அன்று: ஒற்றை கம்ப்யூட்டரில் ஆரம்பித்த அலுவலகம் இன்று: சர்வதேச நாடுகளுக்கு சேவை வழங்கும் நிறுவனம்வெற்றிக் கதை

ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கற்றபோது உழைப்பால் உயர்ந்தோர், தன்னம்பிக்கையால் சாதித்தோர், விடாமுயற்சியால் வெற்றி பெற்றோர் எனப் பலரது வாழ்க்கை வரலாறுகளை முன்னுதாரணங்களாக வைத்துக்கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால், இன்று எப்படியாவது பொருளீட்டி சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றுவிட முயல்கிறார்கள். ‘நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்’ என்ற பழமொழியை வேறு கூறுகின்றனர். விதவிதமான குறுக்கு வழி பிசினஸ்கள் வேறு. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடிகளிலும், சைபர் கிரைம்களிலும் ஈடுபடுவோர் அதிகமாகி விட்டனர்.

தொழில்நுட்பங்கள் அனைத்தும் நல்ல விஷயங்களுக்காகவே கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை தவறாகப் பயன்படுத்தி பணம் ஈட்டுபவர்களையும், தவறுகளையும் கண்டுபிடித்து கொடுக்கவும் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் (Prompt Infotech) கம்பெனி நிறுவனர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன், தான் முயற்சித்து வெற்றிபெற்ற கதையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

‘‘கடலூர் மாவட்டம் நெய்வேலிதான் எனது சொந்த ஊர். பள்ளிப் படிப்பை அங்குள்ள பள்ளியில் முடித்தேன். சிறு வயதிலிருந்தே கம்ப்யூட்டர்மீது அதிக ஆர்வம் இருந்ததால் அதுகுறித்து முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினேன். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் பி.இ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தேன்.

ஆனால், அந்த சமயத்தில் என்னுடைய ஆர்வம் கம்ப்யூட்டரிலும் தொலைத்தொடர்பு தொடர்பான விஷயங்களிலும் தான் இருந்தது. என்னுடைய சக மாணவர்களின் கவனம் முழுவதும் கம்ப்யூட்டர் புரோக்ராமிங், வெப் டிசைனிங் மற்றும் சாஃப்ட்வேர் ஆகியவற்றில் இருந்தது. என்னுடைய கவனம் முழுவதும் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை எப்படி பாதுகாப்பாக வைப்பது என்ற விஷயங்களிலேயே இருந்தது. இதுதான்  சைபர் கிரைம் செக்யூரிட்டி மற்றும் ஹேக்கிங் தொடர்பான ஆய்வில் முன்வர எனக்கு முதல்படியாக இருந்தது.

பெரும்பாலானோர் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது என்பதில் கவனம் செலுத்தி அதற்காக உழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், என்னுடைய எண்ணம் முழுவதும் அந்தத் தொழில்நுட்பத்தை எப்படி பாதுகாப்பாக வைப்பது என்பதில் இருந்தது. இந்த விஷயம் என்னை சைபர் கிரைம் தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ளத் தூண்டியது. அந்தக் கல்லூரி நாட்களில் இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள தேடித் தேடி படித்தேன், அதற்காக அதிகளவில் உழைத்தேன்.

ஒரு தொழில்முனைவோராக உருவாகி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது’’ என்கிறார் சங்கர்ராஜ்.
‘‘புதிதாக தொழில் தொடங்க முதலில் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து பட்டப்படிப்பு முடித்தவுடன் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். அந்த நிறுவனம் துபாயைச் சேர்ந்தது என்பதால் பணியில் சேர்ந்த ஒரு ஆண்டில் துபாய்க்கு அனுப்பி வைத்தார்கள். அந்த நிறுவனம் சைபர் கிரைம் செக்யூரிட்டி மற்றும் ஹேக்கிங் தொடர்பான சேவைகளை வழங்கிவந்தது.

இதன் வாயிலாக பெரிய நிறுவனங்களின் தொடர்புகள், சர்வதேச சந்தை நிலவரம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய பின்பு அந்த நிறுவனத்திலிருந்து விலகி கோயம்புத்தூருக்கு வந்தேன். அங்கு எம்.பி.ஏ பட்டப்படிப்பை தொடர்ந்தேன். சொந்தமாக தொழில் தொடங்க எம்.பி.ஏ. உதவியாக இருக்கும் என்று கருதினேன்.

அதேசமயம் தொழில் தொடங்குவதில் ஒரு தயக்கம் மற்றும் பயம் இருந்தது. துபாயில் வேலை பார்க்கும்போது அதிக சம்பளம் வாங்கினேன். ஆனால், ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தும் போது, அதை தொடர்ந்து நடத்த தேவையான நிதிக்கு என்ன செய்வது என்ற பயம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அந்த சமயத்தில்தான் ஏற்கனவே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்த நண்பர் ஜெயபாலாஜியின் தொடர்பு கிடைத்தது. அவர் நான் சுயமாக தொழில் தொடங்க மிகவும் ஊக்குவித்தார்.

