காதல் போயின்... BREAK-UP management
அகமெனும் அட்சயப் பாத்திரம்
கடந்த இதழில்’ ஹார்மோன்களின் விளையாட்டா?’ என்ற தலைப்பில் லவ் என்றால் என்னவென பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக காதல் என்பதன் உளவியல் எப்படிப்பட்டது என்பதைப் பார்த்துவிடுவோம்.  உளவியலில் சிக்மென்ட் ஃப்ராய்டு அவர்கள் குறிப்பிடும் பாலின மனவளர்ச்சிக் கட்டங்களில் (Psychosexual development stages) ஒன்று Phalic பருவம். மூன்று வயது முதல் ஐந்து வரையிலான காலகட்டம் இது. இந்தப் பருவத்தில்தான் பாலின உறுப்புகள், எதிர் பாலினம் குறித்த வேறுபாடு, மகனுக்கு - தாய் மகளுக்கு தந்தை என எதிர் பால் பெற்றோர் மீது ஈர்ப்பு போன்றவை ஏற்படுகின்றன. 
இந்த நிலையில் ஏற்படும் பிடிப்பு மற்றும் புறக்காரணிகளின் பாதிப்புகள் மனதில் தங்கி விடுகின்றன. இவற்றால் வளர்ந்தபிறகும் ஆண்மகன் தாயை அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்படலாம். வளர்ந்து திருமணமாகி தாயான பின்னும் ஒரு பெண் ‘தந்தையின் குட்டி இளவரசி’ (Dad ‘s little princess) என்ற மனநிலையிலேயே இருக்கக்கூடும்.  இந்நிலை தீவிரமடையும்போது காதலி /மனைவியிடம் தன் தாயைப் போன்ற குணங்களைத் தேடுதல், காதலன் / கணவன் தந்தையைப் போல் தன்னைப் பார்த்துக் கொள்வதில்லை என்று குறைபட்டுக் கொள்வது நேரும்.இவ்வாறு துணையிடம் இன்னொருவரைத் தேடும்போது ஏற்படும் ஏமாற்றம் காதலை மெல்ல மெல்ல அழித்துவிடும். தாய் தந்தை உறவு முற்றிலும் மாறுபட்டது என்பதை உணர வேண்டும்.அதே போல், அக்கா,தங்கை,அண்ணன், தம்பி, நண்பர்கள் என ஒவ்வொரு உறவுக்கும் வேறுபட்ட இயல்புகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது அவரவர் இயல்பில் ஏற்றுக்கொள்ளும் நேர்மறையான மனப்பக்குவம் ஏற்படும். ஒருவர் அதிகமாக விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது, இன்னொருவர் ஆளுமை செலுத்துவது என்ற இருவிதமான தன்மைகள் நிச்சயம் காதலில் இருக்கத்தான் செய்யும்.
அது தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்க சில நேரம் உதவலாம். ஆனால், உண்மையான நீண்ட காலம் நிலைக்கும் காதலாக அது இருக்காது. ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசாமல் இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் கூட பல காதல்களில் இன்று பூர்த்தியாவதில்லை. சுயநலம் கூடிவிட்டதே இதற்குக் காரணம்.
‘தான்’ என்ற ஆணவத்தை விடுவதே காதலின் அடிப்படைப் பொன்விதி.வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பதும், தன்னை மேம்படுத்திக் கொண்டே இருப்பதுமான ஆர்வமும், நேர்மறைச் சிந்தனையும் காதலுக்கும்கூட மிக அவசியம்.காதலன் / காதலியிடமிருந்து நல்லவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ஆணுக்குள் இருக்கும் பெண்ணை, பெண்ணுக்குள் இருக்கும் ஆணை வெளிக்கொணரும்படியான மென்மையான இணக்கத்தை கைக்கொள்ளுதல் காதலுக்கு இனிமை மட்டுமல்ல வலிமையையும் கூட்டும். பெண்கள் ஆண்களைப்போல் விமானம் ஓட்ட வேண்டும், இன்ஜினியரிங் கற்றுக்கொள்ள வேண்டும், மிக்ஸியைப் பழுது பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள முன்வருதல் ஆரோக்கியமான மாற்றம்.
நாம் அதிகம் Emotional ஆக இருக்கக் கூடாது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வெளியே செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று பலவற்றை ஆண்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.
