ஓஷோ மறைந்திருக்கும் உண்மைகள்



பிரபஞ்ச குடைராட்டினத்தில் சூரியனே பிரதானம்

சோதிடத்தை சரியாகப் புரிந்துகொண்டால், உலகம் ஒரே குடும்பம் என்பதை உணரலாம். ஆணவத்திற்குள்ளும் பெருமைக்குள்ளும் சிறைப்பட்டு கிடக்க வேண்டிய அவசியமே இல்லை.
சோதிடத்தின் பலமான அடி ஆணவத்தின் மீதுதான் விழுகின்றது. சோதிடம் சரியானது என்றால், ஆணவம் தவறானதுதான். இதை இன்னொரு வகையில் புரிந்துகொள்வோம்.

சோதிடம் தவறானது என்றால், அப்புறம் எதுவுமே சரியில்லை, ஆணவத்தைத் தவிர என்று ஆகிவிடும். சோதிடம் சரியானது என்றால், உலகம் சரியானது; நான் தனித்தீவு என்பது தவறானது.

நான் வெறும் அற்பம். உலகின் தூசு. கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அற்பம். சோதிடம் சரியானது என்றால், நானே அங்கு இல்லை. மாபெரும் சக்திப் பிரவாகத்தில், நானொரு சிற்றலை மட்டுமே.

ஒரு பேரலை மீது நாம் நீந்தும்போது, நம்மை நாம் பெருமையாக, உயர்வாக நினைத்துக் கொள்கிறோம். பெரிய அலையை மறந்தே போகிறோம். அந்தப் பேரலை, மாபெரும் கடல் மேல் உருவாகி வீசுவதையும் மறந்து விடுகிறோம்.

 கீழே, கடல் காணாமற்போனால், அலையும் இல்லாமற்போய்விடும். நாமும் இல்லாமற்போய் விடுவோம்.காரணமில்லாமல், நாம் காணாமற்போவது பற்றிக் கவலைப்படுவோம். நமக்குத் தனி இருப்பு இருக்கின்றது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் மகிழ்ச்சியடைய திட்டமிட்டிருப்பதால்தான், அந்த கவலை ஏற்படுகிறது.

இருப்பதெல்லாம் மாபெரும் கடல், ஒரே பேரலை, நம் விருப்பத்தால் அல்லாமல், கடலின் விருப்பத்தால் நாம் மேலுயர்ந்தோம். கடல் விரும்பினால் நாம் சாவோம்... என்பது புரிந்தால் நல்லது.

பிரபஞ்சத்தின் மாபெரும் வடிவமைப்பில், நாம் ஒரு சிறு பகுதி, என்பதை நாம் உணர்ந்துவிட்டால், அப்புறம் கவலைக்கே இடமில்லை. அந்த மனோபாவம் ஏற்பட்டு விட்டால், நாம் எதை மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அந்தப் போலி மகிழ்ச்சியும் இல்லாமற் போய்விடும்.

‘நான் வென்றேன்; நான் சாதித்து விட்டேன்,’ என்னும் எண்ணங்களால் ஏற்படும் மகிழ்ச்சியும் இல்லாமற்போகும். ‘நான் சாகப் போகிறேன், நான் தொலைந்தேன்,’ என்ற துயர எண்ணங்களும் இல்லாமற்போகும்.இன்பமும், துன்பமும் இல்லாதபோது, நாம் எதார்த்த உலகில் பிரவேசித்து விடுவோம்; இன்றியமையாத அம்சத்தை நெருங்கி விடுவோம். அங்கே பரவசம் மட்டுமே இருக்கும். அப்போது, சோதிடம், பரவச நிலைக்கான வாயில் ஆகிவிடும்.

சோதிடம் நம் பெருமையை கரைப்பது, ஆணவத்தைத் தகர்ப்பது என்பதை நாம் கண்டுகொண்டால், அப்போது சோதிடம், சமயம் ஆகிவிடும்.ஆனால், நாம் சாதாரண சோதிடரிடம் சென்று, “நான் நஷ்டமடைந்து விடுவேனா? லாட்டரியில் பரிசு விழுமா? புதிய வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா?’’ என்றெல்லாம் கேட்கிறோம்.அந்த வினாக்கள் எல்லாம் நமது ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே கேட்கப்படுகின்றன. ஆனால், சோதிடமோ, ஆணவத்திற்கு எதிராக நிற்கிறது.