இதைத்தொடர்ந்து எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு முடித்தவுடன் சில புராஜக்ட்டுகளை தனியாக எடுத்து செய்யத் தொடங்கினேன். இரண்டாம் ஆண்டில் என்னுடைய நிறுவனத்தை தொடங்கினேன்’’ என்று சொல்லும் சங்கர்ராஜ் தனது நிறுவனம் தொடங்கப்பட்டதையும் படிப்படியாக முன்னேறியதையும் விவரித்தார்.

‘‘நான் நண்பர்களோடு தங்கியிருந்த வீட்டில் ஒரு அறையை அலுவலகமாகக் கொண்டு நிறுவனத்தை செயல்படுத்தத் தொடங்கினேன். அங்கு ஒரு மேஜை, நாற்காலி, ஒரு சாதாரண கம்ப்யூட்டரில்தான் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. அங்கிருந்துகொண்டே பல்வேறு புராஜக்ட்டுகளை செயல்
படுத்த தொடங்கினேன். இதன் பின்னர் ஓரளவிற்கு வருமானம் வந்ததையடுத்து தனியாக அலுவலகம் அமைத்து இடம்பெயர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் சைபர் கிரைம் பாதுகாப்பிற்கு அதிக தேவை இருந்தது.

அதேசமயம் இத்தொழிலில் கடும் போட்டியும் நிலவியது. என்னுடைய அலுவலகம் அமைந்திருந்த அதே தெருவில்தான் ஏராளமான மிகப்பெரிய நிறுவனங்களும் இருந்தன. இத்தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்களின் கடும் போட்டியை எதிர்கொண்டு இத்தொழிலில் என்னால் சாதிக்க முடியுமா என்பது பலரின் கேள்வியாக இருந்தது.

ஆனால், எனக்கு மட்டும் கண்டிப்பாக நம்மால் சாதிக்க இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது நிறுவனத்தை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்துறையில் சாதித்துவிட்டேன் என்றே கூறலாம்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் சங்கர்ராஜ்.‘‘புதிதாக நிறுவனத்தைத் தொடங்கியதில் என் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள், ‘துபாய் வேலையை ஏன் விட்டாய்?’ என்று வருத்தப்பட்டார்கள்.

என்னுடைய குடும்பத்திலிருந்து நான்தான் முதன்முறையாக தொழில் தொடங்கியுள்ளேன். எனவே, அதில் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருந்தது. கையில் எந்த முதலீடும் இல்லாமல்தான் நிறுவனத்தைத் தொடங்கினேன். நிறுவனம் தொடங்கிய சமயத்தில் நிறுவனத்தில் பணியாற்ற யாரும் முன்வரவில்லை. ஆகவே, இத்துறையில் ஆர்வம் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை இணைத்துக்கொண்டேன். அப்போது என் நிறுவனத்தில் இணைந்தவர்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுதான் தொழிலை நடத்த முடிந்தது. அப்படி இடர்ப்பாடுகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு நிறுவனத்தை உருவாக்கி வளர்த்து அது தற்போது 3 கிளைகளுடன் விரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 35 நாடுகளுக்கு பயணித்துள்ளேன். அந்த நாடுகளில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் சேவை வழங்கி வருகின்றோம். இதில் ரஷியன் அரசாங்கம், நேபாள் அரசாங்கம், பூட்டான் அரசாங்கம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

தமிழக காவல்துறை, தமிழக சைபர் கிரைம் பிரிவு மற்றும் இஸ்ரோவுக்கு சைபர் கிரைம் தொடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். தொழிலைத் தொடங்கி தொழில்முனைவோராக சாதிப்பது என்பது மிகச் சிறந்த விஷயம். இதற்கு கடின உழைப்பு, மனதைரியம், மனஉறுதி, நம் திறமை மீது நம்பிக்கை இருந்தால் போதும், கண்டிப்பாக சாதிக்க இயலும். தொழில் தொடங்குவதன் வாயிலாக நமது புதுப்புது ஐடியாக்களை செயல்படுத்த இயலும். நாம் சுதந்திரமாகவும் இயங்க இயலும்.

நாம் தொழில்முனைவோராக அரசு பல்வேறு திட்டங்களையும், வழிகாட்டுதல்களையும், நிதி உதவியும் அளித்துவருகிறது. பணம் இருந்தால்தான் தொழில் தொடங்க முடியும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து நம் திறமை மீது நம்பிக்கை இருந்தாலே எதையும் சாதித்துக்காட்டலாம் என்ற எண்ணம் தொழில்முனைவோராக உருவாக நினைக்கும் ஒவொருவருக்கும் இருக்க வேண்டும்” என்ற அறிவார்ந்த வார்த்தைகளுடன் முடித்தார்
சங்கர்ராஜ் சுப்பிரமணியன்.

  - தோ.திருத்துவராஜ்