இதுவே தங்களைத் திருத்திக் கொள்ளும் சரியான மனநிலை.அதைப்போலவே, ஆண்களும் குழந்தை பராமரிப்பு - தாய்மை, வீட்டு வேலைகள், பிறரை அக்கறையோடு கவனித்துக் கொள்வது, Multi tasking, Communication skills போன்றவற்றை பெண்களிடமிருந்து எடுத்துக் கொண்டு பயனுள்ள வாழ்வியல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆணுக்கும் பெண்ணிக்கும் அமைந்துள்ள இயற்கையான குணநலன்களும், சூழல்கள் காரணமாகவும் ஏற்படும் குறைகளைச் சரி செய்து சமநிலைப் படுத்திக்கொண்டால் புரிதல் ஏற்படும். அடுத்தவர் செய்யும் வேலை, அவரின் உடல் மன நிலை மாற்றங்கள் தெளிவாகத் தெரியும். இன்னொரு கோணம் கிடைக்கும்போது மனது விசாலமாகும். அப்போது கருணையே காதலாகி எல்லோருக்குமான அன்பு மழையாகப் பொழியும்.
சரி இதுவரை காதல் என்பது என்னவென பார்த்தோம். ஆனால், காதல் என்ற பேருணர்வு எல்லாருக்கும் எல்லா நேரமும் வெற்றியாக மட்டுமே இருப்பது இல்லை அல்லவா? சிலருடைய வாழ்வில் ப்ரேக் அப் என்ற விஷயம் காதலின் ஆழத்தில் அல்லது முடிவில் ஒரு பெரும் தடைகல்லாக வந்து நிற்கும்.
அதனை எப்படி எதிர்கொள்வது என இனிக் காண்போம்.மகாகவி “காதல் போயின் சாதல்” என்றார்.காதல் கைவிட்டுப் போனால் இறந்துவிட வேண்டும் என்ற பொருளில் மட்டுமா இதைப் பார்ப்பது? சாவைப் போன்ற வலி, ‘தான்’ எனும் அடையாளமே சிதையும்நிலை என்றும்கூட சொல்லலாம்.
வாழ்வில் நெருங்கியவரின் இறப்பு அல்லது எதிர்பாராத பிரிவு, விபத்து, மிரட்டல், சவால், ஏமாற்றம், நிதிநிலைச் சரிவு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இவற்றை எல்லோராலும் எளிதாக எடுத்துக் கொண்டு மீள முடியாது. மனம் அங்கேயே செயலற்று நின்று வருந்தும்.
இது உளவியலில்’ Post Traumatic Disorder’ என்று குறிப்பிடப்படுகிறது. ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்ற அளவுக்கு அவரைச் சார்ந்துவிட்ட பிறகு, திடீரென, அவர் இல்லை என்றால் மனம் எப்படித் தாங்கிக் கொள்ளும்? அதீதக்கவலை, தனிமையுணர்வு, விரக்தி, தற்கொலை எண்ணம் போன்றவை ஏற்படும். 1930-களில் பிறந்தவர்களைவிட 1950-களில் பிறந்தவர்கள் 10 மடங்கு அதிகம் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றொரு ஆய்வின் புள்ளிவிவரம் சொல்கிறது.மேலும், திருமணம் செய்யாமல் தனிமையிலேயே இருப்பவர்கள், விவாகரத்து செய்து கொண்டவர்களின் தற்கொலை விகிதம் இணையோடு இருப்பவர்களைவிட நான்கு மடங்கு அதிகம் என்றும் அது உறுதிப்படுத்து கிறது.
ஐந்து முதல் பதினான்கு வரையிலான பிராயத்திலேயே சில குழந்தைகளுக்கு தற்கொலை எண்ணம் உருவாகிறது. அவை வலுப்பெற்று இறப்பை நோக்கிப் பெரும்பாலும் நகர்வதில்லை. ஆனால், அமெரிக்காவில் 1970 -ஆம் ஆண்டிலிருந்து சிறுவயது தற்கொலைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. இதற்கு, உறவுச் சிக்கல்கள், பெற்றோரின் விவாகரத்து, வளர்ப்புச் சூழல், தனிமை மற்றும் அதீத சுதந்திரம் போன்றவையே காரணிகளாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 1950 - 1980 வரையில் 15 வயது முதல் 24 வயதிலான இளம் தற்கொலைகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்தது என்பது கணக்கிடப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தின் காதல் சூழலைப் பிரதிபலிக்கும்படி காதல் தோல்வியை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்தன. ஒப்பிட்டு பார்த்தால், அவர்கள் காதலன் காதலி மீது மிகவும் நம்பிக்கையாக /உண்மையாக இருந்தார்கள்.
