தளராத தன்னம்பிக்கையால் IAS தேர்வில் கிடைத்த வெற்றிசாதனை

பள்ளிப் படிப்பை முடித்து மேல்படிப்புக்கு தேவையான பொருளாதார வசதி இல்லாததால் மரம் அறுக்கும் தொழிலாளியாகி, விவசாய வேலையும் பார்த்து சேர்த்த பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தெரியாமல் தன் லட்சியமான பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்தான் இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியாளராகியிருக்கும் சிவகுரு.

தஞ்சை மாவட்டம் மேலவட்டங்காடு எனும் குக்கிராமத்தில் சாதாரண விவசாயக்கூலியின் மகனாக குடிசை வீட்டில் பிறந்த சிவகுரு, மூன்று வேளை உணவுக்கே வழி இல்லாமல் அல்லல்பட்டு, ரயில்வே பிளாட்பாரத்தில் படித்து,  தூங்கி, எழுந்து தனது கடுமையான உழைப்பால் ஐ.ஐ.டியில் சேர்ந்து பின் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தமிழக அளவில் மூன்றாவது இடம்பிடித்த கதையை, அவரின் வாழ்க்கைமுறையை, குடும்பச்சூழலைப் பற்றி பகிர்ந்துகொண்டார் சிவகுரு.   

‘‘தாத்தாவும் பாட்டியும் நிலப்பிரபுக்களின் வயல் வேலைகளை செய்யும் விவசாயக்கூலிகள். வருட கூலிக்கு தன்னை அடமானம் வைத்து உயிர்வாழ்ந்தனர். அதே விவசாயக்கூலி வேலையை தான் என் அப்பாவும் செய்துவந்தார். நான், அக்கா, தம்பி என எங்கள் மூன்று பேருக்கும் மூன்று வேளை உணவே நிச்சயமற்றதாக எங்கள் குடும்பச்சூழல் இருந்ததால் என் அம்மாவும் அப்பாவுக்கு இணையாக கூடை பின்னுவது, பால் கறந்து விற்பது போன்ற வேலைகளைச் செய்துவந்தார்.

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் நாங்கள் என அனைவரும் குடிசை வீட்டில் தான் வசித்துவந்தோம். மேலவட்டங்காடு பட்டுக்கோட்டை வட்டம் பக்கத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், அடுத்து புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் படித்தேன். தமிழ் மீடியம் தான். ஆனால், பள்ளியில் எப்போதும் முதல் மாணவனாக இருந்தேன்’’ என்று பள்ளிப் பருவத்தை மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் சிவகுரு.

‘‘வீட்டில் வறுமை சூழல், உணவுக்கே உத்திரவாதம் இல்லாதபோது எனக்கு பொறியியல் படிக்க வேண்டும் என ஆசை வந்தது. ‘பையனுக்கு இவ்வளவு செலவு பண்ணி படிக்க வச்சா பொண்ணுக்கு எத போட்டு கட்டிக்கொடுக்கிறது’ என சிறுவயதிலேயே என் கனவு சிதைக்கப்பட்டது. பின் என் பெரியம்மாவின் ஊரில் தங்கி விவசாயக்கூலி வேலைகளைச் செய்துகொண்டே ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தேன். ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்னரும் சரியான வேலை கிடைக்கவில்லை.

அந்த நேரம் பார்த்து தம்பியும் பிளஸ் 2 முடித்துவிட்டு எஞ்சினியரிங் சேர ஆயத்தப்பட்டான். ஆகையால் வீட்டின் தலைமகனாக அவனைப் படிக்கவைக்கும் பொறுப்பும், அக்காவிற்கு திருமணம் பண்ணி வைக்கும் பொறுப்பும் எனக்கு இருந்தது.

வீட்டில் வறுமை தாண்டவமாடிய காரணத்தால் ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்னர் வேறு வழியில்லாமல் மரம் அறுக்கும் தொழிலாளியாக இரண்டரை ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஆனாலும், என்னுடைய எஞ்சினியரிங் படிப்பு கனவை சிதைக்க என்னால் முடியவில்லை.

மரம் அறுத்து பெற்ற கூலியை சிறுகசிறுக சேமித்து வைத்துக் கொண்டிருந்தேன். கணிதத்தில் ஆர்வம் இருந்ததால் என் தம்பிக்கு எஞ்சினியரிங்கில் கணிதப் பாடத்தின் சந்தேகங்களை விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டே தீர்த்து வைப்பேன். இப்படி அவனுக்கு சொல்லிக் கொடுக்கும்போது என்னுள் இருந்த எஞ்சினியரிங் கனவு மீண்டும் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்தது.

