கண் அழற்சி‌ ஏன் வருகிறது?!கேமரா 576 மெகாபிக்ஸல்

கண்களில் நீர் வடிதல் குறித்து அடிக்கடி இந்தத் தொடரில் பேசி வந்திருக்கிறோம். கண்களில் நீர் வடிதல் அறிகுறியுடன் சேர்த்து கண்களில் அதீத சிவப்பு, வெளிச்சம் பார்க்கும்போது கண்கள் கூசுதல், லேசான பார்வைக் குறைபாடு இவையும் சேர்ந்து தோன்றினால் அதனையே அழற்சியாக(Inflammation) வரையறுக்கிறோம்.

கிருஷ்ண படலம், அக்வஸ் திரவம் சுரக்கும் சிலியரி பாடி(Ciliary body) என்ற பகுதி மற்றும் கோராய்டு(Choroid) என்னும் பகுதி மூன்றும் சேர்ந்து ரத்தநாளப் படலம் அல்லது குழற்படலம்(Uveal tract) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியே அதிகம் அழற்சியால் பாதிக்கப்படுகிறது. திடீரென்று தோன்றும் இந்த அழற்சிக்குக் காரணம் என்ன?

எந்த காரணமும் இல்லாமல் சிலருக்குத் திடீரென அறிகுறிகள் தோன்றலாம். உடனடி சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும். பலருக்கு மீண்டும் அதே அறிகுறிகள் சில நாட்கள் கழித்துத் தோன்றும். அப்போது விரிவான பரிசோதனைகள் தேவை. அத்தகைய அழற்சிக்கான காரணம் உடலளவில் வேறு ஏதாவது நோயாக இருக்கலாம்.

நம் நாட்டில் காசநோய் என்பது கண் அழற்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. காசநோய் மட்டுமல்ல; சிஃபிலிஸ், எச்.ஐ.வி போன்ற நோய்கள், மரபணு சார்ந்த காரணங்களால் உருவாகும் மூட்டு பிரச்னைகள்(Ankylosing spondylitis), கிருமித்தொற்றுகள் முதலான காரணிகள் அழற்சியை ஏற்படுத்துகின்றன. சில மருந்துகளின் பக்க விளைவாகவும் கூட அழற்சி கண்டறியப்பட்டுள்ளது.

பூனை, நாய் போன்ற உயிரினங்களுடன் மிக நெருக்கமாக பழகுபவர்களுக்கு அவற்றின் உடம்பிலிருந்து ஒட்டுண்ணிகளால்(Parasites) ஏற்படும் சில நோய்கள் மூலமாகவும் கண் அழற்சி தோன்றலாம். குடல் சம்மந்தப்பட்ட சில நோய்கள்(Inflammatory bowel disease), சில சிறுநீரகப் பிரச்னைகள், அதீத எதிர்ப்பாற்றல் தொடர்புடைய நோய்கள்(Sarcoidosis) இவையும் கண் அழற்சியை
ஏற்படுத்தலாம்.

உடலின் மற்ற பகுதியில் ஏற்படும் நோய்கள் ஏன் கண்ணில் இந்த அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன?

ஏற்கனவே கூறியதுபோல குழற்படலப் பகுதி ரத்த நாளங்கள் நிரம்பியது. காசநோய் பிரச்னை நுரையீரலைத் தாக்கிய நிலையில் ரத்த ஓட்டத்தில் சம்பந்தப்பட்ட புரதங்கள்(Antigens) கலந்து உடலில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடும். அத்தகைய கிருமிக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பாற்றல் வெள்ளை அணுக்கள் உள்ளிட்ட பல செல்களை ரத்த நாளங்களில் இருந்து வெளியேறச் செய்கிறது. அப்படி வெளியேறிய செல்கள் அந்தந்த இடத்தில் உருவாக்கும் எதிர்வினையே அழற்சியை உருவாக்குகிறது.

