மீன் மாத்திரை எதற்காக?!டாக்டர் எனக்கொரு டவுட்டு

நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒன்று மீன் மாத்திரை. சத்தான மாத்திரைகளில் பலரும் அறிந்த ஒன்றாகவும் மீன் மாத்திரை இருக்கிறது. இதன் பயன்பாடு என்ன? பொதுமருத்துவர் சிவராமகண்ணனுக்கு இந்த கேள்வி.

‘‘மீன் மாத்திரை அல்லது மீன் எண்ணெய் மாத்திரை என்பது பண்ணாமீன்(Cod) என்ற வகை மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த பண்ணா வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெயிலிருந்தே மீன் மாத்திரை தயாரிக்கப்படுகிறது. அதனால் இதை Cod Liver Oil என்கிறோம். இதில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.

கண் பார்வைக்கு வைட்டமின் ஏ நல்லது என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். வைட்டமின் D யானது உணவில் இருக்கும் கால்சியத்தை கிரகித்துக் கொள்வதற்கும், செல்களின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்யும்.

Omega 3 fatty acid கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் உடை எடையையும் குறைக்கும். காயம் ஏற்பட்டால் காயத்தை ஆற்றும் அருமருந்தாக இருக்கிறது. மேலும் பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்புத்தன்மைக்காகவும் மீன் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களாலேயே மீன் மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மீன் மாத்திரை சத்தான மாத்திரை என்றாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது. அதேபோல் ஒரு நாளைக்கு ஒன்றுதான் சாப்பிட வேண்டும். ஒன்றுக்கும் மேல் சாப்பிடுவதால் Vitamin A Toxicity என்ற பின்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.’’

- இதயா