கொரோனா எப்போது முடியும்?!சிறப்பு கட்டுரை

உலகம் முழுவதும் பரவி இதுவரையில் லட்சக்கணக்கான நபர்களை உயிர்பலி வாங்கி இருப்பதோடு, இன்னும் தன் கொடூர ஆட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது கொரோனா. இந்த நோய்க்கொடுமை எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று தொற்றுநோய் மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதனிடம் கேட்டோம்...

‘‘கொரோனா வைரஸ் என்பது மிகவும் புதிதானதல்ல. ஏற்கெனவே பல ஆண்டுகளாக நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நமக்குத் தெரிந்த கொரோனா வைரஸானது மூக்குச்சளி, ஜலதோஷத்தை உண்டு பண்ணக்கூடியது.
உலகளவில் பொதுவான மூக்குச்சளி, ஜலதோஷத்தை உண்டுபண்ணக்கூடிய வைரஸ்களில் 30 சதவிகிதம் இந்த கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்ததே. ஆனால், சமீபமாக கடந்த 20 வருடங்களில் புதிதாக உருவாகிய மூன்று வகையான கொரோனா வைரஸ்கள் நிமோனியா என்று சொல்லப்படுகிற மார்புக் காய்ச்சலை உண்டுபண்ணும் வகையில் தோன்றியுள்ளது.’’

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் தொற்று அதிகரிக்கிறதா?

‘‘சாதாரணமாகவே கொரோனா வைரஸ் என்பது வௌவால்களில் இருக்கக்கூடியதுதான். இந்த வைரஸ்களால் வௌவால்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. பன்றிக்காய்ச்சல் பன்றியிலிருந்தும், பறவைக் காய்ச்சல் பறவைகளிலிருந்தும் பரவுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதுபோல பல்வேறு வைரஸ் கிருமிகளின் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது இப்போது மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்டது. அதற்கு காடுகளை அழித்து வீடுகளைக் கட்டுவதும், மனிதனும் விலங்குகளும் மிக அருகில் இருப்பதுமே காரணம்.’’

கொரோனா வைரஸ் உலகளவில் பரவ என்ன காரணம்?

‘‘ஆரம்பத்தில் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் தொற்று அங்கே உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும், அது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவவில்லை என்றும், நோய் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தால் சொல்லப்பட்டது. ஆனால் தைவான் நகரில் இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்றும், நோய்ப்பரவல் நிலை மிகவும் கவலை அளிப்பதோடு, மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கருத்துக்களை மட்டுமே கேட்டு தவறான அறிக்கையை வெளியிட்டது. இதை மற்ற நாடுகளும் நம்பி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால், உலகின் பல பகுதிகளுக்கு இந்நோய்த்தொற்று பரவியது. உலக சுகாதார நிறுவனத்தின் தவறான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளே தற்போது நிலவி வரும் உலகளாவிய கொரோனா பரவலுக்கு முக்கியக் காரணமாகியது. உலக நாடுகள் அந்த அறிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு உலக சுகாதார நிறுவனம் இந்நோய்ப் பரவல் குறித்த அறிக்கையை மாற்றி வெளியிட்டது. அதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் ஒவ்வொன்றும் கடுமையான பொது முடக்கத்தை ஏற்படுத்தி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியது.’’

உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய கடமையை சரியாக செய்யவில்லையா?

‘‘முன்னர் சார்ஸ் நோய்த்தொற்று ஏற்பட்டபோது உலக சுகாதார நிறுவனம் சரியான முறையில் தகவல்களைப் பரிமாறியது. இந்த நோய் சில நாடுகளுக்கு பரவிய உடனேயே அதை முழுவதும் முடக்கியதோடு, வேகமாக செயல்பட்டதால் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போதைய பரவல் நிலைக்கு சரியான நேரத்தில் சரியான தகவல்களை உலக நாடுகளுக்கு சொல்லாத உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளே காரணம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.’’

கொரோனா கொடுமை எப்போது முடிவுக்கு வரும்?

‘‘ஒரு புதுவிதமான தொற்று நோய் ஊடுறுவினால் அது வேகமாகப் பரவும். அப்போது அங்கிருக்கும் யாருக்கும் அந்த புதிய தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. இதனால் அத்தொற்று வேகமாக பரவிக்கொண்டே இருக்கும். அங்கே Herd immunity(மந்தை எதிர்ப்பு சக்தி) ஏற்பட்டால்தான் தொற்றுநோய் முடிவுக்கு வரும். தட்டம்மை நோய்(Measles) ஒரு நபருக்கு ஏற்பட்டால் சராசரியாக 12 முதல் 16 பேருக்கு மிக விரைவாக பரவும். எனவே தட்டம்மை நோய்க்கு 95 சதவிகிதம் வரை மந்தை எதிர்ப்பு சக்தி தேவை. அதேபோல கொரோனா வைரஸுக்கு எதிரான மந்தை எதிர்ப்பு சக்தி சராசரியாக 70 சதவிகிதம் தேவை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர இந்த மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை, இந்த நோயைக் கட்டுப்படுத்த போதுமான மந்தை எதிர்ப்பு சக்திக்குரிய சதவிகிதத்தை அடைய வேண்டும். மற்றொன்று நோய்க்கான தடுப்பூசியை போதுமான சதவிகிதம் பேருக்கு செலுத்தி உருவாக்க வேண்டும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரையில் நாம் எந்த மாதிரியான அசுர பலத்தைக் கொண்டு கட்டுப்படுத்தினாலும், அங்கும் இங்குமாக சுற்றிவிட்டு மீண்டும் ஏற்படும். தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது கொரோனா முழுமையாக முடிவுக்கு வரும்.’’

இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி வந்துவிடும் என்கிறார்களே...

‘‘கொரோனா தொற்றின் பரவல் மற்றும் பாதிப்புகள் உலகளவில் மிகவும் அதிகமாகி இருப்பதால் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி பணிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் Covaxin என்கிற தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அமெரிக்கா, கொரியா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் தடுப்பூசிக்கான பரிசோதனைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

பொதுவாக புதிய தடுப்பூசி மனிதர்களில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக கடந்த பிறகு, அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பது போன்ற நீண்ட கால பரிசோதனைகளுக்குப் பிறகு, அரசு சார்ந்த சுகாதார அமைப்புகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். ஆனால் தற்போது போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதால் விரைவிலேயே வரும் என்று எதிர்பார்க்கலாம்.’’

கொரோனா காற்றின் மூலம் பரவும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றனவே?

‘‘கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் ஒரு நபர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் எச்சில் வழியே வெளிப்படும் கிருமி ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குள் உள்ள காற்றில், குறிப்பிட்ட காலம் வரை பரவியிருக்கும். அந்த நபரின் அருகிலிருந்து, அத்தொற்று நிரம்பிய காற்றினை சுவாசிக்கும் மற்ற நபர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. இதையே காற்றின் மூலம் பரவும்(Airborne disease) என்கிறார்கள். அதற்காகவே மாஸ்க் அணிவது, சமூக விலகல் போன்றவற்றைக் கடைபிடித்து வருகிறோம். அதனால் இது ஒன்றும் புதிய எச்சரிக்கை அல்ல. அச்சம் கொள்ளவும் வேண்டியதுமில்லை. போபால் விஷவாயு போல காற்றில் பரவி எல்லோரையும் கொன்றுவிடும் என்று அர்த்தமுமல்ல.’’

மருத்துவர்கள் அத்தனை கவனமாக இருந்தும் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

‘‘கொரோனா தொற்று தீவிரமாகி, வென்ட்டிலேட்டர் பொருத்தி அவசரசிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளிடமிருந்து வெளிப்படும் வைரஸ் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்த நிலையைில் அருகில் இருப்பவர்களுக்கு இத்தொற்று மிகவேகமாக பரவும். எனவே, மருத்துவமனைகளில் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். முழுக்கவச உடை அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அதில் சில சமயங்களில் சிறிய தவறுகள் நடக்கிறபோது, மிக எளிதாக தொற்று ஏற்பட்டுவிடுகிறது.’’

பொதுமக்களிடம் மெத்தனம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் கூறியிருக்கிறாரே...

‘‘பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் இத்தொற்று கண்டறியப்பட்டு, எண்ணிக்கை குறைவாக இருக்கையில் அரசு அமல்படுத்திய ஊரடங்கானது மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, நோய்ப்பரவலை கட்டுக்குள் வைத்திருக்க உதவியது.

அதன் பிறகு ஊரடங்கில் ஒவ்வொரு தளர்வுகளாக கொண்டுவந்தபோது, மக்கள் ஆரம்பத்தில் பின்பற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டத் தொடங்கினர். பாதுகாப்பற்ற முறையில் பல இடங்களில் ஒன்றுகூட ஆரம்பித்தனர். அதுவே நோய்ப்பரவல் அதிகரிக்க காரணமாகியது. இப்படி பொதுமக்களிடம் அலட்சியம் அதிகரித்திருப்பதாக சமீபத்தில் பிரதமர் தனது உரையிலும் தெரிவித்திருந்தார். நாம் இதுபோன்ற அலட்சியங்களைத் தவிர்த்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வோடு இருந்தால் நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.’’

ரசாயன கலப்பற்ற சானிட்டைஸர்!

ரசாயனக் கலப்பில்லாத, இயற்கை மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்வதில் பிரபலமான நிறுவனம் Avis Health Care. தற்போது கொரோனா பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம் போன்றவற்றைத் தரமாக விற்பனை செய்து வருகிறது.

இத்துடன் ரசாயனக் கலப்பில்லாத சானிட்டைஸரையும்(Hand Sanitizer) மக்களுக்காக வழங்குகிறது Avis. மஞ்சள் மற்றும் வேம்பு ஆகியவற்றைக் கலந்து இந்த சானிட்டைஸர் தயாரிக்கப்பட்டுள்ளது. ரசாயனமும், ஆல்கஹாலும் நிறைந்த சானிட்டைஸரால் அடிக்கடி கைகழுவும்போது, அதன் வேதித்தன்மை நம் சருமத்தைப் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. தவறுதலாக நம் கண்களில் பட்டுவிட்டால் கண்களும் பாதிக்கப்படலாம். இந்த அபாயத்தை AVIS சானிட்டைஸர் குறைக்கிறது.

இத்துடன் மூன்றடுக்கு முக கவசம், ஹெர்பல் ஹேண்ட் வாஷ் ஆகியவற்றையும் தரமானதாக உற்பத்தி செய்கின்றனர். சானிட்டைஸருக்கான Hands Free ஸ்டாண்ட்டும் அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஏற்கெனவே வலி நீக்கும் எண்ணெய், எலும்பு வலிக்கான மாத்திரைகள், வல்லாரை மிட்டாய், தூதுவளை மிட்டாய், துளசி மிட்டாய் போன்ற பாரம்பரிய தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது.

- க.கதிரவன்