கலாசாரம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை!ஊக்கத்தொகை

கலாசாரம் சார்ந்த கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 1979ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ‘The Centre for Cultural Resources and Training (CCRT)’ என்ற அமைப்பு. புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனமானது மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவருகிறது.

இந்தியாவின் பன்முக கலாசாரத்தை,  நிலம் சார்ந்த பண்பாட்டை மாணவர்களுக்கு கடத்தும் பொருட்டு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்களை இந்நிறுவனம் நடத்திவருகிறது. இந்தியாவின் கலை, கலாசாரம், பண்பாடுகளை கல்வி வழியே பல தலைமுறைகளுக்கு கடத்திவரும் இந்நிறுவனத்தில் கலாசாரம் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் 2019-20ம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊக்கத்தொகை: கலை, இலக்கியம், பிளாஸ்டிக் ஆர்ட்ஸ் மற்றும் இந்திய கலாசாரம் சார்ந்த மற்ற துறைகளில் ஆராய்ச்சித் திட்டம் மேற்கொள்பவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்நிறுவனம், ஜூனியர் மற்றும் சீனியர் என்ற பிரிவுகளில் ஊக்கத்தொகைகளை வழங்கிவருகிறது. அதன்படி இவ்வருடமும் ஊக்கத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் பிரிவில் 200 மற்றும் சீனியர் பிரிவில் 200 என மொத்தம் நானூறு பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. ஜூனியருக்கு ரூ.10,000, சீனியருக்கு ரூ.20,000 என இரண்டு வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருப்பது இரண்டு பிரிவுகளுக்கும் கல்வித் தகுதியாக கருதப்படுகிறது.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.4.2019 அன்றின்படி ஜூனியர் பிரிவினர்  25 வயது முதல் 40 வயதிற்கு மிகாமலும், சீனியர் பிரிவினர் 40 வயதிற்கு மேலும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மத்திய கலாசார அமைச்சகத்தால் அமைக்கப்படும் பல்துறை நிபுணர்களால் விண்ணப்பதாரர்களின் ஆராய்ச்சித் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://csms.nic.in/login/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.10.2019.மேலும் விவரங்கள் அறிய www.ccrtindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

 -துருவா