அறிவியல் உலகம்!பொது அறிவு

மெல்லுடலிகளை உண்ணும் நட்சத்திர மீன்கள்!

தடிமனான முட்களுடன் கூடிய சரியான ஐந்து சமச்சீர் ஆரக்கால்களுடன் ஐங்கோண வடிவத்தில் இருக்கும் நட்சத்திர மீன்களில் பல வகைகள் உள்ளன. கடலில் காணப்படும் மெல்லுடலிகளே இதன் உணவாகும். சிறிய மீன்களையும் உணவாக இவை உட்கொள்ளும். நட்சத்திர மீன் உண்ணும் மெல்லுடலிகளில் கடல் சிப்பி பிரதானமானது.

கடல் சிப்பிகளுக்குள் இருக்கும் சதை போன்ற மெல்லுடலி உயிரிகளை வேட்டையாடும் நட்சத்திர மீன்கள், தனது முட்கள் நிரம்பிய கால்களால் உறிஞ்சி குடித்து உயிர் வாழ்கின்றன. இந்தியாவில லட்சத்தீவு கடல் பகுதியில் அதிகளவில் காணப்படும் நட்சத்திர மீன்கள், மன்னார் வளைகுடா கடலில்தான் அதிகளவில் வாழ்கின்றன. இவற்றை உணவாகப் பயன்படுத்துவது இல்லையென்றாலும், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு பல வகையிலும் உதவியாக உள்ளன.

கடல் நீரிலிருந்து எடுத்த சில நிமிடங்களில் உயிரிழக்கும் நட்சத்திர மீன்கள் பலவகை பல வண்ணங்களில் உள்ளன. அளவில் இந்த உயிரினங்கள் வேறுபட்டவை. மிகச்சிறிய 1.5 செ.மீ அளவு முதல்  பெரிய 90 செ.மீ அளவு வரை உள்ளன. ஸ்டார்ஃபிஷ் சுமார் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. பெரும்பாலும், நட்சத்திர மீன்கள் ஆழமற்ற நீர் விலங்கு, இருப்பினும் இந்த இனத்தில் சில ஆழ்கடல் பகுதியில் சென்று தங்குவதும் உண்டு. அப்படி செல்லும்போது சில நேரங்களில் நட்சத்திர மீன்கள் 9000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் காணப்படுகின்றன.

மீன்பிடி வலையில் சிக்கினால் மீனவர்கள் நட்சத்திர மீன்களை வலையிலிருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவர். உயிரிழந்த நன்கு உலர்ந்த நட்சத்திர மீன்களை வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பாடம் செய்து அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

நாற்பது மணிநேரம் ஒளிர்ந்த முதல் மின்விளக்கு!

இருளைப் போக்கி வெளிச்சம் வரவழைக்க மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் சாதனமே மின்விளக்குகள். மின்விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயல்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய நேரத்தை இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.

மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811-ம் ஆண்டிலேயே ஹம்பிரி டேவி என்பவர் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டுபிடித்தார். எனினும் இம்முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகளில் மின் முனைகள் மிக விரைவாக எரிந்துபோனதன் காரணமாகச் செயல்முறையில் வெற்றி பெறவில்லை.

 ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர்,‘‘மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ்வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும்’’ எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக்கோட்பாட்டைப் பயன்படுத்தி மின்விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று கிடைக்காததும், அதனை விரைவில் எரிந்துபோகாமல் பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன.

இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், 1879-ல் கார்பன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின்விளக்கைக் கண்டுபிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்குக் கிடைத்தது.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின்விளக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp), உடனொளிர்வு விளக்கு (Fluorescent Lamp), உலோக ஹேலைட்டு விளக்கு (Metal Halide Lamp), தங்ஸ்தன் - ஹாலஜன் விளக்கு (Tungstan-Halagen Lamp), பாதரச ஆவி விளக்கு (Mercury Vapour Lamp), சோடியம் ஆவி விளக்கு (Sodium Vapour Lamp) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மின்சாரத்தைப் பாய்ச்சும் விலாங்கு மீன்!

பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் ‘போராக்’ என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளைக் கண்டுபிடிக்க முயன்று வந்தார். இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரப்பர் கையுறைகளை எப்போதும் அவர் அணிந்திருந்தாலும், சில வேளைகளில் மின்சார அதிர்வுகளுக்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை. ஆனால், அவர் அனுபவித்த கஷ்டங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. இவரது ஐந்து ஆண்டு தேடலின் பயனாக மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அதில் ஒன்று 860 வால்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடமிருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ள மீனின் வகை இதுவாகும். இதற்கு முன்பு 650 வால்ட் மின்சாரம் வெளியிடும் மீன் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாகப் பதிவாகியிருந்தது. இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தகவலை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளார்.

‘போராக்’ என்று அறியப்படுகிற மின்சார விலாங்கு மீன் பிடிக்கும்போது கார்லோஸ் டேவிட் டி சாண்டனாவுக்கு பலமுறை ஷாக் அடித்துள்ளது. ‘போராக்’ என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம். குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் காணப்படுகின்றன.

‘போராக்’ வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்துக் கொள்ளவும் இவை பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த மீனிலுள்ள மூன்று உறுப்புகளால் இந்த மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.