புளிய மரத்தடியிலிருந்து பாசுரப் புவியாண்ட பராங்குசன்



பக்தித் தமிழ் 38

நம்மாழ்வார்!பெயரிலேயே ‘நம்ம’ என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு பக்தர்களைக் கவர்ந்துவிட்ட ஆழ்வார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் திருமாலின் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர்.

நம்மாழ்வாருக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. குருகூர் நம்பி, மாறன், சடகோபன்,பராங்குசன் அல்லது பராங்குசநாயகி, வேதம் தமிழ் செய்தமாறன் என்று விதவிதமான பெயர்களில்அவரைப் போற்றுவார்கள். இந்தப் பெயர்கள்ஒவ்வொன்றுக்கும் காரணம் உள்ளது.

‘மாறன்’ என்ற பெயரின் பொருள், மாறுபட்டவன், அதாவது, இயற்கையான விதத்துக்கு மாறுபட்டு நடக்கிறவன். காரியார்-உடையநங்கை இருவரின் மகனாகப் பிறந்த மாறன், அழவில்லை, பால் குடிக்கவில்லை. இந்த விநோதத்தைப் பார்த்து எல்லாரும் திகைத்தார்கள்.பொதுவாகக் குழந்தைகள் பிறந்தவுடன் அழும். அப்போது அழாவிட்டாலும், பின்னர் பசிக்கும்போது அழும், பால் குடித்துவிட்டுத் தூங்கும். இந்த இயற்கைகளுக்கெல்லாம் மாறுபட்டு அவர் இருந்ததால், ‘மாறன்’என்ற பெயரில் அவரை எல்லாரும் அழைத்தார்கள்.

முந்நீர் ஞாலம் படைத்த
எம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த
ஆக்கையின் வழி உழல்வேன்!
வெம் நாள் நோய்வீய
வினைகளை வேர் அறப்பாய்ந்து
எந்நாள் யான் உன்னை
இனி வந்து கூடுவனே?

‘முந்நீர்’ எனப்படும் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தைப் படைத்தவனே, எங்களுடைய முகில்வண்ணனே! நான் எப்போதோ செய்த வினைகளுக்காக, நீ எனக்கு இந்த உடலைக் கொடுத்து விட்டாய். அது என்னை எந்தப் பக்கம் இழுத்துச் செல்கிறதோ அந்தப் பக்கம் நான் சென்று சிரமப்படுகிறேன். பிறவி என்கிற இந்தத் துன்பம் எப்போது தீரும்? என்னுடைய வினைகள் வேரோடு அழிவதுஎன்றைக்கு? யான் உன் பாதத்தில் சேரும் நாள் எப்போது வரும்?

இப்படியெல்லாம் பெரியவர்கள் யோசிக்கலாம். பிறந்த குழந்தை யோசிக்குமா? பிறகு ஏன் அது அழுகிறது?குழந்தை பிறக்கும்போது, அதன் உச்சந்தலையில் ‘சடம்’ என்ற காற்று படுகிறது. உடனே, அந்தக் குழந்தை மாயையில் சிக்கிக்கொள்கிறது, அழத் தொடங்குகிறது.

நம்மாழ்வாரையும் அந்தச் ‘சடம்’ என்ற காற்று தொட வந்தது. ஆனால், அவர் கோபமாகப் பார்த்தவுடன், அந்தக் காற்று பயந்து விலகிவிட்டது. ஆகவே, சடத்தைக் கோபித்தவர் என்ற பொருளில் அவரைச் ‘சடகோபன்’ என்று அழைத்தார்கள்.

மாயையை உருவாக்கும் ‘சடம்’ என்ற காற்று படாத காரணத்தால், அவர் அழவில்லை, பால் குடிக்கவில்லை. எப்போதும்அமைதியாக இருந்தார்.ஒரு குழந்தை பால் குடிக்காமல் எத்தனை நாட்கள் இருக்கும்? இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்குப் பசிக்காதா? சாப்பிடாவிட்டால் அதன் உடல் மெலிந்து போகாதா?ஆனால், குழந்தை மாறனுக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருந்தார். அழவில்லை, பேசவில்லை, பால் குடிக்கவில்லை, வேறு எதுவும் சாப்பிடவில்லை, அப்படியே வளர்ந்தார்.

