வலிப்பு நோய் தீர்வு என்ன?
சாலையில் நன்றாக நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர் திடீரென கீழே விழுந்து கை கால்கள் வெட்டி வெட்டி இழுத்து தன் சுய நினைவின்றி கிடப்பதை சில நேரங்களில் பார்த்திருப்போம். இதனை காக்காய் வலிப்பு நோய் என்று கூறப்படுகிறது. இப்படி திடீரென பாதிக்கக்கூடிய இந்த நோய் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை.
 இதன்காரணமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமை அன்று சர்வதேச கை- கால் வலிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வலிப்பு நோய் எதனால் வருகிறது, இதற்கு தீர்வு என்ன என்பதைப் பார்ப்போம்.
வலிப்பு நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?
வலிப்பு என்பது எபிலெப்சி என்று ஆங்கிலத்திலும், காக்காய் வலிப்பு என்று தமிழிலும் கூறப்படுகிறது. இது ஒரு நரம்பு மண்டல நோய். அதாவது, மூளை நரம்புகளில் இருந்து புறப்படும் மின்சாரமானது சரியாக வேலை செய்யாதபோது ஏற்படும் பாதிப்பே வலிப்பு நோய். இதனால், சிலருக்கு கை-கால் செயல்திறன் குறைபாடு, சிலருக்கு மரத்துப் போதல், ஒரு சிலருக்கு சுய நினைவு இல்லாமல் இருப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நரம்பு மண்டலம் என்பது நியூரான் எனப்படும். சிறிய நரம்பு செல்களால் பின்னப்பட்ட ஒரு வலை போன்றது. மூளை, தண்டுவடம், நரம்புகள் எல்லாம் அடங்கியதுதான் இந்த நரம்பு மண்டலம். இதன் முக்கியமான பணி, தசை அசைவுகள், தொடு உணர்ச்சிகள், பல்வேறு உறுப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை ஆகும். நியூரான்களின் மின் அதிர்வுகள் சில காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலையில் இயங்குகின்றன.
ஆனால், வலிப்பின் போது, இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, மின் அதிர்வுகள் அளவுக்கு அதிகமாக உருவாக, அருகருகே உள்ள நரம்புகளுக்குப் பரவுவதால், மூளைக்குள் ஒரு மின் புயல் உருவாகிறது. அதுவே வலிப்பு வரக் காரணமாகிறது. வலிப்பு நோய்க்கான பரிசோதனைகள் என்னென்ன?
பொதுவாக இந்த வலிப்பு நோயாளிகளின் வலிப்பின் வகையறிதலே சவாலானது. வலிப்பு நேரும்போது நோயாளி தன் சுயநினைவை இழந்துவிடுவதால் அவருக்கு என்ன செய்தது என்பது அவருக்கே தெரியாது.
இதனால் அவரால் முழு சம்பவத்தையும் விவரிக்க இயலாது. எனவே, அவருக்கு என்ன வகை வலிப்பு என்பதை அறிவதில் சிரமம் உண்டு. மேலும், ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அதனை நேரில் கண்டவர்களோ, அருகில் இருப்பவர்களோதான் அவருக்கு என்ன நேர்ந்தது என்று விவரிக்க முடியும்.
அவர்கள் கூறுவதை வைத்துதான் வந்தது வலிப்புதானா,, எந்த வகை வலிப்பு.. என்ன காரணங்களால் ஏற்பட்டது என்று கண்டறிய வேண்டும். அதைக் கொண்டு பரிசோதனைகள் தொடங்க வேண்டும். இதற்கு ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி, எக்கோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகள் வலிப்புக்கான காரணங்களை கண்டறிய உதவுகிறது.
ஒருவேளை வலிப்புக்கு தொற்றுநோய், மூளைக்காய்ச்சல் காரணமா என்பதை கண்டறிய முதுகில் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரை எடுத்து (LUMBAR PUNCTURE) போன்ற பரிசோதனைகளும் செய்யப்படும்.
மேலும், வலிப்பு நோயறிதலில் மிக முக்கியமான, எளிமையான, மலிவான, பயம் இல்லாத ஒரு பரிசோதனை ஈஈஜி (Electro ENCEPHALOGRAM) ஆகும். இதன் மூலம், மூளையின் மின் அதிர்வுகளைப் பதிவு செய்து, வலிப்பு நோய் பற்றி அறிய முடியும். நோயாளி அமர்ந்திருக்கும் போதும், தினசரி வேலைகளைச் செய்யும் போதும் அம்புலேடரி போர்டபிள் மெஷின் மூலமாகவும் ஈஈஜியை பதிவு செய்ய முடியும்.