கண்களில் மட்டுமல்ல உடல் முழுவதுமே எங்கு அழற்சி ஏற்பட்டாலும் முக்கிய அறிகுறிகள் சிவப்பு, நீர் வடிதல், வீக்கம் ஆகியன. இன்னொரு சூழலில், முக்கிய நோயின் பிரதிபலிப்பாக மூட்டுகளில் நிகழும் மாற்றங்கள்(Arthritis), கண்களிலும் அழற்சி(Uveitis) நிகழலாம்.

இத்தகைய அழற்சி பிரச்னைகள் மரபணு சார்ந்த நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். கண் நோயை முதலில் கண்டறிந்து அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது மரபணு பிரச்னையை கண்டறிந்து கொண்டவர்கள் ஏராளம். அப்படி விரைவிலேயே கண்டுபிடிக்கும் பட்சத்தில் மூட்டுகளில் நிரந்தர பாதிப்பை காசநோயின் உச்சகட்ட பாதிப்பைத் தடுக்கலாம்.

பொதுவாக முதன்முறை அழற்சி பிரச்னை ஏற்படும்போது சொட்டு மருந்து, மாத்திரை இவற்றால் எளிதில் குணப்படுத்தலாம். முதல்கட்டமாக கண்ணின் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கக்கூடிய அட்ரோபின் வகையான மருந்துகள்(Cycloplegics) பரிந்துரைக்கப்படும். இத்தகைய மருந்துகள் கிருஷ்ணபடலம் சுருங்கி விரிவதைத் தடுக்கின்றன.

அழற்சியில் எதிர்ப்பாற்றல் அதிகம் இருப்பதே பிரச்னைகளை உருவாக்கியிருப்பதால் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் ஸ்டீராய்டு மருந்துகளே இதற்கு முக்கியமான சிகிச்சை ஆயுதமாக இருக்கின்றன. ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்த துவங்கிய ஒன்றிரண்டு நாட்களிலேயே சிறந்த மாற்றத்தை காண முடியும். ஸ்டீராய்டு மருந்தினால் ஏற்படும் வியக்கத்தக்க விளைவுகளில் முக்கியமானது கண் அழற்சி பிரச்னை. பாதிப்பு அதிகமாக இருக்கும்போது சொட்டு மருந்து தவிர ஊசி மூலமாகவும், மாத்திரைகள் மூலமாகவும் ஸ்டீராய்டு வழங்கப்படுகிறது.

இரண்டு கண்களிலும் ஏற்படும் அழற்சி, பார்வையை பாதிக்கும்விதமான அழற்சி, அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் பிரச்னை  அல்லது ஸ்டீராய்டு பயன்படுத்த முடியாத சூழல் இவற்றில் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்விதமான புற்றுநோய்க்கான மருந்துகளைக் கூட பயன்படுத்த வேண்டியதிருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை அதே அழற்சி பிரச்னையால் பாதிக்கப்படும்போது அதன் காரணத்தைக் கண்டறிய பல பரிசோதனைகள் தேவைப்படும். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அளவை அளப்பது, Mantoux போன்ற பரிசோதனைகள், மரபு சார்ந்த காரணங்களுக்காக ரத்தப் பரிசோதனைகள்(HLA B27) எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவை தேவைப்படும்.

பல பரிசோதனைகளின் முடிவில் மூல காரணி கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை அளித்தால் அதன்பின் கண் அழற்சி பிரச்னை தோன்றுவதைத் தடுக்க முடியும். உதாரணமாக காசநோய்க் கிருமித்தொற்று இருப்பதன் அறிகுறி கண்டறியப்பட்டால் 6 மாதங்களுக்குக் கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பார்கள்.