சரியாக அந்த சமயத்தில்தான் என்னுடைய நண்பர் அவருடைய தங்கைக்கு எஞ்சினியரிங் கவுன்சிலிங் ஃபார்ம் வாங்க என் தம்பி படிக்கும் கல்லூரிக்குச் சென்றபோது எனக்கும் சேர்த்து ஃபார்ம் வாங்கி வந்தார். அக்காவின் திருமணம், தம்பியின் படிப்பு, அப்பாவின் உடல்நிலை, அம்மாவின் குடும்பச் செலவுக்கான பொருளாதார தேவை இவை அனைத்தும் தலைமகனான என்னை அழுத்திக்கொண்டிருக்கும்போது நிச்சயமாக என்னை என் பெற்றோர் பொறியியல் படிக்கவைக்க மாட்டார்கள் என எனக்கு தெளிவாக தெரிந்தது.

ஆனாலும் என் கனவின் மீதிருந்த என்னுடைய நம்பிக்கை எதிர்காலத்தில் இருந்த பிரகாசமான பேரொளியை எனக்கு காட்டியது. அந்த நம்பிக்கையில் வீட்டுக்குத் தெரியாமல் என் நண்பரின் முகவரிக்கு எஞ்சினியரிங் கவுன்சிலிங்குக்கு  விண்ணப்பித்தேன். கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள தேதிகள் அறிவிக்கப்பட்ட கடிதம் வந்தபோது என் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. ‘‘ம்மா, எவ்வளவுதான் அத பத்தி நினைக்காம இருந்தாலும் என் கனவை என்னால மறக்க முடியலமா’’ என சொல்லி வீட்டை சமாதானப்படுத்தினேன்.

கவுன்சிலிங்கிற்கு சென்னை செல்ல பணம் இல்லாமல் கவுன்சிலிங் தேதிக்கு பத்து நாள் கழித்துதான் சென்னை சென்றேன். வேலூரில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் சீட் கிடைத்தது. கூலி வேலை பார்த்து சேர்த்த பணத்தையும் சேர்த்து கடன் வாங்கிதான் எஞ்சினியரிங் சேர்ந்தேன்.’’ என்றார் சிவகுரு.

மேலும் தொடர்ந்த அவர் ஆங்கில மொழி கற்க மேற்கொண்ட பயிற்சிகளை விவரிக்கலானார். ‘‘தமிழ்மீடியம் படித்ததால் பிழை இல்லாமல் ஆங்கிலம் பேச இயலவில்லை. ஒரு இங்கிலிஷ் நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு அதை ஆறு மாதம் மறுபடி மறுபடியும் படித்து அர்த்தங்கள் கற்றுக்கொண்டேன். கணிதத்தின் மீது தீராத காதல் இருந்ததால் கிளாஸ் டாப்பர் ஆனேன்.

 அந்த நேரத்தில் என்னுடைய சூப்பர் சீனியர் ரூபன் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு பற்றி சொன்னார். வார இறுதி நாட்களில் சென்னை, பரங்கிமலையில் நடக்கும் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தால் கண்டிப்பாக நுழைவுத்தேர்வில் வெற்றி பெறலாம் என நம்பிக்கையூட்டினார்.

சரி, வாரா வாரம் சென்னை செல்ல காசு வேண்டுமே. ஆகையால் கல்லூரியில் படிக்கும்போது செல்லுக்கு ரீசார்ஜ் செய்து சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ரயில் ஏறி பரங்கிமலை பயிற்சி வகுப்பில் பங்கேற்பேன். இரவு தங்குவதற்கு கையில் காசு இல்லாததால் செயின்ட் தாம்ஸ் மவுன்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இரவு 2மணி வரை நுழைவுத்தேர்விற்கு படித்துவிட்டு பின் தூங்குவேன்.

அதிகாலை எழுந்து ஐ.ஐ.டி-க்குச் சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு பயிற்சி வகுப்பிற்கு செல்வேன். இப்படியே பல வாரங்கள் சென்றன. பின் கொஞ்ச நாளில் இரவு தங்குவதற்கு இடமும் ஐ.ஐ.டி-யில் எம்.டெக். சேர வாய்ப்பும் கிடைத்தது.

