அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி!



சர்ச்சை

தமிழகத்தில் இயங்கிவரும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் புதிய நபர்கள் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் கடந்த 28ம் தேதி வெளியிட்டது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் உள்ளது.

இந்த உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தேர்வு வாரிய (www.trb.tn.nic.in) இணையம் வழியாக 4.9.2019 முதல் தொடங்கும் என 3.9.2019 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்ப்போம்…

சுரேஷ், மாநில இணைச் செயலாளர், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம்.

1996 ஆம் ஆண்டுக்கு முன் அரசுக் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 10A1 மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் நிரந்தரம் செய்யப்பட்டனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நான்கு முறை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் சுமார் 1500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்வுமுறை என்பது 400 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு, 50 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வு என்றிருந்தது.
பின்னர் 2007 முதல்  2015  வரை ஐந்து முறை மொத்தம் சுமார் 4500 ஆசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு 5 ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள், நெட்/ செட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்கள், ஓர் ஆண்டு கல்லூரி ஆசிரியர் பணி அனுபவத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் (அதிகபட்சம் 15) ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் புத்தகம் எழுதியதற்கு 5 மதிப்பெண்கள் என மொத்த 29 மதிப்பெண்களுக்கு விண்ணப்ப தாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த மதிப்பெண்கள் 24 ஆக குறைக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வுக்குப் பத்து மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது.

பணி அனுபவத்திற்கு அதிகபட்சமாக 63 சதவீதம் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டது. மேற்கூறிய நடைமுறைகள் தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டதே தவிர, UGC-ன் நெறிமுறைகள் எவையும் இதுகுறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட UGC நெறிமுறைகளில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு அதிகபட்சம் 100 மதிப்பெண்கள் எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும் என வரையறை செய்துள்ளது.

அதில் கல்லூரி ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு அதிகபட்சம் 84 மதிப்பெண்கள் (முனைவர் பட்டம் 25, நெட்  JRP 10, நெட் 8, செட் 5, இளநிலைப்பட்டத்தில் பெற்ற மதிப்பெண்களுக்கு 21, முதுநிலைப் பட்டங்களுக்கு 25, விருதுகளுக்கு 5) எனவும், பணி அனுபவத்திற்கு 10 மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் பணி அனுபவத்திற்கு 63 சதவீதமும், கல்வித் தகுதிக்கு 37 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளதால், பணி அனுபவம் அதிகம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

UGC நெறிமுறைகள் 2018ன் படி பணி அனுபவத்திற்கு 10 சதவீதம் மட்டுமே வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளதால், பணி அனுபவம் உள்ளவர்களுக்கான வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளது. இந்தச் சூழலில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பேராசிரியர் ப.சிவகுமார், கல்வியாளர்.

அரசுக் கல்லூரிகளில் தற்போது 4000 பேர் வருகை ஆசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் ஏறத்தாழ 2000 பேர் பல்கலைக்கழக நல்கைக்குழு கூறியுள்ள கல்வித் தகுதியுடன் இருக்கின்றனர். கடந்த காலங்களில் தற்காலிக ஆசிரியர்களையும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆசிரியர்களையும், ஆசிரியர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் நிரந்தரப்படுத்தியது தமிழக அரசு.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருகை ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவேன் என தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தார். தற்போது ஆளுகின்ற அதிமுக அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வருகை ஆசிரியர்களுக்கு நடக்கப் போகும் நேர்முகத் தேர்வில் முன்னுரிமை தருமா? என வருகை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது பணியில் சேரும் உதவிப் பேராசிரியர் ஏறத்தாழ 70,000 ஊதியமாகப் பெறும் வாய்ப்புள்ளதால் கடுமையான போட்டி நிலவுகிறது. UGC கல்வித் தகுதியோடு அரசு கல்லூரிகளில் உள்ள வருகை ஆசிரியர்கள் தவிர சுயநிதிக் கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கில் குறைந்த ஊதியத்தோடு இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இளைஞர்களும் இந்த நேர்முகத் தேர்வை எதிர்நோக்கி உள்ளனர்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள நியமன ஊழலும், 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராரிசிரியர் பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் நடந்த ஊழலும் இந்த இளைஞர்கள் மத்தியில் மனஉளைச்சலை  ஏற்படுத்தியுள்ளன.

வேலையற்ற இளைஞர்களும், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் இளைஞர்களும் UGC கல்வித் தகுதியோடு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் ஊழல் இல்லாமல் இந்த நேர்முகத் தேர்வு நடைபெற உயர்கல்வித்துறை அமைச்சரும், உயர்கல்வித்துறை செயலரும், ஆசிரியர் தேர்வு வாரிய செயலரும் செயல்படுவார்களா என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். உயர்கல்வித் துறையில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்க உத்தரவாதப்படுத்துவது ஆசிரியர் சங்கங்களின் வேலையாகும்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்