கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா



விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?
- பெயர் வெளியிட
விரும்பாத வாசகர், ஈரோடு.

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.

* விந்தணுக்களின் எண்ணிக்கை.

* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.

* இயல்பான உயிரணுக்கள்.

* பாக்டீரியா போன்றவை.

* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்னை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும். விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.

காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன. அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா?
- நா.கருணாகரன், நாகர்கோவில்.இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டு இருக்கும் உடலில் மூளை, இதயம், ஈரல் மற்றும் கருப்பை ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும்.

இதயமானது ஒரு தசையும் நாணும் இனைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், இரத்த ஓட்டம் அந்த நான்கு அறை (chambers) வழியாகவும் செல்லுவதை ஒருவழிப்படுத்துவதற்கென்று சாதனங்கள் - வால்வுகள் (valves) உண்டு. அவை அசுத்த இரத்தம் உடலின் அனைத்து உறுப்புகளிலிருந்தும் இதயத்தை அடைந்து, அங்கிருந்து நுரையீரலினுள் நுழைந்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து இரத்தநாளங்கள் மூலமாக ஏனைய உறுப்புகளையும் அடைவதற்கு மிகவும் அவசியமாகிறது.

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது தம் பணியைச் செய்ய பிராணவாயு (Oxygen) மற்றும் குளுக்கோஸ் (Glucose) அவசியமாகிறது. கையளவு இதயம் அவற்றை உடல் முழுவதும் தமனி (Arteries) எனப்படும் இரத்த நாளங்கள் மூலமாக அதை அனுப்பும். இதயம் தம் வேலையைச் செய்யவும் அதற்கு பிராணவாயு மற்றும் குளுக்கோஸ் தேவை. இவை இதயத்தில் உள்ள இரத்த நாளங்களின் வழியாக இதயத்தின் தசையைச் சென்றடையும். இந்த கரோனரி ஆர்டரீஸ் (Coronary arteries) எனப்படும் இரத்தநாளங்கள் மிகவும் முக்கியமானவை.

நம் உடலின் வலது (Right coronary) மற்றும் இடது (left coronary) கரோனரி தமனிகள் உண்டு, இவற்றில் இடது கரோனரி தமனி மேலும் இரண்டு பெரிய கிளைகளாகப் பிரியும். இதயத்தின் முன் பக்கம் இறங்கும் இரத்தநாளத்தை ‘இடது முன்புறமாக இறங்கும் தமனி’ (left anterior descending artery LAD) என்றும் இதயத்தைச் சுற்றி இறங்கும் மற்ற கிளை வட்டச்சுற்று தமனி (circumflex artery) என்றும் அழைக்கப்படும். 

இவற்றில் இடது முன்புறமாக இறங்கும் தமனிக்கு ( left anterior descending artery LAD) விதவைகளின் இரத்தநாளம் (widow’s artery) என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு . காரணம் இதில் அடைப்பு ஏற்பட்டால் முன்பெல்லாம் உயிர் போவது உறுதி. எனவே நிறைய பெண்களை விதவையாக்கியதால் இந்தப் பெயர். இந்த மூன்று இரத்தநாளங்களும் மேலும் சிற்சில கிளைகளாகப் பிரிந்து குருதியைக் கொண்டு சேர்க்கும்.

இவை கொழுப்புப் படிந்து (Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக (angina) உருவெடுக்கிறது. நீரிழிவு(Diabetes) நோய் இந்த இரத்தநாளங்கள் அடைபடும் படலத்தை அதிகபட்சம் அதிகமாக்கும். புகை பிடிப்பது இதய இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் (arteriosclerosis) தன்மையை மிகவும் பாதிக்கும்.

கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும் (critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி மற்றும் மிகவும் குறுகினாலோ திடீரென்று இரத்தஅடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது. இவை எத்தனை கிளைகளை பாதித்திருக்கிறது என்பது பொருத்து, ஒன்று, இரண்டு மற்றும் மூன்று நாளங்கள் அடைப்பு (single, double or triple vessel disease.) என்று கொள்வோம்.

நாளங்கள் 50% மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம். உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைத்து, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.
ஆக, இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். எந்த மருந்து எப்படி உதவுகிறது என்பதை மற்ற ஒரு இதழில் பார்க்கலாம்.

குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ ஏஞ்சியோப்ளாஸ்ட்டியோ (angioplasty) செய்து இரத்தஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்யவேண்டும்.