பயிற்சி வகுப்பில் அறிமுகமான அசோக்குமார் எனும் பேராசிரியர் என்னுடைய பொருளாதார நிலையைப் பார்த்து கட்டணம் ஏதும் இல்லாமல் எனக்கு பயிற்சி அளித்தார். அவரின் உந்துதலால் தான் ஐ.ஐ.டி-யில் கிளாஸ் டாப்பராகவும் மற்றும் எஞ்சினியரிங் சர்வீஸ் தேர்வில் 75வது இடம்பெற்று என்னால் வெற்றிகொள்ள முடிந்தது’’ என்ற சிவகுரு தான் ஐ.ஏ.எஸ். தேர்வை எதிர்கொண்ட விதத்தை பற்றி விளக்கலானார்.

‘‘ஐ.ஐ.டி-யில் படிக்கும்போது மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பொதுத்துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்வேன். இப்படியே நான்கைந்து மாதங்கள் சென்றது. அப்போது ஐ.இ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதால் புனே ரயில்வேயில் வேலை கிடைத்தது. கூலிவேலை செய்துவந்த நான் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு ஐ.ஏ.எஸ். தேர்விற்கு படிக்க தயாரானேன்.

ஐ.ஏ.எஸ். ஆவது என்னுடை சிறு வயது முதலே உள்ள கனவு இல்லை. கும்பகோண தீவிபத்து ஏற்பட்டபோது தஞ்சை மாவட்ட கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மக்களுக்கு செய்த சேவையைப் பார்த்து சிறுவயதிலேயே அவரை என் ஆசானாக ஏற்றுக்கொண்டேன். உள்ளே புதைந்து கிடப்பது என்றேனும் ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும் என்பார்கள். அதுபோல தான் சிறுவயதில் என்னை பாதித்த ராதாகிருஷ்ணன் வடிவில் என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவு வெளிப்பட்டது.

லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு 2014 லிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்காக தயாரானேன். 2014-16 வரையிலான அத்தனை தேர்வுகளையும் எதிர்கொண்டு அகில இந்திய அளவில் 910வது இடத்தை பிடித்தேன். அதற்கு ஐ.ஏ.எஸ். ஆக முடியாது.

பின் தேர்வுகளில் என்னென்ன தவறுகள் செய்துள்ளேன் என புரிந்துகொள்ள மனிதநேய அறக்கட்டளை மற்றும் சில பயிற்சி வகுப்புகள் உதவி செய்தன. அதன் பின் 2017ல் மொத்த தேர்வுகளையும் எழுதி வென்றேன். அதிக மார்க் எடுத்திருந்ததால் ஐ.எஃப்.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். இரண்டு தேர்வு களையும் எழுதியிருந்தேன். ஆனால், ஐ.எஃப்.எஸ் ரிசல்ட் முதலில் வந்தது.

இருபதாவது இடத்தில் இருந்தேன். அதன் இண்டர்வியூ நடக்கும்போதே ஐ.ஏ.எஸ். ரிசல்ட் வந்தது. அகில இந்திய அளவில் 125வது இடமும், தமிழக அளவில் மூன்றாவது இடமும் பெற்று ஐ.ஏ.எஸ். ஆனேன்.’’ என்று மகிழ்ச்சி பொங்க பேசினார் சிவகுரு.

‘‘வறுமையில் சுழன்றுகொண்டிருந்த என் வாழ்கையில் கவுன்சிலிங் ஃபார்ம் வாங்க பணம் கொடுத்த நண்பர், ஐ.ஐ.டி-யை அறிமுகப்படுத்திய ரூபன், எனது ஒவ்வொரு வெற்றிக்கும் பின்நிற்கும் அசோக்குமார் சார் என நண்பர்கள் செய்த உதவியும், ஊட்டிய நம்பிக்கையும்தான் என்னை ஐ.ஏ.எஸ். ஆகவைத்தது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

தங்களது தூய்மையான கனவுகளின் வழி மன உறுதியுடன் நடைபோட்டு முன்னேறும்போது இடையில் ஏற்படும் இழப்புகளுக்கு, மனம் தளராமல் அதற்கு எதிர்வினையான எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட்டால் உங்களுக்கே ஒரு பிரகாசமான ஒளி ஒன்று வெகு தூரத்தில் தென்படும்’’ என்று தன்னம்பிக்கையூட்டுகிறார் இன்றைய ஐ.ஏ.எஸ். சிவகுரு.

- வெங்கட்.