மங்கையின் மனசு… ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ?
செவ்விது செவ்விது பெண்மை!
எப்படி ஒரு மரம் சீராக வளர வேண்டுமென்றால் தேவையில்லாத கிளைகளை கத்தரித்து கவாத்து செய்கிறோமோ அதே போல் நமது மூளையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் என்பதால், மூளையே கவாத்து செய்கின்றது.  இது வரை வளர்ந்த மூளையின் நரம்பணுக்கள் மற்றும் அவற்றின் முடிச்சுகளில் இருந்து தேவையில்லாத அணுக்களையும் முடிச்சுகளையும் கவாத்து செய்யும் பருவம் ஆரம்பமாகிறது. இதனால் இந்த பருவத்தில் நிறைய தெரிந்தது போல் செயல்படுவார்கள். ஆனால் கவாத்து முடியும் வரை முழுமையாக மூளையை பிரயோகித்து முடிவு எடுக்கும் பக்குவம் வராது.  அதனால் நமது மூளைக்குள் இருக்கும் மிருக மூளை - அதாவது emotional brain இதை சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு தாண்டவம் ஆடும். இந்த ஆட்டம் ஆண்கள் பெண்கள் இருபாலினருக்கும் பொதுவே என்றாலும், பெண்களின் ஹார்மோன்கள் சற்று மேளதாளத்தை தூக்கலாக அமைத்து அந்த நடனத்தை ஊக்குவிக்கின்றன. இதில் பலியாவது என்னவோ அந்தப் பெண்ணின் பெற்றோர்கள்தான்.
தோழமை, கல்வி, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் உடலியல் மாற்றங்கள் ஆகியவை 10 முதல் 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் மனநிலையை பெரிதும் பாதிக்கலாம். இந்தக் கட்டத்தில் ஏற்படும் உளவியல் மாற்றங்களைப் புரிந்துகொள்வது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மிக முக்கியமானது. உளவியல் வளர்ச்சி: முக்கியமான கட்டம்
1. அறிவாற்றல் வளர்ச்சி அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
*இந்த வயதில் உள்ள மாணவிகள் ஆராய்ச்சி திறன், தீர்வு கண்டுபிடிக்கும் திறன் மற்றும் விமர்சனத் திறனை மேம்படுத்துகின்றனர். *மனதில் கேள்விகள் எழுப்பி, தங்கள் சொந்த கருத்துக்களை உருவாக்க தொடங்குகிறார்கள். *பகுத்தறிவு மற்றும் மனதளவில் நுட்பமான சிந்தனைகளை புரிந்துகொள்வது அதிகரிக்கிறது.
2. உணர்வியல் மாற்றங்கள்
*உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உணர்வுகளில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். *சமூகவியல் கருத்துக்கள் மற்றும் நண்பர்கள் தரும் கருத்துகளை கருத்தாக கேட்க பழகுவர். *உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறன் மெதுவாக வளர்ச்சி அடைகிறது.
3. தனித்துவத்தின் உருவாக்கம்
*குடும்பம், கலாச்சாரம், நண்பர்கள் மற்றும் மீடியா ஆகியவற்றின் தாக்கம் இவர்களின் அடையாள உருவாக்கத்தை பாதிக்கிறது.
nதங்களுக்கே உரிய இலக்குகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
* உடலியல் மாற்றங்களால் சுயநம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
* இதில்தான் இன்ஸ்டாகிராம், facebook போன்ற சோசியல் மீடியாக்கள் பெண் பிள்ளைகளை பிணைக்கைதிகளாக ஆக்குகிறது. தனது உடல், உடை, நிறம் இவையெல்லாம் அழகு இல்லை.
அதனால் அழகாக தெரிவதற்கு ஃபில்டர் போட்டு புகைப்படம் எடுக்கலாம் என்று உந்துகிறது. இந்த சோசியல் மீடியாவை மட்டும் குறை சொல்ல முடியாது, இது வருவதற்கு முன்பே டிவி, படம், பத்திரிக்கைகள் என்று அனைத்திலும் பெண்கள் என்றால் இப்படி இருந்தால்தான் அழகு, இப்படி ஆவதற்கு நீங்கள் இந்த கிரீம், இந்த உடை, இந்தப் பயிற்சிகளை செய்யுங்கள் என்று எல்லா நாட்டிலும் பெண்களை இதை மட்டுமே யோசிக்க வைத்தால் அவள் மற்ற முக்கியமான விஷயங்களில் தலையிட மாட்டாள் என்பதற்காக செய்யும் சித்து விளையாட்டுகள்.
4. சமூக வளர்ச்சி
* நண்பர்களுடனான உறவுகள் மிக முக்கியமானதாக மாறும். * குழுவில் சேர்ந்திருக்கும் உணர்வு அதிகரிக்கும். இது சில நேரங்களில் எதிர்மறை அழுத்தங்களை ஏற்படுத்தும். * சமுதாயம் காட்டும் பாலினத்திற்கேற்ப எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்வார்கள். சில நேரம் ஏற்றுக்கொள்வார்கள், சில நேரம் எதிர்த்து நிற்பார்கள். ஆனால் புரிதல் இருக்கும்.
