எஸ்.எஸ்.சி. தேர்வும்...இன்னும் சில விளக்கங்களும்!உத்வேகத் தொடர் 52

வேலை வேண்டுமா?

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (Staff Selection Commission) நடத்தும் கம்பைண்டு கிராஜுவேட் லெவல் (Combined Graduate Level Examination - CGLE) தேர்வில் இடம்பெறும் நிலை-1 (Tier-1), நிலை-2 (Tier - 2) தேர்வுகள் பற்றிய விரிவான விளக்கங்களைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். இனி - நிலை-3 (Tier-3) தேர்வு பற்றிய விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

நிலை-3 (Tier-3)

நிலை-1 மற்றும் நிலை-2 தேர்வுகள் இரண்டும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகள் (Computer Based Examination) ஆகும். இந்தத் இரண்டு தேர்வுகளிலும் கொள்குறிவகை வினா அமைப்பில் (Objective Type) கேள்விகள் இடம்பெறும். ஆனால், நிலை-3 (Tier-3)தேர்வு என்பது ஒரு ‘விரிவான விளக்க விடைக்கான எழுத்துத் தேர்வு’ (Written Descriptive Exam) ஆகும். இந்தத் தேர்வு போட்டியாளரின் எழுத்துத்திறமையை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் அடிப்படையில் போட்டியாளர் தனது கருத்தை உருவாக்கி, எவ்வாறு தனது வாதத்தை முன்வைக்கிறார்? என்பதை அறிந்துகொள்ளும் விதத்தில் கேள்விகள் உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்தத் தேர்வுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை எழுதுதல் பகுதிக்கு 50 முதல் 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். கடிதம் எழுதுதல், விண்ணப்பம் (Application)எழுதுதல், சுருக்கி எழுதுதல் (Precis Writing)ஆகியவற்றிற்கு 30 முதல் 40 மதிப்பெண்கள்வரை வழங்கப்படும். இந்தத் தேர்வு மொத்தம் 1 மணி நேரம் நடத்தப்படும். கட்டுரைகள் 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டியது அவசியமாகும். விடைகளை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுத இயலும்.

இத்தேர்வுக்கான தயாரிப்பை முறையாக மேற்கொண்டவர்கள் மிக எளிதில் இந்தத் தேர்வில் வெற்றி பெறலாம். மிக குறுகிய நேரத்தில் கட்டுரை எழுத வேண்டியதிருப்பதால் - எழுத்துத் திறமையை வளர்ப்பதற்கான பலவித முயற்சிகளில் முன்கூட்டியே ஈடுபடுவது நல்லது. சிறப்பான முறையில் இந்தத் தேர்வை எழுதுவதற்கான சில வழிமுறைகள்:

* தொடர்ந்து ஆங்கிலச் செய்தித்தாள்களை வாசிப்பது நல்லது. குறிப்பாக - Hindu, Indian Express, Economic Times, DT Next போன்ற ஆங்கில நாளிதழ்களைத் தொடர்ந்து நாள்தோறும் வாசிப்பது நல்ல பலனை விளைவிக்கும். தமிழ் நாளிதழ்களான தினத்தந்தி, தி இந்து, தினமலர், தினகரன், தினமணி, தினச்செய்தி போன்ற நாளிதழ்களின் தலையங்கங்கள், சிறப்புக் கட்டுரைகள் போன்றவற்றை தொடர்ந்து வாசித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் பயிற்சிகள் மேற்கொள்வது சிறந்ததாகும்.

* நாள்தோறும் குறைந்தபட்சம் சுமார் 20 ஆங்கிலக் கட்டுரைகளைப் பல்வேறு தலைப்புகளில் வாசிப்பது நல்லது.

* சமூகப் பிரச்னைகளான ஏழ்மை, கல்வி, சமத்துவம், குழந்தைத் திருமணம், வரதட்சணை போன்ற பல பிரச்னைகளை உள்ளடக்கிய தலைப்புகளில் கட்டுரைகளை வாசிக்கவும், எழுதவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

* நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பணமதிப்பு இழப்பு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி போன்றவைகள் பற்றியும் பல தலைப்புகளில் கட்டுரைகளை வாசிப்பது நல்லது.

