இ-காமர்ஸும் நேரடி வர்த்தகமும்!



வழிகாட்டல்

வளர்ந்து வரும் நிறுவனங்கள் மட்டுமல்லாது தொழில்முனைவோர்களும் இப்போது இ-காமர்ஸ் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி உள்ளனர். இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் செல்போன், கம்ப்யூட்டர் இவற்றின் உபயோகம் பெருமளவு அதிகரித்ததுதான்.
சிட்டி முதல் பட்டிதொட்டி வரை வாழும் மக்கள் மனநிலை இன்டர்நெட் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என எண்ணும் அளவுக்கு மாறிவிட்டது. குறிப்பாக இளைஞர்களால் இன்டர்நெட் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது.

இன்டர்நெட் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றன. இப்படி நீங்களும் இ-காமர்ஸ் துறையில் வெற்றி நடை போடணுமா? நீங்களும் இ-காமர்ஸை தொழிலாகச் செய்ய விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக வழிகாட்டுகிறார் தொழில் ஆலோசகர் ஆர்.எஸ்.ராஜன்…

‘‘இணையத்தில் உங்கள் பொருட்களை வணிகப்படுத்துவது இ-காமர்ஸ் ஆகும். இ-காமர்ஸ் எனும் தொழில்நுட்பம் முதன்முதலில் கைபேசி மூலம் வர்த்தகம், மின்னியல் பணப்பரிவர்த்தனை போன்றவைக்கு உதவியது. இ-காமர்ஸ் துறை சமீப காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய வியாபார வாய்ப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நாட்டில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்ததே காரணம். 2000ம் ஆண்டுகளில் இன்டர்நெட் பயன்பாடு படிப்படியாக வளர்ச்சி அடையத் தொடங்கியது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்டின் வேகம் மிக மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இன்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்ட 20 ஆண்டுகளில் 70-80 சதவீத மக்களைச் சென்றடைந்துள்ளது.

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கம்ப்யூட்டரும், இன்டர்நெட் சேவையும் இருந்தால் அனைத்து பணிகளையும்
நம்முடைய இருப்பிடத்திலிருந்தே செய்யலாம். இன்டர்நெட் மூலம் வியாபாரம் செய்யலாம். அதற்கான பணத்தை இன்டர்நெட் மூலமே பெறலாம். நாம் செலுத்த வேண்டிய பணத்தையும் இன்டர்நெட் மூலமே செலுத்தலாம்.

உற்பத்தி செய்த பொருட்களை இணையம் மூலம் சந்தைப்படுத்தி விற்பனை செய்யலாம். இவ்வாறு பல்வேறு பணிகளை இணையம் மூலம் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த இன்டர்நெட்டின் வளர்ச்சிதான் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு ஜவுளிக்கடை வைக்கவேண்டு மானால் அதற்கு இடம், முதலீடு, வசதிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. அதேசமயம் இ-காமர்ஸ் இணையதளத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவு வேண்டுமானாலும் போஸ்டிங் இடலாம். இதற்கு முதலீடு என்று எடுத்துக்கொண்டால் மிக மிகக் குறைவு.

இ-காமர்ஸ் இணையதளத்தைப் பொறுத்தவரையில் அதில் வெறும் ஆடைகள் மட்டுமில்லாமல் அனைத்து வகையான பொருட்களையும் போஸ்டிங் செய்ய முடியும். அவ்வளவு இட வசதிகள் இருக்கின்றன. இந்த இணையதளத்தை யார் வேண்டுமானாலும் எளிதாகப் பார்வையிடவும், வாங்கக்கூடிய சூழலும் இருக்கிறது. சென்னை தி-நகரில் ஒரு கடை இருக்கிறது என்றால், அதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் மட்டுமே பயன்பெறுவார்கள். ஆனால், இ-காமர்ஸ் இணையதளத்தால் அகில உலகமெங்கும் உள்ள மக்கள் பயன்பெறுகிறார்கள். அனைத்து மக்களையும் சென்றடைகிறது’’ என்று இ-காமர்ஸ் பற்றிய அடிப்படையான தகவல்களை விவரித்த ஆர்.எஸ்.ராஜன் இதுவரை வளர்ச்சி கண்டதையும் எதிர்கால வளர்ச்சிக்கான மதிப்பீடுகளையும் பட்டியலிட்டார்.