சோதிடத்தின் முக்கியத்துவம் இதுதான். ‘நீ இல்லை, பிரபஞ்சம் இருக்கிறது. நீ இல்லை, உலகம் இருக்கிறது. மாபெரும் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் நீ அற்பம்.’
இந்த வெளிச்சத்தில்தான் சோதிடத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தப் பூமியின் உள்ளார்ந்த உறுப்பு நாம் என்பதை உணர வேண்டும். சூரிய குடும்பம் முழுவதும் கதிரவனோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்று, நான் சொன்னது இதனால்தான். இதை உணர்ந்தால் நமது கதிரவன், பிரபஞ்ச வெளியில் உள்ள, பல மாபெரும் கதிரவன்களோடு, தொடர்புகொண்டு, பிணைப்புண்டு கிடப்பதை அறியலாம்.

நானூறு கோடிச் சூரியன்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அவை எல்லாமே, ஒரு மகா சூரியனிலிருந்து உதித்தவை என்றும் கூறுகிறார்கள். அந்த மகா சூரியன் எங்கிருக்கிறது என்று நமக்குத் தெரியாது. நமது பூமி தனது அச்சில், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, அதேசமயம் கதிரவனையும் எவ்வாறு சுற்றி வருகிறது என்பதும் நமக்குத் தெரியாது. நமது சூரிய குடும்பமே, கதிரவனை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருப்பதும் எவ்வாறு என்பது நமக்கு தெரியாது.

ஒரு மாபெரும் ‘பிரபஞ்ச குடை ராட்டினம்’ சுற்றிக்கொண்டே இருக்கிறது!இந்த கோயில்களில், கருவறையைச் சுற்றி ஒரு பிராகாரம் இருக்கிறது. இந்த உள் சுற்று நடைபாதை, ஒரு குறியீடு எல்லாமே தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, வேறு எதையோ ஒன்றைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டும் குறியீடு.இந்த இரண்டும் ஒன்றாக மூன்றாவது ஒன்றைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த மூன்றும் சேர்ந்து நான்காவது ஒன்றைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்படியே சுழற்சி விரிவடைந்துகொண்டே போகிறது என்றென்றும்...

எல்லையற்றதன் இறுதி மையத்தை உணர்ந்தவர்கள் அதை, ‘பரிபூரண எதார்த்தம்’ அல்லது ‘பிரம்மம்’ என்கிறார்கள். அந்த இறுதி மையம் சுழல்வதும் இல்லை, இன்னொன்றைச் சுற்றுவதும் இல்லை.தன்னைச் சுற்றிக்கொள்வது எதுவும், இன்னொன்றையும் சுற்றி வரும். தன்னைச் சுற்றாமையும், மற்றொன்றைச் சுற்றி வராமையும் கொண்டது. இறுதி எதார்த்தம் அதுதான் பரிபூரண மௌனம். அல்லது சூன்யம். இந்த அச்சை மையமாகக் கொண்டே, பிரபஞ்சங்கள் விரிவடைகின்றன; சுருங்குகின்றன.

மொட்டு மலராகிறது. அந்த மலர் வாடி உதிர்கிறது. அதுபோலவே, பிரபஞ்சம் விரிவடைந்து, உடைத்து சிதறுகின்றது. நமக்கு இரவு, பகல் இருப்பதுபோலவே, பிரபஞ்சத்திற்கும் இரவு, பகல் உண்டு. என்று இந்துக்கள் நினைத்தார்கள்.நான் முன்பு குறிப்பிட்டதுபோல, பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தொண்ணூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப நிகழும் சுழற்சி இருந்து வருகின்றது.

அதேபோல, ஒரு லட்சம் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஒரு லட்சம் கோடி கோடியாண்டுகளுக்கு ஒருமுறையும் வரும் சுழற்சிகளும் உண்டு, என்று இந்துக்கள் நினைத்தார்கள்.

அப்படிப்பட்டதொரு சுழற்சியின்போது தான் பிரபஞ்சம் பிறந்தது; வளர்ந்தது. அப்புறம் முதுமையடைகிறது. இதில் பூமி பிறந்தது; விண்மீன்களும், நிலாக்களும் பிரபஞ்ச வெளியில் பரவின. பூமியில் மனிதர்கள் தோன்றினார்கள், பெருகினார்கள்; கோடிக்கணக்கான புழுப்பூச்சி பிராணிகளும் பிறந்தன.