முடியானே! மூ உலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள் ஊர்
கொடியானே! கொண்டல்வண்ணா!
அண்டத்து உம்பரில் நெடியானே!
என்று கிடைக்கும் என் நெஞ்சமே.

சிறந்த திருமுடியைக் கொண்டவனே, மூன்று உலகங்களில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் சிறந்த பாதங்களை உடையவனே, ஆழ்கடலைக் கடைந்தவனே, புள், அதாவது, பறவையில்(கருடன் மீது) செல்கிறவனே, பறவையைக்கொடியாகக் கொண்டவனே, மேகவண்ணனே, தேவர்கள் எல்லாருக்கும் தலைவனே!இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு என்உள்ளம் கிடக்கிறது!

பெற்றோர் அவரைத் திருக்குருகூர்கோயிலுக்குக் கொண்டுசெல்ல, அங்கிருந்த ஒரு புளிய மரத்தடிக்குச் சென்றார் அவர். அங்கேயே பதினாறு ஆண்டுகள் தவம் செய்தார்.அதே சமயம், மாறனின் ஞானம் வளர்ந்தது. தத்துவங்கள், சாத்திரங்கள் என அனைத்தையும் அவர் கற்றுக்கொண்டார். அவரிடமிருந்து வீசிய ஒளி எல்லாரையும் கவர்ந்தது. ‘இந்தப் பிள்ளையிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது’ என்று அவர்கள்வியப்போடு பேசினார்கள்.

உள்ளம், உரை, செயல்
உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே.
மனமும் சரி, சொல்கிற சொற்களும் சரி,செயலும் சரி, இறைவனைதான் எண்ணவேண்டும், அவன் பெயரைதான் சொல்லவேண்டும், அவனுக்கு தான் பணி செய்யவேண்டும்.
அப்படி இல்லாமல், உன்னுடைய மனம், சொல், செயல் போன்றவை வேறு எங்காவது திரிந்துகொண்டிருந்தால், உடனே அதனை மீட்டுக் கொண்டு வா. அவற்றை இறைவன் பக்கம் திருப்பு!மாறனின் ஞான ஒளியை, அயோத்தியில் ஒருவர் கண்டார்.

அவர், மதுரகவி ஆழ்வார்! இந்த ஒளியைப் பார்த்ததும் மதுரகவி ஆழ்வார் திகைத்துப்போனார். இது எங்கிருந்து வருகிறது என்று யோசித்தார். அதைத் தேடிச் செல்லத் தீர்மானித்தார்.அயோத்தியி லிருந்து திருக்குருகூருக்கு வந்தார்.அங்கே, புளிய மரத்தடியில் மாறன் தவத்தில் இருந்தார். அவருடைய மேனியிலிருந்து எழும் ஞான ஒளியை மதுரகவி ஆழ்வார் பார்த்துப் பரவசப்பட்டார்.இத்தனை ஆண்டுகளாகத் தவத்தில் இருந்த மாறனை, மதுரகவிஆழ்வார்தான் விழிக்கச் செய்தார்.

அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்:
செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
மதுரகவி ஆழ்வார் ‘செத்தது’ என்று சொல்வது உடம்பைதான். அது அறிவற்ற பொருள் அல்லவா? அந்த உடம்பில் சிறியது, அதாவது உயிர்பிறக்கிறது. அந்த உடலை இயக்குகிறது. உடம்பில் உயிர் சென்று சேர்கிறது என்றால், அது பிறக்கிறது என்று அர்த்தம்.

அப்போது அது எதை அனுப வித்துக் கொண்டு எங்கே இருக்கும் என்று மதுரகவி ஆழ்வார் கேட்டார். அதற்கு நம்மாழ்வார் சொன்ன பதில்: அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!அவர் ‘அத்தைத் தின்று’ என்று சொல்வது எதை? ஒருவன் பிறக்கிறான் என்றால், அதன் காரணம் அவன் செய்த வினை. அந்த வினைகள் தீரும்வரை அவன் அந்த உடலிலேயே கிடக்கவேண்டியதுதான்.

