யோகா செய்வதால் என்ன பயன்?!Wellness

உலகமே சிரிப்பை மறந்து இறுக்கமான ஒரு சூழலில் உழன்று கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும்கூட நம்மில் பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெளியே வர யோகா நிச்சயம் உதவும்.

எனவே, இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் தினமும் யோகா செய்ய வேண்டியது அவசியமாகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள இந்தச் சூழலில் யோகா செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றியும், அரசு யோகா மருத்துவமனை மூலம் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் பார்ப்போம்...

நமது பிரதமர் மோடி யோகாவின் பலன்கள் பற்றியும் யோகா செய்வதால் கொரோனா நோயாளிகள் வெகுவிரைவில் நலமடைவது பற்றியும் கூறியிருக்கிறார். இன்றைய சூழலில் நமது இந்திய கலாச்சாரத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த யோகா, கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிராணாயாமமும் மூச்சுப்பயிற்சியும்

கொரோனா வைரஸ் பாதிப்பு, குறிப்பாக சுவாசப் பிரச்னைகளில்தான் பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு பிராணாயாமமும் மூச்சுப்பயிற்சியும் சிறப்பான தீர்வளிப்பதுடன் பெரிய அளவில் உடலுக்கும் மனதுக்கும் சக்தி தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. உடல் மனம் இரண்டையும் ஒன்று சேர்ப்பது யோகா.

கொரோனா வைரஸ் பரவுவதால் உலகமே அச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமா என்றே எல்லோரும் யோசிப்போம்.

யோகா செய்வதன்மூலம் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூழலில் எத்தகைய நோயிலிருந்தும் நாம் மீண்டுவர முடியும். குறிப்பாக கொரோனா பாதிப்பிலிருந்து வெளியே வர முடியும். நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும்.

வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான சூழலில் உடல் ஆரோக்கியத்தை எப்படி மேன்மைப்படுத்தலாம் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்தக் கொரோனா. அதன்படி கொரோனா மட்டுமல்ல வேறு எத்தகைய நோய்களும் நம்மை பாதிக்காமலிருக்க யோகா உதவும்.

மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம்

மூச்சுப்பயிற்சி, தியானம் உள்ளிட்ட சில பயிற்சிகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பிராமரி பிராணாயாமம் நல்ல பலன் தரும். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்னை உள்ளவர்கள் சுவாச பிரச்னை இல்லாதவர்கள் என அனைவரும் இந்த பயிற்சியை எடுத்துக் ெகாள்ளலாம்.

பிராமரி பிராணாயாமம் மூக்குத்துவாரங்களின் வழியாக காற்றை உள்ளிழுத்து மூச்சை வெளியே விடும்போது ஆள்காட்டி விரலால் காதுகளை மூடிக்கொண்டு `ம்... ம்ம்ம்...’ என்று குளவியின் ரீங்காரம் போன்று சத்தம் எழுப்ப வேண்டும்.

இந்த பிராமரி பிராணாயாமம் செய்வதால் என்ன பலன் என்று American journal of respiratory and critical care medicine ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மூக்குத்துவாரத்தில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை அதிகரிப்பதாக கூறியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த நைட்ரிக் ஆக்ஸைடின் பங்கு அதிகம். மேலும், பொதுவாக இந்த நைட்ரிக் ஆக்ஸைடு என்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது. ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.  

அதேநேரத்தில் வைரஸ், பாக்டீரியா என எந்தவொரு கிருமிகள் நம் உடலின் உள்ளே புகுந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை நைட்ரிக்
ஆக்ஸைடுக்கு உண்டு.

மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுப்பதன்மூலமே இந்த நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும். ஆனால், நம்மில் பலர் வாய் வழியாக மூச்சை உள்ளே இழுக்கும் பழக்கமுடையவர்களாக இருக்கிறோம்.

அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் வாய் வழியாக மூச்சை உள்ளே இழுப்பார்கள். எனது நேரடி அனுபவத்தில் கொரோனா நோயாளிகளை வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுத்து வெளிவிடும்படி சொன்னேன். அப்படி செய்ததில் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு அதிகரித்து இயல்புநிலைக்குத் திரும்பினார்கள்.

பொதுவாக ரத்த நாளங்களில் ஆக்சிஜன் அளவு 98 முதல் 99 வரை இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதித்த பல நோயாளிகளுக்கு 90-க்கும் குறைவாகவே ஆக்சிஜன் அளவு இருக்கிறது. அதனால் அவர்களை வென்டிலேட்டரில் வைக்க வேண்டிய சூழல்.

