கண்களின் குறைபாடுகளும் தீர்வும்!
கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள் என்பார்கள். ஐம்புலன்களில் கண்களே முதன்மையானது. நாம் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் மூளைக்குப் பிரதானமாய் இருப்பது கண்களே என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.  இந்தக் கண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் எதிரில் உள்ள காட்சிகளையும் அருகாமையிலுள்ள பொருட்களையும் தெளிவாகப் பார்த்து உணர முடியும். எனவே, நல்ல பார்வைக்கு ஆரோக்கியமான கண்கள் அவசியமாகும். அவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். அந்தவகையில், கண் குறைபாடுகள் குறித்தும், கண் பரிசோதனைகள் குறித்தும் தெரிந்து கொள்வோம். கண் குறைபாடுகள்
இயல்பான நிலையில் தூரத்தில் உள்ள பொருட்களில் இருந்து வரும் பார்வை இணைக்கதிர்கள் கருவிழி மூலம் ஊடுருவி விழிலென்சினால் மடக்கப்பட்டு விழித்திரையில் குவிகிறது. அதனால் நமக்கு என்ன பொருளைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் சிலருக்கு அதாவது குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு கண் கோளம் நீளமாகவோ அல்லது நீளம் குறைந்து குறுகியோ இருக்கும்.
கருவிழியின் முன் வளைவுப்பகுதியின் (corneal curvature) அளவைப் பொறுத்தும் இணைக்கதிர்கள் (ஒளிக்கதிர்கள்) விழித்திரையின் முன்னால் அல்லது பின்னால் விழும். இது ஒளிவிலகல் பிழை எனப்படு்ம். இதற்குக் காரணம் கருவிழியின் அமைப்பும் கண்ணின் அமைப்புக் குறைபாடும்தான். நீளம் அதிகமாக இருந்தால் பார்வை இணைக் கதிர்கள் விழித்திரையின் முன்னால் விழும். இந்நிலையே கிட்டப்பார்வை எனப்படும்.
கண் அச்சுக்கோளத்தின் நீளம் குறைவாகவும் சிறிய கோளமாகவும் அமைந்திருந்தால் பார்வை இணைக்கதிர்கள் விழித்திரையின் பின்னால் விழும். இதனை எட்டப்பார்வை என்பர். பார்வை இணைக்கதிர்கள் விழித்திரையின் முன்புறமோ அல்லது பின்புறமோ அல்லது விழித்திரையின் மேல் ஒரு புள்ளியாக குவியாமல் சிலருக்கு பார்வை சிதறல் ஏற்படுகிறது. இதற்கு பெயர் சமச்சீர் அற்ற பார்வை.
சிலருக்கு கிட்டப்பார்வையும் சமச்சீர் அற்ற பார்வையும் சேர்ந்து இருக்கும். வேறு சிலருக்கு தூரப்பார்வையும் சமச்சீரற்ற பார்வையும் சேர்ந்து இருக்கும். கருவிழியின் வளைவுப்பகுதியின் மாற்றமும் இதற்குக் காரணம். இக்குறையையும் கண்ணாடி அணிந்து சரிசெய்யலாம்.
கிட்டப்பார்வைக்கான அறிகுறிகள்
தூரத்திலுள்ள உருவங்கள் சரியாகத் தெரியாது. தூரத்தில் வரும் பஸ் நம்பர் தெரியாது. எதிரே வரும் ஆட்கள் தெளிவாக தெரிய மாட்டார்கள். ஆனால் அருகிலுள்ள உருவங்கள் மட்டும் தெளிவாக தெரியும்.கண்ணை சுருக்கிப்பார்த்து பார்வைத்திறனை அதிகரித்து அதனால் பார்க்கும் உருவங்கள் ஓரளவிற்கு தெளிவாகத் தெரியும்.ஆனால் நாளடைவில் தலைவலி, கண்சோர்வு ஏற்படும்.
சிகிச்சை
கண் மருத்துவரிடம் காண்பித்து, பரிசோதனை மேற்கொண்டு அறிவுரைப்படி கிட்டப்பார்வைக்கு குழிலென்ஸ் அணிந்தால் சரியாகும்.
எட்டப்பார்வை அறிகுறிகள்
அருகிலுள்ள பொருட்கள் உருவங்கள் தெளிவாகத் தெரியாது. தூரத்தில் உள்ள பொருட்கள் உருவங்கள் சிறிது தெளிவாகத் தெரியும்.அருகிலுள்ள உருவங்களின் பிம்பங்கள் விழித்திரைக்குப் பின்னால் விழுவதால் இவர்கள் கண்ணை சுருக்கிப் பார்த்து சரி செய்து கொள்வார்கள்.நாளடைவில் அதனால் தலைவலி வரும். கண் சோர்வு ஏற்படும்.
சிகிச்சை
கண் பரிசோதனை செய்து குவிலென்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
சமச்சீரற்ற பார்வையின் அறிகுறிகள்
உருவங்கள் மங்கலாக, தெளிவில்லாமல் தெரியும்.
சிகிச்சை
தலைவலி ஏற்படும். சிலிண்டர் பவர் கண்ணாடி அணிந்தால் தெளிவான பார்வை கிடைக்கும்.
பரிசோதனை
கண் மருத்துவரிடம் எப்போது கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் உடனே கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
*பார்வை மங்கலாகத் தெரிதல் *திடீரென பார்வை இழப்பு *பார்வை படிப்படியாகக் குறைந்துவரும் நிலை. *40 வயதில் அருகிலுள்ளவற்றைப் பார்க்க முடியாமலும் புத்தகங்கள், செய்தித்தாள்களைப் படிக்க முடியாமலும் தூரத்தில் வைத்துப் படிக்கும் நிலை. *கண்கள் சிவப்பு மற்றும் கண்வலி
*தலைவலி *கண்களில் நீர்வடிதல் *கண்களில் அரிப்பு *இரட்டைப் பார்வை *விழி பிதுக்கம் *சர்க்கரைநோய் உள்ளவர்கள்
*வண்ணநிற ஒளிவட்டங்கள் தெரிதல் *மின்வெட்டுதல் போல் உணர்வு *பார்வையில் கறுப்புத்திட்டுகள், நூலிழைவு அசைவது போன்ற உணர்வு *ஸ்டிராய்ட், கார்டிசோன், குளோரோகியுன் போன்ற மருந்துகளை பல மாதங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள். *குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்
*பிறந்த குழந்தைக்கு, கண்ணில் நீர் வடிந்தால், *கண்ணில் காயங்கள் ஏற்படும்போது *பார்வை தெரிந்தாலும், வளைவாக, நெளிவாக தண்ணீருக்குள் பார்ப்பது போன்ற நிலை. மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் ஒன்று இருந்தாலும், கண் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
கண்களை பாதுகாக்கும் முறைகள்
*தினமும் சில அத்தியாவசிய கண் பராமரிப்பு பழக்கங்களை கடைபிடித்து கண்களை கவனித்து வந்தால் கண் பிரச்னைகளை எளிதில் தவிர்க்கலாம். கண்களை எவ்வாறு பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம். *அடிக்கடி கண்களை கைகளால் தேய்க்கக் கூடாது. *அடிக்கடி கை கழுவி பழக வேண்டும். *உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.
*சூரிய ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டும். *புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். *பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிறைந்த சீரான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். *கணினி வேலையில் இருப்பவர்கள் கம்ப்யூட்டர் மானிட்டர்களில் இருந்து ஒரு கை நீளம் அளவு தள்ளி இருக்க வேண்டும். *தினசரி போதுமான அளவு தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|