யாமிருக்க பயம் ஆதவ் கண்ணதாசன்டைட்டில்ஸ் டாக்-138

இந்த உலகத்தில் பயம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் பயந்தால் வேலை நடக்காது. நான் சினிமாவுக்கு வந்தபோது கண்ணதாசன் குடும்பம் என்ற அடையாளத்தோடு வந்தேன். ஆனால் நான் நினைத்த மாதிரி வரவேற்பு இல்லை.
என்னை சந்தித்தவர்கள் அல்லது நான் சந்தித்த மனிதர்கள் ‘உங்க தாத்தாவின் பாடல்கள் பிடிக்கும்’ என்ற அளவில் மட்டுமே இருந்ததே தவிர  ‘நீங்க என்ன பண்றீங்க’ என்று கேட்டதில்லை. சினிமாவில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் உங்களுக்கான முகவரியை நீங்கள்தான் எழுத வேண்டும்.

நான் சினிமாவில் நடிப்பதற்கு தாத்தாவின் முகவரி தீர்வாக இருக்காது. நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஹிட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் புதிய படங்கள் என்னைத் தேடி வரும். தாத்தா குடும்பத்தில் பிறந்தது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதனால் மட்டுமே பட வாய்ப்பு கிடைக்காது.

என்னுடைய தொடக்கம் நல்லபடியாக ஆரம்பமாகியது. ஆனால் அந்தக் கட்டத்தில் ஆரம்பித்த மூன்று படங்கள் டேக் ஆஃப் ஆகவில்லை. அப்போது என்னுடைய ஃப்யூச்சரை நினைத்து பயந்தேன். ஆனால் அந்த பயம் நியாயமான பயமாக இருந்தது. 

அடுத்த ஸ்டேஜ் போவோமா, போகமாட்டோமா என்ற அளவில் இருந்தது. ஆனால் சினிமாதான் என்னுடைய எதிர்காலம் என்று தெரிவுசெய்துவிட்டதால் எதிர்நீச்சல் போட்டு போராடி வருகிறேன்.

இன்றைய சூழலில் போட்டி அதிகமாகிவிட்டது. விக்ரம் மகன் துருவ் வர்றார். தனியார் டி.வி. நிகழ்ச்சி மூலம் ஆண்டுக்கு நான்கைந்து புதியவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அந்த வகையில் போட்டி அதிகமாகியுள்ளது. இவ்வளவுக்கும் மத்தியில் என்னை பயம் இல்லாமல் வழி நடத்துவது எது என்றால் நான் தேர்வு செய்யும் படம்.

நான் சினிமா துறைக்கு வந்து பத்து வருடங்கள் கடந்து விட்டது. உதவி இயக்குநராக இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறேன். நான், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் எல்லாரும் ஒரே காலகட்டத்தில் வந்தோம். இப்போது அவர்கள் மார்க்கெட் வேற லெவல். நேரம் அவர்களுக்கு கைகொடுத்தது. அதுக்காக என்னுடைய வளர்ச்சியை நினைத்து நான் பயந்ததில்லை. எனக்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்தேன். அதன்படி இப்போது பிஸியாக படங்களில் நடித்து வருகிறேன். எழில் இயக்கும் ‘பகல்’, ‘காளிதாஸ்’, ஆண்ட்ரியாவுடன் ஒரு படம், வாணி போஜனுடன் ஒரு படம் என்று கைவசம் நிறைய படங்கள் உள்ளது.

ஓரளவுக்கு நான் பயப்படாமல் இண்டஸ்ட்ரியில் டிராவல் பண்ணுகிறேன் என்றால் அதற்கு அருண் விஜய் ஒரு காரணம். அவர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். சினிமாவில் அவருடைய போராட்டம் பெரிது. தோல்வியைக் கண்டு அவர் துவண்டுபோய்விடவில்லை. இண்டஸ்ட்ரியைவிட்டு விலகி வேறு துறைக்குப் போகவில்லை. ‘என்னை அறிந்தால்’ என்ற ஒரே படம் அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். ‘குற்றம் 23’, ‘தவம்’ என்று சோலோ ஹிட் கொடுத்தார். இப்போது பெரிய படங்கள் பண்றார்.

