கொரோனா வார்டில் என்ன நடக்கிறது?!



அலசல்

கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் உயிரை பணயம் வைத்து 24 மணிநேரமும் வேலை செய்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் தற்போது அதிக எண்ணிக்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதித்துவருவது சற்று கவலை அளிப்பதாகவே உள்ளது.

அதிலும் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பது முதல் அவர்கள் நலமடைந்து வீடு திரும்புவது வரை பல்வேறு விதமான பணிகளைச் செய்யும் பணியினை செவிலியர்கள் செய்து வருகிறார்கள். ஊசி செலுத்துவது, மாத்திரைகளைக் கொடுப்பது, வென்டிலேட்டரை இயக்குவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து, 24 மணி நேரமும் நோயாளிகளுடனே செலவழிக்கும் செவிலியர்கள் கொரோனாவுக்கு எதிரான முக்கிய போராளிகளாக இருக்கிறார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் செவிலியர்கள் நிலை என்ன? ஒரு நாளில் இவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு என்ன? செவிலியர் ஜோதி கிளாரா மைக்கேல் விளக்குகிறார்.

‘‘கோவிட் 19 நோய்த்தொற்று சோதனையில் பாசிட்டிவாக முடிவு வந்தவர்களில் 80 முதல் 85 சதவீதத்தினர் நோய் அறிகுறிகள் இல்லாதவர்களாகத்தான்(Asymptomatic) இருக்கிறார்கள் அல்லது குறைவான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தியம் செய்யக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளார்கள்.

அதில் 5 சதவீதத்தினரே அதாவது மூச்சுத்திணறல், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய், புற்றுநோய், டயாலிசிஸ் போன்ற பிறநோய்களுடன் கூடிய கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நோயாளிகளும் மிக பலவீனமானவர்களுக்குமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது. இவர்களிலும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான நோயாளிகளே உயிரிழக்க நேரிடுகிறது. மருத்துவமனைகளில் னுமதிக்கப்படுபவர்களில் பலர், சராசரியாக 24 நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பிவிடுகிறார்கள்.

ஒரு மருத்துவமனையில் கொரோனா மருத்துவப்பிரிவாக இருந்தாலும் சரி... கொரோனா சிறப்பு மருத்துவமனையானாலும் சரி... செவிலியர்கள் மட்டுமே 24 மணி நேரமும் நோயாளிகளுடனேயே இருந்து அவர்களைப் பராமரிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே மருத்துவர்களின் பார்வை நேரமாக இருக்கிறது. தீவிர நோயாளிகளை மட்டுமே மருத்துவர் ஒரு நாளைக்கு 2 முறை பார்க்க வருவார்.’’

கொரோனா வார்டுக்கு செவிலியர்கள்எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

‘‘செவிலியர்கள் எல்லாரையுமே கொரோனா வார்டுக்கு அனுப்பிவிட மாட்டோம். கொரோனா வார்டில் பணிபுரிவதற்காக செவிலியர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுகிறோம். இதற்கு Level 3 confident test எடுத்து, எவர் ஒருவர் 50 கிலோ எடைக்கும் குறைவாக இல்லாமல் வலுவான நோயெதிர்ப்பு ஆற்றலுடன், தன்னம்பிக்கையோடு, தைரியமாக நோயாளிகளை கையாள முடியுமோ அவரையே தேர்ந்தெடுக்கிறோம்.

அடுத்ததாக கொரோனா நோயாளிகளை எப்படி பார்த்துக் கொள்வது? நிலைமை எப்போது மோசமாகிறதோ அப்போது செய்ய வேண்டியவை; தனிமையில் இருக்கும் நோயாளிகளிடம் எப்படி பேசுவது? ஆக்ஸிஜன் குறையும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நோயோடு தொடர்புடைய அத்தனை சிகிச்சை நடவடிக்கைகளையும் பற்றி ஒரு முழுமையான பயிற்சி கொடுத்த பிறகே அவர்களை கொரோனா வார்டில் பணியாற்ற அனுமதிக்கிறோம்.

அதேபோல நம்பிக்கை குறைந்தவர்கள், நோயெதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், ஹீமோகுளோபின் 12-க்கு கீழ் இருப்பவர்கள், மூச்சுப்பிரச்னை உள்ளவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா வார்டில் பணியாற்றுவதற்கு செவிலியராக தேர்ந்தெடுப்பதில்லை. விருப்பமில்லாதவர்களையும் கட்டாயப்படுத்துவதில்லை.’’

 வேலை நேரம் எப்படி வரையறுக்கப்படும்?