‘ஒரு தலைக்காதல்’ அதிகம் பேசப்பட்டு போதை போலாகியது. அமரத்துவம் பெற்ற பட்டியலில் இடம் பெற்ற லைலா -மஜ்னு, ரோமியோ -ஜூலியட், அம்பிகாபதி -அமராவதி காதல்கள் எல்லாமே சேராமல் தோல்வியில் முடிந்தவைதானே? இப்படியான, காலத்தால் அழியாத புனிதக் காதல்” எனும் போற்றுதல்கள் இளைஞர்களைத் தற்கொலைக்கு மறைமுகமாகத் தூண்டின என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எதைச் சொன்னாலும் உணர்ச்சிவசப்படுவது (Hyper-Sensitive), பெற்றோர்களிடமிருந்து விலகி இருப்பது, கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை விரும்புவது போன்றவை இந்த வயதின் இயல்புகளாக இருக்கின்றன. அதோடு, நேரடி சமூகத் தொடர்புகளைத் தவிர்ப்பது, முடிவெடுக்கும் திறன் (Decision making skill) முழுமையாக மூளையில் வளர்ச்சியடையாத நிலையில் வாழ்க்கை குறித்த பெரிய முடிவுகளைத் தவறாக தீர்மானித்து விடுவது, எதிர்மறை விடயங்கள் மீது ஈர்ப்பு கொள்வதும் நேரிடுகிறது. ‘Seeing Beyond’ எனப்படும் தற்போதைய சூழலைத் தாண்டி எதிர்காலம் குறித்து சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குக் குறைவாக இருக்கிறது என்பதையும் உளவியல் உறுதிப்படுத்துகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 40% பேர் முன்னரே தற்கொலை எண்ணம் (Sucidical thoughts) குறித்து நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ பேசி இருக்கிறார்கள். 30 சதவீதத்தினர் இறப்பு குறித்தும், வாழ்வின் மீதான ஏமாற்றம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்கள்.
இது உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “எனக்கு யாருமில்லை”, “என்னைப் பயன்படுத்துகிறார்கள்”, “நான் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது?” இப்படியெல்லாம் யாரேனும் கூறினால் அது அதீத துயரத்தின் (Highly depressed) வெளிப்பாடு. தற்கொலையின் எச்சரிக்கை மணி என்று புரிந்து கொள்ளுங்கள்.
அவ்வாறு அவர்கள் உதவி நாடி தங்கள் பிரச்னையைக் கோடிட்டு வெளிப்படுத்தியும் எவரும் கவனம் கொடுக்காமல் போகும்போதுதான் தற்கொலை நிறைவேற்றப்படுகிறது என்பது மிக வேதனைக்குரிய ஒன்று.
எனவே, நம்மைச் சுற்றி யாருக்காவது Post Traumatic disorder -இன் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அவருக்கு ஆறுதலாக இருந்து சமூகத்தோடு இணக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். வாழ்க்கை ஒருவரோடு முடிந்து விடுவதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதை உணர்த்துதல் வேண்டும். தகுந்த மனநலப் பயிற்சியாளரைக் கொண்டு Cognetive, Psycho dynamic therapy ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். பிரச்னை என்றால் 1.எதிர்த்துப் போராட வேண்டும் 2.புரிந்து கொண்டு சமாளிக்க வேண்டும், 3. தப்பித்துவிட வேண்டும். இந்த மூன்று வழிகளில் முதல் இரண்டை எடுத்தால் நல்லது. மூன்றாம் வழியான ‘தப்பித்தலை’ எடுத்தால் தற்காலிகமாக அந்தச் சூழலில் இருந்து விலகுவது, இட மாற்றம் செய்வது என்று இருக்கலாம். ஆனால், மரணம் தீர்வல்ல. அது பிறர் செய்த பிழைக்கு, தன்னையும், தன் குடும்பத்தையும் தண்டிக்கும் செயல் என்று உணர வேண்டும். அப்போது தற்கொலை எண்ணம் வராது.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|