இந்தப் பதிலைக் கேட்டதும் மதுரகவி ஆழ்வார் மகிழ்ந்தார். நம்மாழ்வாருடைய அறிவையும்பக்தியையும் கண்டு வியந்து, அவரையே தனது ஆசிரியராக ஏற்றுக்கொண்டார்.
நாடீர் நாள்தோறும்,
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம்,
வீடே பெறலாமே!

அன்பர்களே, நீங்கள் தினந்தோறும் அந்தத் திருமாலைச் சேருங்கள். இனிய மலர்களைஅவனுடைய பாதங்களில் இட்டு வணங்குங்கள், அவனுடைய பெயரைப் பாடுங்கள். இப்படிச்செய்கிறவர்களுக்கு வீடுபேறு கிடைக்கும்!சிறந்த நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தவர் நம்மாழ்வார். அவற்றின் சாரத்தைதான் அவர் தன்னுடைய நூல்களில் தந்தார் என்பார்கள். அவரை ‘வேதம் தமிழ் தந்தமாறன்’ என்று அழைப்பதுஅதனால்தான்.

நம்மாழ்வாரின் அந்த நான்கு ஒப்பற்ற நூல்கள்:
* திருவிருத்தம் (100 பாசுரங்கள்)
* திருவாசிரியம் (7 பாசுரங்கள்)
* பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)
* திருவாய்மொழி (1102 பாசுரங்கள்)
மொத்தம்: 1296 பாடல்கள்

இறைமுறையான் சேவடிமேல் மண் அளந்தஅந்நாள்மறைமுறையால் வான்நாடர் கூடி,
முறைமுறையின்தாது இலகு பூ தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்மீது இலகித் தான் கிடக்கும் மீன்பரந்த வானத்தில் நட்சத்திரங்கள் அழகாகத்திகழ்கின்றன. அவற்றைப் பார்த்தவுடன், நம்மாழ்வாருக்குத் திருமாலின் நினைவு வருகிறது.அவர் வாமன அவதாரம் எடுத்தபோது, உலகை அளப்பதற்காகப் பெரிய உருவம் எடுத்தார்.

ஓர் அடியால் பூமியை அளந்தார். இன்னோர் அடியால் வானத்தை அளந்தார்.அப்போது, வானத்தில் இருந்த தேவர்கள்திருமாலை வணங்கி மகரந்தத் தூள் நிறைந்தபூக்களைத் தூவினார்கள். அந்தப் பூக்களைப் போல் இந்த நட்சத்திரங்கள் வரிசையாக மின்னுகின்றன.இப்படி எதிலும் இறைவனைக் கண்டவர் நம்மாழ்வார். அவருடைய ஒவ்வொரு பாடலிலும்இறைவன் மீது அவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பு வெளிப்படும்.

யானே என்னை அறியகிலாதே
யானே, என் தனதே என்று இருந்தேன்,
யானே நீ, என் உடைமையும் நீயே,
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!

இறைவா, இத்தனை ஆண்டுகளாக நான் யார் என்று உணராமலே வாழ்ந்துவந்தேன். என் மீதும், என்னுடைய பொருட்கள் மீதும்தான் கவனம்செலுத்தினேன்.உன்னை உணர்ந்த பிறகு, நானும் நீதான், என் உடைமையும் நீதான் என்று புரிந்துகொண்டேன். தேவர் போற்றும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்!

‘பரன்’ ஆகிய இறைவனைத் தன்னுடைய அன்பு என்கிற அங்குசத்தால் கட்டியவர் மாறன். ஆகவே, அவரைப் ‘பராங்குசன்’ என்பார்கள். திருமால் மீது அன்பு கொண்ட பெண்ணாகத் தன்னை எண்ணிக்கொண்டு பல அருமையான பாடல்களைப்பாடியதால் ‘பராங்குசநாயகி’ என்றும் குறிப்பிடுவார்கள். அவ்வாறு நம்மாழ்வார் பாடிய அருமையான பாடல்களில் ஒன்று:

போற்றி யான் இரந்தேன்,
புன்னை மேல் உறைபூங்குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும்
திருவண் வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அம்கை
அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டு அருளீர்,
மையல் தீர்வதொருவண்ணமே!

