பள்ளிக் கல்வித்துறையின் திட்டமிடாத தொடக்கமும் நடைமுறைத் திணறல்களும்..!



சர்ச்சை

தமிழகக் கல்வித்துறையில் அவ்வப்போது இந்தியாவே திரும்பிப்பார்க்க வைக்கும் அறிவிப்பு வெளியாகப்போகிறது என்ற முன்னோட்டம் அளிக்கப்படும். அவற்றுள் சில அறிவிப்போடு நின்றுவிடும். மற்ற சில அறிவிப்புகள் திட்டங்களாக மாறி அவசர கதியில் தொடங்கப்படும். உதாரணமாக, 2012 ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை அதிகரிக்க இது பயன்படும் என்று காரணம் கூறப்பட்டது.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கிலவழிக் கல்வியில் பயில மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்தனர். ஆறாம் வகுப்பில் அப்போது சேர்ந்த மாணவர்கள் தற்போது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டனர். இன்னும் ஆண்டுதோறும் ஆங்கிலவழிக் கல்வியில் பயில சேர்ந்துகொண்டுதானிருக்கின்றனர். அப்படி சேர்ந்து பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் தமிழ்வழிக் கல்விக்கு மாற விரும்புகிறார்கள். என்ன காரணம் என்று பெற்றோர்களிடம் விசாரித்தால் அவர்கள் சொல்வதும் நியாயமாகத்தான் இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் தமிழ்வழி, ஆங்கிலவழி என இரண்டு வகை மாணவர்களும் ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்படுகின்றனர். மேலும் ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்களுக்கும்  தமிழ்வழியிலேயே கற்பிக்கப்படுகிறது என்று குறைபட்டுக்கொள்கின்றனர். ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயின்ற திருப்தி இல்லை.

ஆசிரியர்கள் தரப்பில் கேட்டால் அரசு விதிகளின்படி 61 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் தமிழ்வழிக் கல்வி ஆங்கிலவழிக் கல்வி என பிரித்து அமர வைக்க முடியும். 60 மாணவர்கள் இருந்தாலும் அனைவரையும் ஒரே வகுப்பறையில் அமரவைத்துதான் கற்பிக்க முடியும். ஆங்கில வழியில் கற்பிப்பதற்கான ஆசிரியரையும் தனியாக நியமிப்பதில்லை, தனியாக வகுப்பறையும் ஒதுக்கப்படுவதில்லை. இந்தக் குறைபாடு ஆங்கிலவழிக் கல்வி தொடங்கி ஏழு ஆண்டுகளாகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

ஒன்றாக அமர்ந்து மொழிப் பாடங்கள் கற்பிப்பதில் ஒன்றும் சிரமமில்லை. ஆனால், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை ஒரே ஆசிரியர் தமிழ்வழியிலும் ஆங்கிலவழியிலும் கற்பிப்பது ஒரு ஆள் ஒரே நேரத்தில் இரண்டு மிதிவண்டிகளை ஓட்டுவதைப் போன்ற சிரமமான காரியம். ஒரே பாடத்தை முதலில் தமிழிலும், பிறகு அதே பாடத்தை ஆங்கிலத்திலும் நடத்துவதால் ஒரு பிரிவு மாணவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுகிறது. ஆசிரியர்களைப் பொறுத்தவரை வினாத்தாள் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் இரண்டு முறை செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பாடத்தை முடிக்க முடிவதில்லை.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழியில் எட்டாம் வகுப்பு முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு சேரும்போது தமிழ்வழிக் கல்வியையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயின்று அதன் நோக்கம் கேள்விக்குறியாகிறது.

பின்லாந்து, நெதர்லாந்து என மற்ற நாடுகளைப் பார்த்து நமது கல்வித்துறையை மேம்படுத்த நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மறு ஆய்வு செய்து சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.