உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!
உலக அளவில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறி உருளைக்கிழங்கு ஆகும். அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு அடுத்து மக்களின் தேவையை நிறைவேற்றுவது உருளைக்கிழங்கு ஆகும்.
 உருளைக்கிழங்கின் தாயகம் சிலி, பெரு, மெக்சிகோ போன்ற நாடுகளாகும். பின்பு 16-ஆம் நூற்றாண்டில், பெருவிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு அறிமுகமானது. 1586-இல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய பகுதிக்கு பரவியது. 1773-ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மன் நாட்டுக்கு அறிமுகமானது. இந்தியாவுக்கு 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமானது. தமிழகத்தில் 1882-இல் நீலகிரி மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டது.
தாவரம்
உருளைக்கிழங்கின் வேர்கள் கிழங்கில் காணப்படுகிறது. நிலத்திற்குள் இருக்கும் தண்டிலிருந்து இரண்டு முதல் நான்கு வேர்கள் வளர்ந்து வரும். இதன்முடிவில் உருளைக்கிழங்குகள் உருவாகும். உருளைக்கிழங்கு, செடி 60 முதல் 90 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். ஒழுங்கற்ற பிரிவுகளை உடைய இலைகளை கொண்டிருக்கும்.
பூக்கள் 2.5 முதல் 4 செ.மீ. அகலத்தில் சக்கர வடிவில் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் காணப்படும்.உருண்டை வடிவ மஞ்சள் கலந்த காய் அல்லது விதை உறை காணப்படும். இதனுள்ளே விதைகள் காணப்படும். உருளைக்கிழங்கு பயிரின் வயது 100 முதல் 140 நாட்களாகும். சத்துக்கள்
உருளைக்கிழங்கில் புரதம், கொழுப்பு, மாவு, நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. மேலும் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு, மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும், தயமின், ரிபோபிளேவின், போயிக் அமிலம் கரோட்டின், நியாசின் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியுள்ளன.
பல்வேறு மொழிப் பெயர்கள்
இதன் தாவரவியல் பெயர் சொலானம் டியூபரோசம் என்பதாகும். இது சொலனேசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.
மருத்துவ குணங்கள்
* உருளைக்கிழங்கில் உடல் வளர்ச்சியூட்டும் சத்துகள் நிறைந்து உள்ளன. * குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை கொடுக்க உடல் வளர்ச்சி ஏற்படும். * இது ஜீரணத்தைக் கூட்டும். * உருளைக்கிழங்கு கடினமான உணவை ஜீரணிக்க உதவும். * இது சிறுநீரைப் பெருக்கும். * உருளைக்கிழங்கிலிருந்து குளுக்கோஸ் போன்ற மாவுப்பொருள் எடுக்கப்படுகிறது. * தீப்புண் ஏற்பட்டால் உருளைக்கிழங்கை அரைத்துப் பற்றுப் போடலாம். * சர்க்கரை நோய் கொண்டவர்கள் மிகக் குறைவாகவே உருளைக்கிழங்கை உண்ண வேண்டும். * உருளைக்கிழங்கு உடல் வெப்பத்தை தணிக்கும். * கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நெய்யில் வதக்கி சாப்பிட உடல் வலுப்பெறும். * உருளைக்கிழங்கு மலச்சிக்கலை போக்கும். * உருளைக்கிழங்கு சாறு வயிற்றுப் புண்களுக்கு மருந்தாகிறது.
- சா.அனந்தகுமார்
|