Medical Trends



ரிலாக்ஸ்

ஹெல்த்தி ஃபேஸ் பேக்

எண்ணெய்ச் சுரப்பிகள் ஏற்படுத்தும் முகப்பருவால் முகத்தில் உள்ள சருமம் உலர்ந்து கரடுமுரடானதாக மாறுகிறது. முகத்தில் ஏற்படுகிற இந்த வறட்சியைத் தவிர்க்க ஃபேஸ் பேக்கினை (Face pack) முயற்சி செய்து பார்க்கலாம். அதையும் வீட்டிலேயேஎ எளிதாகத் தயார் செய்யலாம். 1/4 கப் தயிரில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் மெல்லிய பூச்சாக தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதை துடைத்து எடுக்கவும். இந்தக் கலவையில் உள்ள தயிர் உங்கள் சருமத்துக்கு நீர்ச்சத்து வழங்கி ஈரத்தை தக்க வைக்கிறது.

வேண்டாமே...கடின முயற்சி!

தலைப்பைப் படித்ததும், ‘என்னடா இது... எதிர்மறையாக உள்ளதே’ என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்குக் கேட்காமல் இல்லை. Psychological Science இதழில் வெளியான ஆய்வு முடிவுகள், இதையே வலியுறுத்துகிறது. ஒரு வேலையைக் கையில் எடுத்தாலும், அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று செயல்பட வேண்டுமே தவிர, அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறப்பாக செய்ய முயற்சிப்பது, மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வது என்ற இந்த இரண்டுக்குமிடையேயான வித்தியாசத்தை உணர்ந்தால் அந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு குறையும். மன அழுத்தமும் நீங்கும் என்கிறார்கள்.

துயரம் மாறுமா?

உலகில் ஒரு நிமிடத்துக்கு 17 நபர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 96 லட்சம் பேராக இருக்கிறது. எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் உயிரிழப்பை விட இது அதிகம். புற்றுநோய் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொள்ளவில்லை எனில், எதிர்வரும் 2030-ம் ஆண்டில் 1.30 கோடியாக புற்றுநோய் மரணங்கள் அதிகரிக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

ஆன்டிபயாட்டிக் ஆபத்து

‘ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவது பொதுமக்களிடம் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இது முற்றிலும் தவறானது. சளி அல்லது சாய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுவதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் மட்டுமே வாங்கி உட்கொள்வது நல்லது’ என்று காஷ்மீர் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பிரசவகால அபாயத்தை தவிர்க்க...

கர்ப்பிணிகள் தங்களுடைய முதுகுப் பக்கத்தை கீழே வைத்து, மல்லாந்து படுத்துத் தூங்குவது ஒரு முறை. பக்கவாட்டில் ஒருபுறமாக சாய்ந்து படுத்து உறங்குவது இன்னொரு முறை. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டாவது முறையே பாதுகாப்பானது என்று Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கூறுகிறது. பக்கவாட்டில் படுத்துத் தூங்கும்போது, கருவில் இருக்கும் குழந்தைக்குச் செல்கிற ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொகுப்பு: குங்குமம் டாக்டர் டீம்