‘‘முன்பெல்லாம் இ-காமர்ஸ் வளர்ச்சி என்பதை மில்லியன், பில்லியனில் குறிப்பிடுவார்கள். ஆனால், தற்போது இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி டிரில்லியனில் சென்றுகொண்டிருக்கிறது. டிரில்லியன் என்பது லட்சம் கோடி. கடந்த 2014ம் ஆண்டு இ-காமர்ஸ் துறை வாயிலாக 1.3 டிரில்லியன் வர்த்தகம் நடந்துள்ளது. இது 2021ம் ஆண்டு 4.9 டிரில்லியனாக வளர்ச்சி அடையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இத்துறை 2021ம் ஆண்டில் 221 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களால் மட்டும் இந்த வளர்ச்சி எட்டப்படவில்லை. இ-காமர்ஸ் இணையதளங்கள் வாயிலாக புத்தகங்கள், மியூசிக் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை வாங்குவதாலும் இத்துறை மிகச் சிறப்பான வளர்ச்சியடைந்து வருகிறது. இப்படி ஒவ்வொன்றிலும் இ-காமர்ஸ் துறை அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது. ஒரு வணிக வளாகத்திற்கு செல்வதற்கு நேரம், போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் வசதி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆனால், இ-காமர்ஸ் இந்த விஷயங்களையெல்லாம் ஈடுசெய்துவிடுகின்றது. இ-காமர்ஸ் இணையதளங்கள் தற்போது சட்ட ஆலோசனைகள், மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை வழங்குகின்றன. அதுதவிர பள்ளி, கல்லூரிப் பாடங்களுக்கு டியூஷன் வழங்கத் தொடங்கியுள்ளது. அதுவும் மிகச் சிறந்த வல்லுநர் குழுவைக் கொண்டு டியூஷனை நடத்தி வருகின்றன. இப்படி அனைத்து விஷயங்களும் இ-காமர்ஸ் இணையதளத்தில் கிடைக்கின்றன’’ என்று சொன்னதோடு இத்துறையில் உள்ள சாதக பாதகங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை ஆர்.எஸ்.ராஜன்.

‘‘இத்துறையில் மிகச்சிறந்த நிறுவனங்களும், சில ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களும் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.இவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதுதவிர இத்துறை நிறுவனங்களை இ-மெயில், குறுஞ்செய்திகள் வாயிலாகத்தான் தொடர்புகொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இதுதான் மக்களுக்கு சற்று சிரமமாக உள்ளது. இந்தக் குறைகளைக் களைய நேரடி வர்த்தகம் என்ற விஷயம் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த நேரடி வர்த்தகம் இ-காமர்ஸ் துறையின் ஓர் இணைப்பு ஆகும். இ-காமர்ஸ் இணையதளங்களை அடையாளம் காண்பதற்கு நேரடி வர்த்தகம் உதவியாக இருக்கிறது.

இந்த நேரடி வர்த்தகத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை நண்பர்கள், உறவினர்கள் அளிக்கின்றனர். இ-காமர்ஸ் இணையதளங்கள் வாயிலாக பொருட்கள் வாங்கும்போது நமக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இவர்களிடம் எடுத்துக்கூறி தீர்வு காண முடிகிறது. தற்போது இந்த நேரடி வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

இந்திய நேரடி வர்த்தக சங்கம் (Indian Direct Selling Association - IDSA) இந்திய அளவில் சிறந்த முறையில் நேரடி வர்த்தகம் செய்பவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. அதில் கலந்துகொண்டு முதல் 5 இடத்திற்குள் வர்த்தகத்தில் முன்னிலை பெற்றதற்காக வழங்கிய விருதை நானும் எனது மகள் ஆஷிகாவும்் பெற்றோம்.

தற்போது நாம் அனைவரும் டச் ஸ்கிரீன் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். வருங்காலத்தில் வாய்ஸ் சார்ந்த அதாவது, நாம் என்ன சொல்கிறோமோ அதை செயல்படுத்தக்கூடிய மொபைல் போன்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. அப்போது இத்துறை மேலும் வளர்ச்சி அடையும். முன்பு வங்கிக்கு சென்றுதான் பேமென்ட் தொடர்பாக  அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ஏ.டி.எம். மையங்கள், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பே-டியம், அமேசான் பே, கூகுள் பே போன்ற பல்வேறு பேமென்ட் ஆப்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

வருங்காலத்தில் பல சர்வதேச பேமென்ட் ஆப்கள் வர உள்ளன. உலகம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு பொதுவான கரன்சியும் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றது. இப்படி  இ-காமர்ஸ் துறை ஒரு அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேசமயம், இப்படி இந்த அசுர வளர்ச்சியால் சில்லறை வர்த்தக நிறுவனங்கள், புக் ஸ்டால்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. இன்னும் வருங்காலத்தில் இதுபோன்று பல தொழில்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது.

எனவே, தொழில் நடத்துவோர் இ-காமர்ஸ் சார்ந்து தொழிலை நடத்த தயாராக வேண்டும்.வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இணையதளம், யூ டியூப் ஆகியவற்றின் வாயிலாக தங்கள் வர்த்தகத்தை மக்களிடம் சென்றடைய வைக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலை திறம்பட நடத்த முடியும். இப்படி இ-காமர்ஸ் வர்த்தகத்தைப் புரிந்து அதனை நோக்கி நம்முடைய கவனத்தை செலுத்துவதன் வாயிலாக தொழிலில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்’’ என்றார்.

  - தோ.திருத்துவராஜ்