பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்பும் ஊழியர்கள் எதிர்ப்பும்!
சர்ச்சை
வங்கிகளின் தரத்தை சர்வதேச அளவில் மாற்றும் முயற்சியாகவும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிப்பதற்காகவும் பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  வங்கிகள் இணைப்பு பொதுமக்களுக்கு, வங்கி ஊழியர்களுக்கு, தொழில்முனைவோருக்கு நல்லதா கெட்டதா என்பது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம்… அவர் தரும் தகவல்களைப் பார்ப்போம்…  ‘‘2019 ஆகஸ்ட் 30ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். இது வங்கிகள் இணைப்பல்ல. மாறாக இது வங்கிகள் மூடல். அதாவது ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி ஆகிய ஆறு வங்கிகளை மூட இந்த அரசு முடிவு செய்துள்ளது.
 பாஜக அரசு முதலில் ஆட்சிக்கு வரும்போது 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. அதில் ஐடிபிஐ என்ற பொதுத்துறை வங்கியின் 51% பங்குகளை எல்ஐசிக்கு விற்றுவிட்டு, அவ்வங்கியை தனியார் வங்கி என்று ஆக்கிவிட்டது. 2017 ஏப்ரல் மாதம் 5 துணை வங்கிகளும், பாரத் மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தேனா வங்கியும், விஜயா வங்கியும் பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.
இந்த இணைப்பு நடந்து 5 மாத காலம் ஆன பின்னரும் உண்மையான இணைப்பு என்பது இதுவரை நடைபெறவில்லை. இந்த அளவிலும் தேனா வங்கியும் விஜயா வங்கியும் அவர்களின் பெயர்ப்பலகைத் தாங்கிய கிளைகள் உள்ளன. மென்பொருள் இணைப்பு என்பது இதுவரை நடைபெறவே இல்லை. இதன் காரணமாக வங்கியின் அன்றாட வாடிக்கையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
ஆக 18 வங்கிகளே எஞ்சியிருந்தன. தற்போதைய அறிவிப்பின் மூலம் இந்த எண்ணிக்கையை 12 ஆக குறைக்கப் பார்க்கிறது மத்திய அரசு’’ ஆணித்தரமாக சொல்லும் சி.பி.கிருஷ்ணன் தனியாருக்கு தாரைவார்க்கவே இந்த திட்டம் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.
‘‘யாரிடமெல்லாம் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. முக்கியமாக 10 லட்சம் வங்கி ஊழியர்களை பிரதிநிதிப்படுத்தும் சங்கங்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும், ஆனால் அவர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த மெகா இணைப்பு தடாலடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் பொதுத்துறை வங்கிகளை இணைத்து எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிற மத்திய அரசு, மறுபுறம் பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, ஈக்விடாஸ், ஜனா, ஏர்டெல், ரிலையன்ஸ், பேடிஎம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளை தொடங்குவதற்கு அனுமதித்துள்ளது. அப்படியானால் பொதுத்துறைக்கு கல்தா, தனியாருக்கு சிவப்புக் கம்பளமா?
ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு, 2000 கிளைகளும், 250-க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. 2017 ஏப்ரல் முதல் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5,000 இருப்பு இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.
இல்லையென்றால், மாதம் 100 ரூபாய் அபராதம். நகல் பாஸ் புத்தகம், வங்கியில் பணம் போட, எடுக்க, ஏடிஎம்-ல் பணம் எடுக்க என்று பல முனைகளில் அபராதமாக சாதாரண டிக்கையாளர்களிடமிருந்து ஸ்டேட் வங்கி நிர்வாகம் 2017-18 ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.1800 கோடி வசூலித்தது. அதே ஆண்டில் பெரு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் ரூ.27,000 கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இவ்வங்கியின் வராக்கடன் 1,77,000 கோடி ரூபாயிலிருந்து ஓராண்டிலேயே ரு.2,25,000 கோடியாக உயர்ந்துவிட்டது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என்பது சாதாரண மக்கள் சேவையிலிருந்து பணக்காரர்களுக்கான சேவையாக திசை மாற்றும் வேலையாகத்தான் இருக்கிறது’’ என்கிறார்.
‘‘ஆறு லட்சம் கிராமங்கள் உள்ள நம் நாட்டில் சுமார் 35,000 கிராமப்புறங்களில்தான் கிளைகள் உள்ளன. இன்றளவிலேயே 40% கிராம மக்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. அவர்கள் கந்துவட்டிக் காரர்களையே சார்ந்துள்ளனர். இந்தியா தவிர்த்த மற்ற பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரு லட்சம் மக்களுக்கு 40 வங்கிக் கிளைகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 7 கிளைகள் மட்டுமே உள்ளன. எனவே, எப்படிப் பார்த்தாலும் கிராமப்புறக் கிளைகள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆனால், வங்கிகள் இணைப்பு பல்லாயிரக்கணக்கான கிளைகள் மூடலுக்கு இட்டுச் செல்லும். இது சாமான்ய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.மத்தியில் மீண்டும் வந்துள்ள மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது.
ஏர் இந்தியா, ரயில்வே, இன்சூரன்ஸ், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலைகள், சேலம் ஸ்டீல் உள்ளிட்ட 42 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றையெல்லாம் தனியார்மயமாக்க தீவிர முயற்சியை இவ்வரசு மேற்கொண்டு வருகிறது. அதே வழியில் எடுக்கப்படும் முயற்சிதான் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு.
வங்கித்துறையின் உண்மையான பிரச்னை வராக்கடன் பிரச்னையாகும். ரூபாய் 14 லட்சம் கோடிக்கும் கூடுதலாக உள்ள வராக்கடனில் பூஷன் ஸ்டீல், ஜெ.பி.இன்ஃப்ரா, மோன்னட் இஸ்பட், அலோக்இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஸ்டீல் உள்ளிட்ட 12 பெரிய நிறுவனங்களின் வராக்கடன் மட்டுமே ரூ.3.45 லட்சம் கோடியாக உள்ளது.
இதனை வசூல் செய்வதற்கு என்று சமீபத்தில் இயற்றப்பட்ட திவால் சட்டமோ இதனை வசூல் செய்வதற்கு பதில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யவே உதவுகிறது. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், மேலும் பெரு நிறுவனங்களுக்கு சேவகம் புரியவுமே பொதுத்துறை வங்கிகள் இணைப்பை முன் வைக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்.
‘‘இந்த இணைப்புக்கு பிறகு ஸ்டேட் வங்கியில் 20 ஆயிரம் ஊழியர்கள் உபரி ஆகிவிட்டார்கள். 4 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார்கள். கிளைகள் மூடப்படுவதால் ஊழியர்கள் இடமாற்றலுக்கு ஆளாக நேரிடுகிறது.10 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் மத்திய அரசின் இணைப்பு முயற்சியைக் கண்டித்து 2018 டிசம்பர் 26ஆம் தேதி ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு முன்னரும் பின்னரும் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் மூலமாக தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த அறிவிப்பை கண்டித்து ஆகஸ்ட் 31ஆம் தேதி நாடெங்கிலும் 600 மையங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் அனைத்து சங்கத் தலைவர்களும் ஒன்றுகூடி மிகப்பெரிய அளவிலான போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர்’’என்று ஆவேசத்துடன் பேசி முடித்தார் சி.பி.கிருஷ்ணன்.
- தோ.திருத்துவராஜ்
|