பொதுவான மனநிலைப் பிரச்னைகள்
1. கவலை மற்றும் மன அழுத்தம்
* கல்விச்சுமை மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்புகள் மன அழுத்தத்திற்குக் காரணமாகின்றன. * சமூகவியல் குழப்பம் மற்றும் நண்பர்கள் தரும் அழுத்தம் அதிகரிக்கலாம். * சமூக ஊடக பயன்பாடு அதிகரிப்பதால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள்
* தொடர்ந்து ஏமாற்றம், உற்சாகமின்மை போன்றவை மனச்சோர்வுக்கு அறிகுறிகள் ஆகும். * இந்த மாற்றங்கள் ஹார்மோன்களின் தாக்கத்தால் கூட முடிகிறது.
3. உடல் இமேஜ் பிரச்னைகள் மற்றும் உணவு பழக்க விதிகளை மீறல்
* அழகுக்கான சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ள மாறுபட்ட தரங்களைப் பின்பற்ற நினைப்பது மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.
* சில மாணவிகள் உணவுப் பழக்கங்களை தவறாக மாற்றும் அபாயம் உள்ளது.
* ஈட்டிங் டிசார்டர் என சொல்லப்படும் உணவை கட்டுப்படுத்தும் நோய், இந்த பருவத்திலிருந்து தான் மிக அதிகமாக ஆரம்பிக்கிறது. எலும்பும் சதையுமாக இருந்தால் கூட நான் குண்டாக இருக்கேன் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதே இந்த நோயின் தன்மை.
4. நண்பர்களின் அழுத்தம் மற்றும் அபாயகரமான பழக்கவழக்கங்கள்
* குழுவில் சேர வேண்டுமென்ற எண்ணம் சில நேரங்களில் தவறான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தலாம்.
* தன்னம்பிக்கையின்மையால் முடி வெடுக்கும் திறன் பாதிக்கப்படும்.
* போதை பழக்கம் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. பெண் பிள்ளைகளையும் பாதிக்கக்கூடும். எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள்.
இதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். போர்னோகிராபி என சொல்ல படும் ஆபாச படங்களை பார்ப்பது, பாலியல் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் ஏற்படுவது. இதற்கு பாலியல் பற்றின புரிதலை பொறுமையாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
5. இணையதள பிரச்னைகள்
* இணையத்தில் ஏளனம் அல்லது பதற்றம் ஏற்படுத்தும் நிகழ்வுகள் ஏற்படலாம்.
* பள்ளியில் ஏற்படும் பயிர்ச்சி மாணவிகளின் மனநிலையை பாதிக்கலாம்.
* இதில் தெரியாத நபர்களுடன் பேச்சு ஏற்பட்டு பாலியல் பிரச்னைகள் ஏற்படும் அபாயங்கள் இருக்கிறது. பிள்ளைகளின் இன்டர்நெட் நடவடிக்கைகளை கண்காணிப்பது பெற்றோர்களின் மிக முக்கியமான வேலையாகி விட்டது.
6. குடும்பச் சங்கடங்கள் மற்றும் எதிர்ப்பு
* தன்னாட்சி தேவை அதிகரிக்கும், இதனால் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
* குடும்ப எதிர்பார்ப்புகளை சமாளிக்க முடியாமல் குழப்பமடையலாம்.
* பெண் பிள்ளை இதை செய் அதை செய், பள்ளி வேலையை, படிப்பை பின்பு பார்க்கலாம், முதலில் வீடு பராமரிக்க, சமைக்க கற்றுக்கொள் என்று பாலின வேறுபாடுகள் இவர்களின் மனதை தாக்கும்.
மனநிலையை மேம்படுத்தும் வழிகள்
1. திறந்த உரையாடல்
* அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
* அவர்களின் பிரச்னைகளை மதித்து, உறுதிப்படுத்த வேண்டும்.
2. நல்ல நண்பர்களுடன் உறவுகளை வளர்த்தல்
* நல்ல நண்பர்களை தேர்வு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
* எதிர்மறையான அழுத்தங்களை சமாளிக்க வழிகாட்டல் வழங்க வேண்டும்.
3. சுயநம்பிக்கையை வளர்த்தல்
* உடலியலாக மட்டுமே அல்ல, அவர்களின் திறமைகள் மற்றும் குணாதிசயங்களை அங்கீகரிக்க வேண்டும்.
* தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.
4. மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை மேம்படுத்தல்
*மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் (தியானம், யோகா, எழுதுதல்) அளிக்க வேண்டும்.
*நேர மேலாண்மை திறனை உருவாக்க உதவ வேண்டும்.
5. சமூக ஊடக விழிப்புணர்வு
*இணையத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் வழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
*சமூக ஊடகத்திலிருந்து இடையிலான ஓய்வை ஊக்குவிக்க வேண்டும்.
6. தேவையான சமயத்தில் உதவி பெறுதல்
*நீண்ட காலம் மன அழுத்தம் அல்லது உணவு பழக்க மாற்றங்கள் இருந்தால், மனநல நிபுணர்களின் உதவி தேவைப்படும்.
*பள்ளி ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனை தேவைப்படும்.
10-15 வயது பெண் குழந்தைகளின் உளவியல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தால், அவர்கள் எதிர்காலத்திற்கு உறுதியான மனநிலையுடன் வளர முடியும்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வளர்க்க தேவையில்லை, அவளே அப்படி தான் வளர்வாள், அவளின் சிறகுகளை உடைக்காமல், தேவையில்லாத கிளைகளை மட்டும் கிள்ளி விட்டு அவளின் வளர்ச்சியை சீர்படுத்துங்கள். மூளையில் கவாத்து முடியும் வரை பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான் அவர்களுக்கு காவல்.
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
|