* அரசியல், சமூக நலத்திட்டங்கள், ஆட்சி அடிப்படையிலான பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் பல கட்டுரைகளை வாசிப்பது அரசியல் தெளிவு பெற மிகவும் உதவும்.

*  விளையாட்டு பற்றிய தகவல்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியினால் உருவான சமூக வலைத்தளங்கள், மின்னணு பணப் பரிவர்த்தனை போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகளை சேகரித்துப் படித்து தயாரிப்புப் பணியை மேற்கொள்ளலாம்.

* சுற்றுப்புறச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளான மாசுபடுதல், அதிக மக்கள் தொகை போன்றவற்றைப் பற்றியும், மற்ற நாடுகளோடு இந்தியா கொண்டுள்ள உறவுகள் பற்றியும் கட்டுரைகளை வாசிப்பது அரசியல் அறிவைப் பெருக்குவதற்கும், அழகான கட்டுரைகள் அமைப்பதற்கும் அடித்தளமாக அமையும். 60 நிமிடத்திற்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டிய கட்டாயநிலை உள்ளதால், ஒவ்வொரு தலைப்பில் கட்டுரை எழுது
வதற்குச் சரியான ‘நேர மேலாண்மை’ (Time Management)அவசியம்.

* சுருக்கி எழுதுதலுக்கு(Precis Writing)15 நிமிடங்களும், கடிதம் எழுதுவதற்கு(Letter Writing)15 நிமிடங்களும், கட்டுரை(Essay Writing) எழுதுவதற்கு 30 நிமிடங்களும் ஒதுக்கிக்கொண்டு தேர்வு எழுதுவது நல்லது.

* கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுத விரும்புபவர்கள் ஆங்கில இலக்கணத்தை(English Grammar) முறைப்படி படித்துத் தெரிந்துகொண்டு அதில் பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது.

* பள்ளிகளில் படித்த எளிமையான ஆங்கில இலக்கணநூல்களை மீண்டும் ஒருமுறை படித்து தெளிவு பெறுவதும், ஆங்கில வார்த்தைகளின் வளத்தைப் பெருக்க அதிக ஆங்கில நூல்களைப் படிப்பதும் நல்ல மதிப்பெண்கள் பெற பக்கபலமாக அமையும்.

* கட்டுரைகள் எழுதும்போது தெளிவான கையெழுத்தில் எழுதுவது சிறந்தது. அடித்தல், திருத்தல் இல்லாமல் விடைகள் எழுதுவது நல்லது.
இனி - சில முக்கிய கட்டுரை தலைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

*  Right to Information
*  Right to Equality
*  Women Empowerment
*  Corruption
*  Demonetization
* Unified Payment Interface
*  Kashmir Issue
* The GST Bill
*  Terrorism
*  Globalisation
*  The India Pakistan Relations
*  Digital Payments
*  ISRO
* Dowry Problem
*  Brain Drain
*  Lok Adalat
*  Public Sector
*  Self Employment
*  Panchayat Raj
*  Youth and Drugs

கட்டுரைகள்  தரமான ஆங்கிலமொழியில் எழுதப்பட வேண்டும். சரியான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி, இலக்கணம் தவறாமல், கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ற கருத்துக்களைத் தெளிவாக எழுத வேண்டும். சிறந்த கருத்துக்களுக்கும், தெளிவான முறையில் எழுதப்பட்ட கட்டுரைக்கும் அதிக மதிப்பெண்கள் வழங்கும் வாய்ப்புள்ளது.

கட்டுரையைப்போலவே ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதவும் உரிய பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக ஆங்கிலக் கடிதங்கள் எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டு கடிதம் எழுத வேண்டும். கடிதத்தில் குறிப்பிட வேண்டிய கருத்துக்களை முன்கூட்டியே சிந்தித்துவைத்து பின்னர் கடிதம் எழுத வேண்டும். குறிப்பாக ஆங்கிலக் கடிதங்களை கீழ்க்கண்ட தலைப்புகள்போன்று ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதும்படி கேள்விகள் கேட்கப்படலாம்.