வீடியோ ஈஈஜி டெலிமெட்ரி மூலம் ஒரு நாள் முழுதும் நோயாளியையும், மூளை மின்னதிர்வுகளையும் பதிவு செய்து, வலிப்பு மற்றும் வலிப்பு போன்றே வரும் மற்ற நோய்களையும் பிரித்தறிய முடியும். வலிப்பு நோய்களையும் அதன் காரணங்களையும், மன உளைச்சலால் வரக்கூடிய பொய் வலிப்புகளையும் (PSEUDOSEIZURES), பிறந்த குழந்தைக்கு வரும் வலிப்பு (Neonatal) வலிப்புகளையும் கண்டறிய ஈஈஜி முக்கியமானது.
இதுதவிர, எம்.ஆர்.ஐ. இவ்வகை ஸ்கேன் மிகவும் சக்தி வாய்ந்த காந்தப் புலத்தைப் (Magnetic Field) பயன்படுத்தி மூளை மற்றும் வேறு திசுக்களின் அதிர்வலைகளை கம்ப்யூட்டர் மூலம் முப்பரிமான பிம்பங்களாகப் பதிவு செய்ய முடியும்.
வலிப்பு நோயைப் பொருத்தவரை எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன்களைவிட, அதிக விபரங்களை அளிக்க வல்லது அதிலும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை. மூளையின் எந்தப் பகுதியிலிருந்து வலிப்பு உருவாகிறதோ, அந்தப் பகுதியின் ரத்த ஓட்டத்தை (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதை) என்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றது. வலிப்புநோய்க்கான தீர்வு..
வலிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர, மருந்துகளை அவசியம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சில கட்டுக்கடங்கா வலிப்புகளுக்கு, வாழ்நாள் முழுவதும் கூட மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான்.
ஒருவருக்கு வலிப்பு வரும்போது செய்ய வேண்டியவை..
ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டால், கூச்சலிடாமல் அமைதியாக அவரை கையாள வேண்டும். முதலில் அவரை படுக்க வைக்க வேண்டும். பின்னர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால், அதை கழற்றிவிட வேண்டும்.
பின்னர், உடைகளை சற்று தளர்த்தி விட வேண்டும். ஒருகளித்து பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது அவரது வாயில் இருந்து வெளியேறும் எச்சில், நுரை போன்றவை வெளியே வர சுலபமாகும். நோயாளி முட்டி மோதி அடிபடுவதை தவிர்க்க அருகில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சிறிய தலையணை அல்லது துணி முடிப்புகளை தலைக்கு அடியில் வைக்கலாம்.
அடிபட்டிருந்தாலோ, ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடித்தாலோ அல்லது நிற்காமல் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தாலோ, வலிப்பு நின்ற பிறகும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களையோ, ஆம்புலன்ஸையோ உதவிக்கு அழைக்க வேண்டும்.
செய்ய கூடாதவை
நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது. ஏனென்றால் நோயாளிக்கு காற்றோட்டமான சூழல் மிகவும் அவசியம். வாயில், பற்களுக்கிடையில், எந்த ஒரு பொருளையும் (ஸ்பூன், கட்டை, கை) வைக்கக் கூடாது. இரும்பு கம்பிகள், சாவிக்கொத்து போன்ற கூர்மையான பொருளை நிச்சயமாக கொடுக்கக் கூடாது. வெட்டி இழுக்கும்போது இது போன்ற ஆயுதங்கள் நோயாளியின் கண்களையோ, வேறு பகுதியையோ குத்தி ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உண்டு.
முக்கியமாக இரும்பு போன்ற உலோகங்கள் வலிப்புகளைக் கட்டுப்படுத்தும் என்பது மிகவும் தவறானது.வெட்டி இழுக்கும் கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பை நிறுத்த முயற்சிக்கக் கூடாது. முழு சுய நினைவு வரும் வரை, நோயாளிக்கு எதுவும் குடிக்கவோ, சாப்பிடவோ கொடுக்கக் கூடாது.
மூளை நரம்புகளின் மாறிய அதிர்வுகள் அல்லது மாற்றி செலுத்தப்படும் மின் அதிர்வுகளே வலிப்புக்கான காரணம் என்பது ஆராய்ச்சிப் பூர்வமாக உணர்த்தப்பட்டுள்ள உண்மை ஆகும். மற்றபடி வலிப்புநோய் ஒரு சாபக்கேடோ, வாழ்வின் முடிவோ அல்ல. வலிப்புகளை மீறி வெற்றிகளைக் குவித்த சாதனையாளர்களும் உள்ளனர்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|