வாய் வழியாக சுவாசிப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவாகும். இத்தகைய சூழலில் வாய் வழியாக சுவாசிக்கும் பலரை மூக்கு வழியாக சுவாசிக்கச் சொன்னதில் ஆக்சிஜனின் அளவு அதிகரித்தது. அப்போது அவர்களுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரை எடுத்துவிட்டு என்னுடன் பேசுமளவுக்கு நலம்பெற்றார்கள்.

வாய் வழியாக மூச்சு விடுவதால் ரத்த அழுத்தம் அதிகமாவதுடன் தூக்கம் கெடும். இதய நோய், ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படும். எனவே, கொரோனா நோயாளிகள் மூக்கு வழியாக சுவாசித்தால் நிச்சயம் பல்வேறு பிரச்னைகளிலிருந்து மீளலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது வயிறு வெளியே தள்ள வேண்டும்.

அதுபோல் மூச்சை வெளியே விடும்போது வயிற்றை உள்ளே இழுக்க வேண்டும் என்ற சரியாக மூச்சுவிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்தேன். இப்படிச் செய்ததில் ஐந்தே நாட்களில் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பும் நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தேன். யோக நித்ரா என்ற மூச்சுப்பயிற்சியையும் செய்து கொடுத்தேன். அப்படிச் செய்ததில் நல்ல பலன் கிடைத்தது.

மிக சாதாரணமாக மூச்சுப்பயிற்சி செய்தால் செல் அணுக்களில் உள்ள ஸ்ட்ரெஸ் நச்சுக்கள் வெளியேறும். மன அழுத்தத்துக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேகஸ் என்ற பெரிய நரம்பு இதயத்துடிப்பு, செரிமான சக்தி நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பிராணாயாமம், தியானம் போன்றவை வேகஸ்(Vagus) நரம்பின் அதிகப்படியான செயல்பாட்டை கட்டுக்குள் வைத்து இயல்பாக செயல்படத் தூண்டுகிறது. இதன்மூலம் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க மிக எளிதான சில மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை நன்றாக உள்ளிழுக்கும்போது கைகளை நன்றாக விரிக்க வேண்டும். அதன்பிறகு மூச்சை வெளிவிடும்போது கைகளை நெஞ்சுக்கு அருகே கொண்டு வர வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை இயற்கை மருத்துவ முறையில் உப்பு நீரால் வாய் கொப்பளிக்கச் சொல்வதுடன் முகத்துக்கு ஆவி பிடிக்க வலியுறுத்துகிறோம். அரோமா ஆயில் எனப்படும் யூகலிப்டஸ் ஆயில், பெப்பர்மின்ட் ஆயில், லெமன்கிராஸ் ஆயில் போன்றவற்றில் சில துளிகளை ஒரு துணியில் நனைத்து நாள் முழுவதும் அவர்கள் முகர்ந்து பார்ப்பதால் நெஞ்சில் அடைத்துக்கொண்டிருக்கும் சளி இளகியது. இறுக்கமான சூழல் விலகி இயல்பானார்கள். இதனுடன் சூரியக்குளியல் செய்யவும் வலியுறுத்துகிறோம்.

திருத்தணி, அரியலூர், வேலூர்(வாலாஜா) போன்ற தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, சூரிய குளியல்களுடன், கூடிய யோகா பயிற்சியும், அக்குபங்சர் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் சிகிச்சை ெகாடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்க உதவுகிறது  இப்படிப்பட்ட பயிற்சிளை ெகாேரானா
நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.

எந்த யோகா...

என்ன பலன்?!

மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம் தவிர மற்ற யோகா பயிற்சிகள் எடுத்துக்கொள்வதால் என்ன பயன் என்று பார்ப்போம்...

* தாடாசனம் - உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

* த்ரியக்க தாடாசனம், கட்டி சக்ராசனம் - இ்ந்த இரண்டும் நம் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும்.

* உட்கட்டாசனம் - நாற்காலி போன்ற இந்த ஆசனம் நம் தசைகளை வலிமைப்படுத்தி நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* நாடி சோதனா பிராணயாமம் (அ) நாடி சுத்தி பிராணாயாமம் - நம் நாடிகளை சுத்திகரித்து செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

- அ.வின்சென்ட்