திருமால் மீது மையல் கொண்ட பராங்குசநாயகி, புன்னை மரத்தின்மீது இருக்கும் அழகிய குயில்களைப் பார்க்கிறார். அவற்றுடன் பேசத் தொடங்குகிறார்.‘குயில்களே, உங்களைப் போற்றுகிறேன்,

உங்களிடம் ஓர் உதவி கேட்கிறேன்! சேற்றிலே வாளை மீன்கள் துள்ளி விளையாடும் திருவண் வண்டூர் என்ற திருத்தலம். அங்கே அமரர்களுக்கெல்லாம்தலைவனாகிய எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான். அவனுடைய கையில் திறன் மிகுந்த சக்கராயுதம் இருக்கிறது. அத்தகைய பெருமானை நீங்கள் கண்டு, அவனிடம் ஒரு விஷயம் கேட்டுக்கொண்டு வாருங்கள், அவன் மீது நான் கொண்ட இந்தமயக்கத்தைத் தீர்க்க, அவன் எப்போது நேரில்வருவான்? கேட்டுச் சொல்வீர்களா?’

இன்னொரு பாடலில், நம்மாழ்வார் திருமால் மீது நேசம் கொண்ட பெண்ணின் தாயாகத் தன்னை எண்ணிக்கொள்கிறார். தன் மகள் திருமாலைத் தேடிச் சென்றிருப்பது பற்றி அந்தத் தாய் சொல்லும் பாடல் இது:

பூவை, பைங்கிளிகள், பந்து, தூதை, பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத்திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்பமழைக் கண்ணொடு என்செய்யுங்கொலோ!
என் மகள் சிறு பெண். பறவைகள், பச்சைக்கிளிகள், பந்து, சிறிய மரப்பானை, பூக்கூடை வைத்து விளையாடுகிறவள். ஆனால், கொஞ்ச நாளாகவே, அவளுக்கு இந்தப் பொம்மைகளில் ஆர்வம் இல்லை. இவற்றுடன் விளையாடுவதைவிட அதிக இன்பம் திருமாலின் பெயரைச் சொன்னால் கிடைக்கும் என்று சொல்ல ஆரம்பித்தாள்.

தினமும் காலை எழுந்தது முதல் அவன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கும் என்னுடைய மகள், இப்போது அந்தத் திருமாலைத் தேடித் திருக்கோளூருக்குச் சென்றிருக்கிறாள்! குளுமையான வயல்கள் நிறைந்த திருக்கோளூருக்கு அவள் சென்றுசேர்ந்திருப்பாளா? அங்குள்ள திருமால் முன் நின்று தன்னுடைய கோவைப்பழம் போன்ற வாய் துடிக்க, கண்களில் நீர் மழை போல் பொழிய அவள் என்ன செய்கிறாளோ!

மனிசரும் மற்றும் முற்றுமாய்
மாயப் பிறவி பிறந்த
தனியன், பிறப்பிலி தன்னை,
தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியை, கரும்பின் இன்சாற்றை,
கட்டியை, தேனை, அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குளிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே!

நம்மைப் போன்ற மனிதர்கள் தாங்கள் செய்யும் வினைகளால் வேறு பிறவிகளை எடுக்கிறார்கள். இன்னொரு மனிதனாகவோ, மாடாகவோ, செடியாகவோ பிறக்கிறார்கள். ஆனால், திருமால் அப்படியில்லை.

அவன் தன்னுடைய விருப்பத்தால்தான் பிறவி எடுக்கிறான். ஆகவே, அவனுக்கு இணை யாரும் இல்லை! அப்படிப்பட்ட இறைவனை, பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் பிரானை, கனியை, கரும்புச் சாற்றை, இனிப்புக் கட்டியை, தேனை, அமுதை வணங்குங்கள், போற்றுங்கள், அருள் மழையில் குளித்து மகிழுங்கள்! அப்படிச் செய்கிறவர்களுக்கு எல்லா ஞானமும் கிடைக்கும். அனைத்தையும் உணர்ந்து சிறப்பாக வாழ்வார்கள்!

ஓவியங்கள்: வேத கணபதி


மனமும் சரி, சொல்கிறசொற்களும் சரி, செயலும் சரி, இறைவனைதான் எண்ணவேண்டும், அவன் பெயரைதான் சொல்லவேண்டும், அவனுக்கு தான் பணி செய்யவேண்டும்.

(தொடரும்)