கள் கனவில் வந்து சொல்லிவிட்டாராம். இத்தலத்தில் ஒரே தினத்தில் நரசிம்மசுவாமி, ரங்கநாதர், ஆஞ்சநேயர் மூவருக்கும் தனித்தனியாக தேர்த்திருவிழா நடக்கிறது.

ஆஞ்சநேயர் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. உற்சவ காலங்களில் இந்தத் தேரில் ஆஞ்சநேயர் உற்சவர் பவனி வருகிறார். ரூ.1.50 கோடியில் 2008ம் ஆண்டு உருவான தேர் இது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு தினமும் வடை மாலை சாத்துதல், அபிஷேக பூஜைக்கு பக்தர்கள் பணம் செலுத்துகின்றனர். தமிழக அனுமன் ஆலயங்களில் தங்கக்கவசம் உள்ள அனுமார் இவர் மட்டும்தான் என்கிறார்கள்.

வளங்கள் தருவான் வாயுமகன்

அஞ்சனை மைந்தனாம் அனுமன் தன் பக்தர்களைக் காக்க பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி புரிந்து வருகிறான். அவற்றில் ஒன்று, சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பஞ்சமுக அனுமன் திருக்கோயில். ராமபிரானை வீழ்த்த நிகும்பலா யாகத்தை செய்யத் தொடங்கினான் மயில் ராவணன். அதையறிந்த ராமபிரான் மயில்ராவணனை தோற்கடிக்க சரியானவர் அனுமனே என உணர்ந்து அனுமனை அழைத்து தன் சக்தியோடு ஆசியையும் தந்து அவனை அழிக்க அனுப்பினார்.

பின் கருடன், வராகமூர்த்தி, நரசிம்மர், ஹயக்ரீவர் போன்றோரும் தங்களின் சக்தியை அனுமனுக்கு அளிக்க அனுமன் விஸ்வரூபத் திருக்கோலம் எடுத்து மயில்ராவணனை வதம் செய்தார். அன்று அனுமன் எடுத்த பஞ்சமுகத் திருக்கோலத்தை நாம் இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் அனுமனின் ஐந்து முகங்களையும் ஒரே திசையில் நேரே பார்க்கும்படி அமைத்திருப்பது சிறப்பு. மூலக்கருவறையில் மேற்குப் பார்த்த சந்நதியில், ஐந்தரை அடி உயரத்தில், வலது திருக்கரங்களில் நாகம், கலப்பை, அங்குசம், கலசம், அபயமும்;

இடது திருக்கரங்களில் மரம், கபாலம், சஞ்சீவி பர்வதம், புத்தகம், கதை போன்றவற்றைத் தரித்தும் அருளே வடிவாய் எழுந்தருளியிருக்கிறார் இந்த ஆஞ்சநேயர். இந்த அனுமனின் கருட முகத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் கருட ஸஹஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள் நீங்க அருள்பாலிக்கிறார். வராக முகத்திற்கு திங்கட்கிழமைகளில் வராக ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சம் கிட்டுகிறது; கடன்கள் தொலைகின்றன.

அனுமனின் முகத்திற்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹனுமத் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் பகைவர்கள் தொல்லைகள் விலகும். நரசிம்ம முகத்திற்கு செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்ம ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் அனைத்தும் அகல்கின்றன.

 ஹயக்ரீவ முகத்திற்கு புதன்கிழமைகளில் ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் கல்வி, சொல்லாற்றல், நல்வாக்கு போன்ற நற்பலன்கள் கிட்டுகின்றன. பஞ்சமுக ஹனுமானின் மகிமைகளை சொல்லி மாளாது என்கின்றனர் பக்தர்கள்.சென்னை தாம்பரம் - வேளச்சேரி மார்க்கத்தில் மேடவாக்கம் அருகே கௌரிவாக்கத்தில் பழனியப்பா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.