த்துடன் கண்ணுக்கு வழங்கப்படும் மருந்துகளையும் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னையில் இருந்து முற்றிலுமாக விடுபட முடியும். இத்தகைய அழற்சி பிரச்னை சிலருக்கு நீண்ட நாட்களாகத் தொடர்வதுண்டு. அப்படி நாள்பட்ட பிரச்னையால் பல பக்க விளைவுகளும் நேரும். கண்களுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் லென்ஸ் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பாதிக்கப்படலாம்.

எளிதில் லென்ஸில் புரை தோன்றும். கண்மணியின் ஓரங்கள் கருவிழியின் பின்புறமாக அல்லது லென்ஸின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டு நிரந்தரத் தழும்புகளை உருவாக்கிவிடும். அக்வஸ் திரவம் சுரக்கும் பகுதியும் பாதிக்கப்படுவதால் குறைவான திரவம் சுரந்து கண்ணின் நீர் அழுத்தம் மிகக் குறைந்து விட வாய்ப்பு இருக்கிறது. சில அழற்சிப் பிரச்னைகளில் கண் அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நுண்ணுயிரித் தொற்றினால் உள்ள அழற்சி, விழித்திரையை சத்தமின்றி பாதிப்பதுடன் நிரந்தரத் தழும்புகள் சிலவற்றை ஏற்படுத்திவிடும்.

இத்தகைய நோய்களில் உடலின் பொதுவான கிருமித்தொற்று பெரிய பாதிப்பின்றி ஒரு காய்ச்சலுடன் சரியாகிவிடும். நோய் வந்து சென்றதைப் பலர் வெகுநாட்கள் கழித்து பார்வை குறைபாடு ஏற்படும் நிலையில்தான் கண்டுகொள்வார்கள். அப்போது விழித்திரையில் ஆறிய தழும்பு ஒன்று காணப்படும்.

எனவே இத்தகைய பிரச்னைகளை வரும்முன் தடுப்பதே நல்லது. நெருக்கமாக பழகும் வீட்டு விலங்குகளை சுத்தமாக பராமரிப்பது, அவற்றுக்கு குடற்புழு, ஒட்டுண்ணி நீக்க மருந்துகளை கொடுப்பது, அவற்றுடன் ஒன்றாக உறங்குவது, கட்டிப்பிடித்து விளையாடுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பதும் பயனளிக்கும்.

பச்சையாக மாமிசம் சாப்பிடும் பழக்கம் உரிய சில பகுதிகளில் புழுக்களும், அவற்றின் முட்டைகளும் அப்பகுதி மக்களுக்கு கண்களில் சில பாதிப்புகளை உண்டு பண்ணும். எந்த சூழ்நிலையிலும் தடுப்பு மருத்துவமே மிகச் சிறந்தது.

எச்.ஐ.வி. பாதிப்புடைய நபரது உடலில் அனைத்து வகையான கிருமித் தொற்றும் எளிதில் தாக்கக் கூடும் என்பதால் அவர்களில் இத்தகைய பிரச்னைகளை அதிகம் காணலாம். எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு வழக்கத்தைவிட எல்லா பரிசோதனைகளையும் துரிதமாகவும் குறித்த நேரத்திலும் செய்ய வேண்டியது மிக அவசியம்.

உடலின் சில நோய்களில் ஸ்டீராய்டு வகை மருந்து தேவைப்படுகிறது. அதில் கண் அழற்சியும் ஒன்று. அத்தகைய ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதும் அதனால் கண்புரை, கண் அழுத்தம் இவை நிகழலாம். அதற்கான பரிசோதனைகளையும் அவ்வப்போது செய்ய வேண்டும்.

எண்ணத்தில் தெரியாததை வண்ணத்தில் காண முடியாது என்பார்கள். அதனால் இத்தகைய பிரச்னைகள் இருக்கின்றன, அவற்றிற்கு இன்னின்ன அறிகுறிகள் தோன்றலாம் என்பதை ஓரளவுக்கேனும் அறிந்து வைத்துக் கொண்டால் அதற்கான தேடுதல்களையும் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

(தரிசனம் தொடரும்!)