இந்த உயிரின் தோற்றம் பூமியின் மீது மட்டுமல்ல உயிர்கள் வாழும் கிரகங்கள், பிரபஞ்ச வெளியில் குறைந்தது ஐம்பதினாயிரம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குறைந்தபட்சக் கணக்கு இது; அதிகமாகவும் இருக்கலாம்.எல்லையற்ற இந்தப் பிரபஞ்ச வெளியில், ஒன்றில் மட்டுமே உயிர்கள் இருப்பது சாத்தியமில்லை. ஐம்பதினாயிரம் கிரகங்களிலோ, பூமிகளிலோ உயிர்கள் இருக்க வேண்டும். இது எல்லையற்ற பெருவெளியாயிற்றே!

அப்புறம் எல்லாமே சுருங்க ஆரம்பிக்கும்!
ஆரம்பத்தில் பூமி இருக்கவில்லை. இறுதிவரை இது இருக்கவும் முடியாது!
 நான் பிறந்தேன்;
வளர்ந்தேன்; இறுதியில் இல்லாமற்போவேன்.
பூமியும், கதிரவனும் அப்படித்தான், பிறகு இல்லாமற்போகும்.
விண்மீன்களும் கிரகங்களும் இல்லாமற்போகும் காலம் ஒன்று வரும். அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி, தொடர்ந்து இருந்துகொண்டே இருக்காது.
தன்னைத்தானே சுற்றிக்கொண்டும்,

கதிரவனைச் சுற்றிக்கொண்டும் இருக்கும் பூமியில் நாம் மிகச்சிறிய புள்ளி; அற்பம். இப்படியிருந்தும், நாம் தனி என்று நினைத்தால், முல்லா நஸ்ருதீன் செய்ததுபோல் ஆகிவிடுவோம்.

முல்லா நஸ்ருதீன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பியது. அது பறக்க ஆரம்பித்ததும், முல்லா, இருக்கையை விட்டு எழுந்து, இருபக்க இருக்கைகளுக்கு நடுவிலிருந்த நடைபாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தார்!எங்காவது அவசரமாகப் போக வேண்டியிருந்தால், அவர் அப்படித்தான் வேகமாக நடப்பது வழக்கம். இப்போது, விமானத்திலும் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
சக பிரயாணிகள் அவரை விசாரித்தார்கள்.

“எனக்கு ரொம்ப அவசரம்,’’ என்றார் முல்லா!
அவர் அப்போதுதான் முதன் முதலாக விமானத்தில் பறக்கிறார் தரையில் செய்த அதே காரியத்தை, தரையின் தர்க்கத்தை விமானத்திலும் கடைப்பிடித்தார். அப்படி நடப்பதால் பயனில்லை. சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிட முடியாது என்பது அவருக்குத் தெரியவில்லை.விமானம் தரையிறங்கி, அவர் சேர வேண்டி
ய இடத்தை அடைந்தபோது... அவரால் நிற்கக்கூட முடியவில்லை! அவ்வளவு களைப்பு!
கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. இதை விமானத்தில் செய்திருக்க வேண்டும். விமானம் புறப்பட்டதும், இருக்கையில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி ஓய்வெடுத்திருக்க வேண்டும்.

சொன்னால் கேட்டிருப்பாரா? அவர் மட்டும் அல்ல, எந்தப் பண்டிதரும் அம்மாதிரி அறிவுரையைக் காதில் கேட்டுக்கொள்ளவே மாட்டார்கள்.இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில், பூமியின் சுழற்சியில் யார் ஓய்வாக, நிம்மதியாக, இருக்கிறாரோ, அவரே சமயப் பண்புமிக்க மனிதர் என்று நான் சொல்வேன்.பிரபஞ்சம் இடையறாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவசரப்படத் தேவையே இல்லை. அவசரப்பட்டுப் பயனும் இல்லை என்பதை அறிந்தவரே, சமயப் பண்பு கொண்டவர்.

பிரபஞ்ச இயக்கத்தோடு ஒன்றிணைந்து
ஒத்திசைந்துப் போனால் போதும் - அதுவே பரவசம்.
சோதிடம் பற்றிச் சிலவற்றைச் சொன்னேன்.
அவற்றில் நீங்கள் விளங்கிக்கொண்டால்,
ஆன்மப் பேற்றிற்கு சோதிடம் வாயில் ஆகும்.
(அடுத்த இதழிலிருந்து ஓஷோ உள்முகப்
பயணம் மேற்கொள்கிறார்; நம்மையும் தம்முடன் அந்த பயணத்துக்கு அழைக்கிறார்)
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.