*Letter to present views on effect of Digitalization on today’s youth.
*Complaint letter regarding Noise Pollution in your locality.
*Letter to present views on Education beyond Classroom Teaching.
*Letter to present views on status of women in India.
*Letter to present views on Reservation for Women.
*Letter to present views on Oil Crisis and Alternative Energy Sources.
*Letter to present views on World Peace.

ஆங்கிலக் கடிதங்களில் “விண்ணப்பக் கடிதங்களும்” (Application Letter) இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக...

* Application for the post of manager.
*  Application for the post of Assistant.
*  Letter to postponed date of joining.

 - போன்ற தலைப்புகளிலும் கேள்விகள் இடம்பெறலாம்.

நிலை-3 (Tier-3)தேர்வில் ‘விரிவான விளக்க விடைக்கான எழுத்துத் தேர்வு’ (Written Descriptive Exam) இடம்பெறும், ஆங்கிலத்தில் கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் எழுதும் பகுதிகளைப்போலவே, சுருக்கி எழுதுதல் (Precis Writing) பகுதியும் மிக முக்கியமானதாகும்.கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பகுதியை (Passage) 1/3 பங்காக சுருக்கி ஆங்கிலத்தில் எழுதுவதைச் சுருக்கி எழுதுதல் (Precis Writing)என அழைப்பார்கள்.

அதாவது ஆங்கிலப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மொத்த வார்த்தைகளை மூன்றில் ஒரு பங்காகக் கருத்து மாறாமல் சுருக்கி எழுத வேண்டும். இந்தச் சுருக்கி எழுதுதல் பகுதி போட்டியாளரின் அறிவுத்திறனை மதிப்பீடு செய்ய மிக அதிக அளவில் பயன்படும். இந்தச் சுருக்கி எழுதுதல் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தயாரிப்புப் பணிகளில் ஈடுபடலாம்.

* கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பகுதியை மிகத் தெளிவாக, நிதானமாக ஓரிரு முறை படிப்பது நல்லது.

* ஆங்கிலப் பகுதியைப் படிக்கும்போதே, அதன் அர்த்தங்களைத் தெரிந்துகொண்டு கருத்தைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

* சுருக்கி எழுதும்போது அந்தப் பகுதிக்கு என்ன தலைப்பிட (Headings)வேண்டும்? என்றும் முடிவு செய்ய வேண்டும்.

* கொடுக்கப்பட்டுள்ள மொத்த வார்த்தைகளைக் கணக்கிட வேண்டும்.
பின்னர் அதில் மூன்றில் ஒரு பங்கு எத்தனை வார்த்தைகள் என்றும் கணக்கிட வேண்டும். உதாரணமாக, 750 வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை 250 வார்த்தைகளாகச் சுருக்கிக்கொள்வது நல்லது.

* சுருக்கி எழுதும்போது ஆங்கிலப் பகுதியில் இடம்பெறாத உங்களது சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.

* திரும்பத் திரும்ப ஒரே கருத்தை வலியுறுத்தும் வகையில் வாக்கியங்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* ஆங்கிலப் பகுதியின் மையக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு உங்கள் விடைகள் அமைவது நல்லது.
நிலை-1, நிலை-2 மற்றும் நிலை-3 (Tier-III)ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உரிய பதவிகள் வழங்கப்படும்.

நிலை-4 (Tier - IV)

கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வில் நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இருந்தபோதும், பதவிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிலை-4 (Tier - IV) கணிப்பொறி தகுதித் தேர்வு/திறன் தேர்வு (Computer Proficiency / Skill Test) நடத்தப்பட்டு போட்டியாளரின் கம்ப்யூட்டர் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே பதவிகள் வழங்கப்படுகிறது.

இக்னோ திறந்தநிலைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின் கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது. இதில் தொலைநிலைப்  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்: ஏராளமான பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

கல்வித் தகுதி: ஒவ்வொரு படிப்பிற்கென தனிப்பட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால் விண்ணப்பிப்பதற்கு முன்பு தேர்வு செய்ய விரும்பும் படிப்பிற்கு தேவைப்படும் தகுதி விவரங்கள், இக்னோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்.மாணவர் சேர்க்கை முறை: 150க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றிற்கு, ஆன்லைன் அல்லது நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.6.2018
மேலும் விவரங்கள் அறிய www.ignou.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- தொடரும்

நெல்லை கவிநேசன்