‘‘பொதுவாக செவிலியர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம், வாரத்தில் 6 நாட்கள் வேலை, ஒரு நாள் விடுப்பு, அதாவது வாரம் 48 மணி நேரம் வேலை செய்வதை இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதிக்கிறது. ஆனால், கடுமையான இந்த கொரோனா நேரத்தில், அந்த வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுப்பு கொடுத்து, வாரம் 32 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் வகையில்

குறைத்திருக்கிறோம்.

3 பிரிவுகளாகப் பிரித்து, சுழற்சி முறையில் அவர்களுக்கு டியூட்டி போடுகிறோம். நடுவில் கிடைக்கும் இந்த 3 நாள் இடைவெளியில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, புத்துணர்வோடு மீண்டும், பணிக்குத் திரும்புவதற்கு வசதியாக அமைகிறது.

அடுத்து பணி நேரத்தையும் மாற்றி அமைத்திருக்கிறோம். பொதுவாக இரவு டியூட்டி பார்ப்பவர்கள் 12 மணி நேரமும், பகல் டியூட்டி பார்ப்பவர்கள் 6 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். தற்போது 6 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறோம்.

4 மணி நேரத்துக்கு ஒரு முறை பிபிடி டிரஸ் மாற்ற வேண்டும் என்பதால் ஒரு செவிலியர் 6 மணிநேரம் வேலை பார்த்தாலும் சரி, 8 மணி நேரம் வேலை பார்த்தாலும், அவருக்கு இரண்டு PPT டிரஸ் மாற்ற வேண்டியிருக்கிறது. இதைக் குறைப்பதற்காகவே, ‘நாங்கள் 8 மணி நேரம் டியூட்டி செய்கிறோம்’ என தாங்களாகவே முன்வந்து விருப்பப்பட்டு வேலை செய்யும் செவிலியர்களும் இருக்கிறார்கள்.

8 மணி நேரமும் பிபிடி டிரஸ்ஸை அவிழ்க்காமல் போட்டுக் கொண்டு வியர்வையில் வேலை செய்வது மிகவும் கடினம். இவர்களுக்கு 3 மணி நேரமோ அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ‘பவர் பிரேக்’ கொடுக்கப்படுகிறது. இந்த இடைவெளி நேரத்தில் சத்தான பானங்கள் மற்றும் சிற்றுண்டி கொடுக்கப்படுகிறது. செவிலியர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் இந்த இடைவெளி நேரத்தை பவர் பிரேக் என்கிறோம்.

இன்னொன்று பயோபிரேக்(Bio- Break). இந்த 8 மணி நேரமும் இயற்கை உந்துதல்களை அடக்கி வைக்க முடியாது. இதற்காக வெளிநாடுகளில் ‘அடல்ட்ஸ் டயாபர்ஸ்’ கொடுக்கிறார்கள். நம் நாட்டில் அது வழக்கமும் இல்லை. அந்த அளவுக்கு நோயாளிகள் அதிகம் உள்ள நெருக்கடியான சூழலும் வரவில்லை. அதுவும் தவிர, மாதவிடாய் நாட்களில் உள்ளவர்கள் நாப்கின் மாற்றிக் கொள்வதற்கும் வசதியாக இந்த பயோ பிரேக் தேவைப்படுகிறது. 3 மணி நேரத்திற்கு ஒரு முறை இதைப் பயன்படுத்தி, தங்களை புத்துணர்ச்சி செய்து கொண்டு வரலாம்.

இதுபோன்று நெகிழ்ச்சித்தன்மையோடு பணிச்சூழலைக் கொடுக்கும்போது செவிலியர்களும் சோர்வில்லாமல் உற்சாகமாக பணியாற்ற முடியும்.
நோயாளிகள் மற்றும் செவிலியர்களுக்கு இடையிலான விகிதமும் முக்கியம். அதிகப்படியான பராமரிப்பு தேவையில்லாத நோயாளிகள் உள்ள வார்டு என்றால், 5-லிருந்து 7 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதம் போதுமானது.

நீரிழிவு உள்ள நோயாளி அல்லது ரத்தக்கொதிப்பு உள்ளவர் என்றால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு சோதித்து பார்க்க வேண்டும். எனவே, அங்கே 3 நோயாளிக்கு ஒரு செவிலியரும், அதுவே தீவிர சிகிச்சைப்பிரிவு என்றால் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும். இதற்கு Acuity based ratio care என்று பெயர். அதாவது நோயின் தன்மைக்கேற்றவாறு பராமரிப்பு கொடுக்கும்போது, நோயாளியை கவனித்துக்  கொள்வது  செவிலியர்களுக்கு எளிதாக இருக்கும். நோயாளிகளுக்கும் உரிய கவனம்/சிகிச்சை கிடைக்கும்.

கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்கள், நோயாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவும், ஆறுதலாக பேசவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த நேரமும் மருத்துவர்களுடனும், உயர் மருத்துவக் குழுவுடன் தொடர்பு கொள்ள வசதியாக அவர்களுக்கு உயர் தொழில்நுட்ப தொலைத்தொடர்பு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். 24 மணி நேரமும் அந்த வார்டில் முடங்கிக்கிடக்கும் செவிலியர்களும், நோயாளிகளும் மன ஆறுதல் பெறும் விதத்தில் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும், இசை கேட்கவும் சில தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  

எக்ஸ்ரே எடுப்பதற்காக டெக்னீஷியன், டயட்டீசியன்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்ட், ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்துவது இப்படி சின்னச்சின்ன வேலைகளை செய்வதற்காக நிறைய பேர் கொரோனா வார்டினுள் நுழைவது நோய்த்தொற்று பரவலை அதிகரிக்கும் ஆபத்துள்ளது என்பதால் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை இயக்கவும், சின்னச்சின்ன பிஸியோதெரபி பயற்சிகள் கொடுக்கவும், நோயாளிகளுக்கேற்ற ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதற்கும் சில நேரங்களில் அனஸ்தீஷியா மருத்துவர்களுக்கு உதவும் வகையிலும், கூட செவிலியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.

லேப் டெஸ்ட் எடுப்பதற்கும் சொல்லிக் கொடுத்துவிடுவோம். கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதால், இதுபோன்ற அனைத்து துறையினரும் செய்யும் வேலைகளையும் தாங்களே பார்ப்பதற்கேற்ற வகையில் செவிலியர்கள் தங்களை மிக நன்றாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவர்கள் அணிந்துகொள்ளும் பிபிடி டிரஸ்ஸை அணிந்து கொள்வதற்கென்றே பிரத்யேகமாக 15 நாட்கள் பயிற்சி கொடுக்கிறோம். பிபிடி டிரஸ் அணிந்துகொள்ளும் அறையில் வீடியோ கேமரா பொருத்தி, தவறாக அணிந்து கொள்பவர்களை திருத்துகிறோம். அணிவதைவிட அதை கழட்டுவது கடினமான செயல். நோயாளிகளிடமிருந்து வெளிப்படும் கிருமிகள் செவிலியர்களின் பிபிடி டிரஸ் முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும். அதை திருப்பி கழட்டச் சொல்லித் தருகிறோம்.

உடல் முழுவதும் மறைக்கும் பிபிடி டிரஸ், என்95 மாஸ்க், கிளவுஸ் இவையே இவர்களின் பாதுகாப்புக் கவசங்கள். இதுபோன்று அனைத்து பாதுகாப்பு வழிகளையும் பின்பற்றுவதால், கொரோனா நோயாளிகளை பார்த்துக் கொள்பவர்களைவிட, மற்ற பிரிவுகளில் பணியாற்றுபவர்களுக்கு நோய்த்தொற்று வருவது அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

மற்ற நோயாளிகள் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதால் அவர்களோடு தொடர்பு கொள்பவர்கள் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாததோடு, அந்த நோயாளிகளுக்கு வேறு ஏதேனும் டெஸ்ட் எடுக்கும்போதுதான் ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வருகிறது. இப்படித்தான் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ உதவியாளர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.

நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் செவிலியர்களின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, கொரோனா வார்டு டியூட்டியில் இருக்கும் செவிலியர்களுக்கு பணி முடிந்து வீட்டிற்கு போகும் முன்பு குளிப்பதற்கு வசதியாக ஓய்வறைகள் இருக்க வேண்டும், அங்கு தலை அலசுவதற்கான ஷாம்பூ, சோப்பு, டவல், அவ்வப்போது உப்பு போட்டு வாய்கொப்பளிக்க வசதியாக வெந்நீர் வைத்திருக்க வேண்டும்.

இவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் விதமாக  துத்தநாகம்(Zinc), பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி  மூன்றும் சேர்ந்த Vitamin Rich மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவில் புரதம் அதிகமுள்ள முட்டை, கொட்டைகள் பருப்புகள் சேர்ந்த உணவும், பவர் பிரேக்கில் சுண்டல், கடலை மிட்டாய் போன்றவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருநாள் கபசுரக்குடிநீர், மறுநாள் நிலவேம்புக் குடிநீர் எனவும் மாற்றி மாற்றி கொடுக்கிறோம். இவைதவிர அவர்களின் மனநிலையை பாதுகாப்பதற்காக அவ்வப்போது மனநல நிபுணர்களால் ஆலோசனைகளும் கொடுக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நிற்கும் செவிலியர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை.’’

- உஷா நாராயணன்