கழுத்தை நெரிக்கும் கல்விக் கட்டணம்!



எதிர்பார்ப்பு

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது கல்வி. அதை ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாகத் தருவது அரசின் கடமை. அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் அரசு மட்டுமே கல்வி நிறுவனங்களை நடத்தியிருந்தால் தனியார் கல்வி நிறுவனங்கள் தோன்றியிருக்காது. நம் நாட்டில் புற்றீசல் போல் தெருக்கள் தோறும் தனியார் பள்ளிகள் தோன்றி வளர்ந்து கொழுத்துள்ளன. அவர்கள் கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களை வாட்டி வதைக்கின்றனர்.

நடுத்தர வகுப்பைச்சேர்ந்த ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் வருமானத்தில் கணிசமான தொகையைக் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிட வேண்டிய அவலநிலை உள்ளது. இந்த கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த இனிமேல் இயலாது என்ற நிலை ஏற்பட்டபிறகு பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல அமைப்புகள், பெற்றோர்கள் ஆகியோர் போராடத் தொடங்கினர்.

தொடர் போராட்டத்தின் விளைவாக 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது. (கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடித்ததுபோல் இச்சட்டம் உள்ளது) அதன்படி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு தமிழகத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து வசூலிப்பதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்தச் சட்டத்தின் மூலம் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவே விதிமுறைகள் வகுக்கப்பட்டன. பள்ளி நிர்வாகங்கள் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கும் கட்டணக் கொள்ளைக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அளிப்பதாகவே அமைந்தது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதற்கான விதிகளில் கீழ்க்கண்ட விதிகள் சேர்க்கப்பட்டன.

* பள்ளி அமைந்துள்ள இடம்
* கட்டமைப்பு வசதிகள் நிதி
* பராமரிப்பு நிதி
* எதிர்காலத்் தேவைகளுக்கான நிதி
* வேறு தேவைகள்

ஆகியவற்றுக்காகப் பள்ளிகள் நிதி வசூலிக்கலாம் என்று கட்டணக் கொள்ளைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது.குழுவின் முதல் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின், ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர், 2012ல் விலகினார். அதன் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்காலம் டிசம்பர் 2015ல் முடிந்தது. அதன்பின் தலைவர் நியமிக்கப்படவில்லை.

இதனால் பணிகள் முடங்கின. இந்நிலையில், புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணியை தாமதமாகவே நியமித்தனர். அவர் இதுவரை தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணங்கள் குறித்து குழு அறிவிக்கவேண்டும். 2018ம் ஆண்டுடன் அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டது. வரும் கல்வியாண்டில் (2018-19) எவ்வளவு கட்டணம் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்பதைக் குழு இதுவரை அறிவிக்கவில்லை. பல பள்ளிகள் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி அவர்கள் விருப்பப்படி கட்டணம் வசூல் செய்துவருகின்றன.

இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஏப்ரல் 30ந் தேதிக்குள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கால் பெற்றோர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு அளவே இல்லை. வட்டத் தலைநகரங்களில் அமைந்துள்ள பள்ளிகள் தொடக்க நிலை வகுப்புகளுக்கே ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் பன்னாட்டுப் பள்ளிகள் என்ற பெயரில் LKG வகுப்புகளுக்கே ஒரு இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். கல்லூரிகளின் நிலையோ சொல்வதற்கில்லை.

பெற்றோர்களின் கழுத்தை நெரிக்கும் கல்விக் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். இதனை முறைப்படுத்த இன்னும் தெளிவான சட்டங்களை இயற்றிட வேண்டும். கல்வியில் மட்டுமின்றிக் கட்டணத்திலும் சமச்சீர் தன்மையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டணமில்லாக் கல்வி வேண்டும் என்று கேட்கவேண்டிய மக்களை கட்டணத்தில் சமச்சீர் தன்மை வேண்டும் என்று போராடவேண்டிய நிலைக்கு தள்ளியதுதான் வேதனை அதுவே ஆட்சியாளர்களின் சாதனை.           

இரத்தின புகழேந்தி