சிறப்பு மருத்துவர்களை இழக்கப்போகும் தமிழகம்!



சர்ச்சை

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பு அதாவது, எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலைப் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 2016-ம் ஆண்டு வரை 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. இந்த ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டுவரை வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீடு திடீரென நிறுத்தப்பட்டதால், தமிழக மருத்துவத்துறையில் எது மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என அரசு மருத்துவர்களின் கருத்துகளைக் கேட்டோம். அவர்கள் கூறிய கருத்துகளை இனி பார்ப்போம்…டாக்டர் ப.சாமிநாதன், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க (SDPGA) மாநிலச் செயலாளர்.

தமிழக அரசு மருத்துவர்கள் நாளொன்றுக்கு எட்டு லட்சம் வெளிநோயாளிகளுக்கும் எண்பதாயிரம் உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள். ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்குமேல் பிரசவங்கள், ஒரு லட்சத்து முப்பதாயிரம் சிசேரியன்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. இவை மட்டுமில்லாமல் லட்சக்கணக்கான அறுவை சிகிச்சைகள், உயிர்காக்கும் தீவிர சிகிச்சைகள், இயற்கைப் பேரிடர்களின்போது மக்களைக் காப்பாற்றுவது, தடுப்பூசி, ஊரக சுகாதாரம் உள்ளிட்ட 52 தேசிய நலவாழ்வுத்  திட்டங்களை நிறைவேற்றுவது என எல்லாமே அரசு மருத்துவர்களான 18,000 பேர்தான்.

இவர்களால்தான் சுகாதாரக் குறியீடுகளில் இந்திய அளவில்  தமிழ்நாடு முதல் மூன்று இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துவருகின்றது.கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பு அதாவது எம்.டி., எம்.எஸ் போன்ற முதுநிலைப் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 2016 ஆம் ஆண்டுவரை 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. இந்த ஒதுக்கீடு டி.எம்., எம்.சி.எச். போன்ற உயர்சிறப்புப் பிரிவுகளுக்கும் இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அரசு மருத்துவர்களுக்கான சர்வீஸ் கோட்டாவினால் நமது தமிழக சுகாதார அமைப்பு வலுவாக மாறியது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு மீண்டும் அரசுப் பணியில் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில்தான் அவர்களுக்கு சர்வீஸ் கோட்டா ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு மருத்துவர்கள் விரும்பி ஏற்று பணிபுரிந்து வருகின்றனர். அதனால்தான் தமிழக அரசால் இன்று 25 அரசு மருத்துவக் கல்லூரிகளை நடத்த முடிகிறது.

இந்த மருத்துவக் கல்லூரிகளில் 3,200 எம்.பி.பி.எஸ். மாணவர்கள், 1500க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ நிபுணர்களை, சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களை உருவாக்க முடிகிறது. அனைத்து மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில், ‘சீமாங்’ எனப்படும் 24 மணிநேர மகப்பேறு மையங்களில் இன்று சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் சர்வீஸ் கோட்டா எனப்படும் ஒதுக்கீடுதான்.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதி 9ல் சர்வீஸ் கோட்டா என்று எதுவும் தரக்கூடாது. வேண்டுமென்றால் கடினமான, தொலைதூர, மலைப் பகுதிகளில் (Difficult, Remote, Hilly Areas) பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுக்கு 10% கூடுதல் மதிப்பெண் என மூன்று ஆண்டுகள் வரை 30% மதிப்பெண்கள் (Incentive Marks) வழங்கலாம் எனக் கூறுகிறது. இந்த விதிதான் சர்வீஸ் கோட்டாவுக்கு எதிராக உள்ளது.

இந்த விதியைப் பயன்படுத்தும்போது பாதிக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிந்துவரும் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் கிடைக்காது. தமிழக அரசு இந்த ஆண்டு அமைத்த டாக்டர் உமாநாத் கமிட்டி தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மட்டும்தான் கூடுதல் மதிப்பெண் பெற தகுதி பெற்றவர்கள் என ஓர் அறிக்கையை அளித்தது. இது வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது.

மேலும் சர்வீஸ் கோட்டா ரத்தானதால் கிராமப்புற மருத்துவமனைகள் வட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய 30 விழுக்காடு அரசு மருத்துவர்கள் வேலையிலிருந்து விலகிவிட்டனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அரசுப் பணி கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் இக்காலத்தில் அரசுப்பணி வேண்டாமென விலகுவது மருத்துவத் துறையில் மட்டும்தான் நடக்கிறது.இதனால் வருங்காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், மாவட்ட வட்ட மருத்துவமனைகளில் சிறப்புச் சிகிச்சைகள், சீமாங் மையங்
களில் சிசேரியன் உள்ளிட்ட குடும்பநலச் சிகிச்சைகள் செய்ய போதிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாமல் மோசமான ஒரு சூழல் இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படும். இதனால் நேரடியாகப் பாதிக்கப்படப்போவது கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள்தான்.

 இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு இடங்களில் 50% இடங்களையும், சிறப்பு முதுநிலை டி.எம், எம்.சி.எச். இடங்கள் (192 ) அனைத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது. இந்த இடங்களில் வெளிமாநிலத்தவர்கள் வந்து படித்துவிட்டு அவர்கள் மாநிலத்திற்குச் சென்றுவிடுவார்கள்.

இதனால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். அரசு மருத்துவர்களின் ‘சர்வீஸ் கோட்டா’ சிக்கல், ஏதோ அரசாங்கத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் சிக்கல் என எல்லோரும் கடந்து போகிறார்கள். உண்மையில், அது மருத்துவர்களின் சிக்கல் மட்டுமல்ல தமிழகப் பொதுமக்களின், ஏழை எளிய, கிராமப்புற மக்களின் மருத்துவ சேவை தொடர்பான சிக்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் ரவிசங்கர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரசு டாக்டர்களுக்கு 30 வருடங்களாகப் பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இன்று நிறுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசு டாக்டர்களின் பங்களிப்பால் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என்றால், அதற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடும் ஒரு காரணம் எனலாம். இடஒதுக்கீடு பெற்று பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர் மீண்டும் அரசுப் பணிக்கு வந்து சிறப்பு மருத்துவராக பணியில் சேர்ந்து ஓய்வுபெறும்வரை பணியாற்றுவார். இது கட்டாயமும் ஆக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு மறுக்கப்பட்டால், எதிர்காலத்தில் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் இல்லாத நிலை ஏற்படுவதுடன், ஏழ்மைநிலையிலுள்ள மற்றும் நடுத்தர மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கப்பெறாமல் அவர்கள் தனியார் மருத்துவர்களை நாடவேண்டிய சூழல் ஏற்படும்.
இங்கே, மாநில உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டு இடஒதுக்கீடும் மறுக்கப்படுகிறது.

மத்திய அரசு நிர்வகிக்கும் AIIMS, PGIMS ஆகியவற்றில் மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருவது முற்றிலும் முரண்பாடான கொள்கை. இந்த நிலை நீடித்தால், இனிவரும் காலங்களில் அரசு மருத்துவப்பணியில் யாரும் சேராத நிலை ஏற்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏதுவாக  பட்ட மேற்படிப்புக்கான தகுதி மதிப்பெண் ஓரிரு வாரத்திலேயே குறைக்கப்பட்டது. மாநில அரசால் சட்டமன்றத்தில் ்கொண்டுவரப்பட்ட  அரசு டாக்டர்களுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு தீர்மானத்தை மத்திய அரசை வலியுறுத்தி சட்டமாக்க வேண்டும்.

அரசு மருத்துவர்கள் அனைவரும் கட்டாயமாக  இரண்டு வருட பணி முடிந்த பின்தான் Service Quota-விற்கு தகுதி பெறுகிறார்கள். இந்த இரண்டு வருடமும் அவர்கள் மேற்படிப்புக்குச் செல்ல அனுமதியும் கிடையாது. அரசுப் பணியை மக்களுக்கான சேவை மனப்பான்மையுடன் செய்பவர்களுக்கு  Service Quota-வை மறுப்பது் நியாயமல்ல.

கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டும் மாநில உரிமை, இதில் மத்திய அரசின் தலையீடு அதிகமிருப்பதால் அவற்றின் தரத்தைக் குறைப்பதுடன், இலவசமாக ஏழைகளுக்கு சிகிச்சையும் கிடைக்காமல் செய்துவிடும்.பட்ட மேற்படிப்பு தகுதி மதிப்பெண்கள் குறைப்பிற்கான காரணம், குறைந்த மதிப்பெண் உள்ள பணம் படைத்தவர்கள் தனியார் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய் கொடுத்து சேரலாம் என்பதற்காகத்தான்.

அதிக மதிப்பெண் பெற்றும் பணம் இல்லாததால் அரசு மருத்துவர்கள் அங்கு சென்று படிக்க வாய்ப்பில்லாமல் போகும். குறைந்த மதிப்பெண் பெற்று பணத்தால் மேற்படிப்பு படித்தவர்கள் யாராவது அரசு வேலைக்கு வருவார்களா? ஏழைக்கு வைத்தியம்தான் பார்ப்பார்களா?

மருத்துவத்தின் தரம் குறைவதுடன், தனியாருக்கு வாய்ப்பளிப்பதாகவும் இது அமைந்துவிடும். எனவே, மக்களுக்கு சேவையாற்றிவரும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்