என்னுடைய முதல் படமான ‘பொன்மாலைப் பொழுது’ படத்துக்கு குடும்பத்தின் சப்போர்ட் கிடைத்தது. அந்தப் படம் தோல்வியடைந்தபிறகு எதாவது ஒரு படத்தை கமிட் பண்ணவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு படத்தைப் பண்ணுவதற்கு பதில் சும்மா இருக்கலாம். தோல்வி அடையும்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வு புரியாது. அந்தசமயத்தில் உடனிருப்பவர்கள் பேசாமல் இருந்தாலே ஜெயிக்கணும் என்ற வெறி அதிகமாகும்.

நான் நடிகனாவதற்கு வீட்டில் ஃபுல் சப்போர்ட் கிடைத்தது. இப்போது வீட்டில் சப்போர்ட் கிடைக்கவில்லை என்றாலும் நான் பயப்படவில்லை. எல்லோரையும்போல்தான் கம்பெனி கம்பெனியாக வாய்ப்பு தேடி அலைகிறேன். பெரிய ஹீரோ படங்களில் கேரக்டர் ரோல் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு தேவை ஒரே ஒரு வெற்றி. அதை நான் பார்த்தாலும் சரி, ரசிகர்கள் பார்த்தாலும் சரி, என்னுடைய ரூட் க்ளியராகிவிடும்.
இப்போது சினிமா அடுத்த தளத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஹீரோக்கள் கதையைத் தேர்வு செய்த காலம் முடிந்துவிட்டது.

இப்போது கதைகள்தான் ஹீரோவை முடிவு செய்கிறது. ‘8 தோட்டாக்கள்’ போன்ற படம் வெற்றியடைகிறது. ஹரீஷ் கல்யாண் படம் கவனம் பெறுகிறது. தினம் தினம் ஹீரோக்கள் வருகிறார்கள். பணம் இருக்கிறவர்கள் ஹீரோவாகலாம் என்ற நிலை வந்துவிட்டது. அதனால் மார்க்கெட்டில் நிற்கணும்னா நல்ல கதையைத் தேர்வு செய்வது முக்கியம்.

சினிமாவில் ஒரு இயக்குநராக வரவேண்டும் என்றுதான் என்னுடைய பயணத்தை ஆரம்பித்தேன். ஆனால் நடிகனாகிவிட்டேன். அதற்காக டைரக்‌ஷன் பண்ண பயமா என்று நினைக்கவேண்டாம். தெலுங்கில் நடிகர்கள் டைரக்‌ஷன் பண்ணுகிறார்கள். தனுஷ் டைரக்‌ஷன் பண்ணுகிறார்.
நான் டைரக்‌ஷன் பண்ணணும்னா எனக்கு ஷோ ரீல் தேவைப்படுகிறது. என் மீது நம்பிக்கை வந்தால் மட்டுமே கதை கேட்கவே தயாராக இருப்பார்கள். அப்படி அதிலும் என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு டைரக்‌ஷன் பண்ணுவேன்.

சினிமாவைப் பொறுத்தவரை ஓடுகிற படத்தில் இருக்கணும்.  இல்லையெனில் ஓடுகிற படம் நம்முடையதாக இருக்கணும். இப்போது நடிப்பில் பிஸியாக இருப்பதால் அதை ஒழுங்காகப் பண்ண நினைக்கிறேன்.

நான் வந்தபோது ‘பீட்சா’ வந்தது. தொடர்ந்து பேய்ப் படங்கள் வந்தது. இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் தொடர்ந்து சினிமாவை கவனித்து வந்தாலே நமக்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். சிலர் அவசரப்படுகிறார்கள். அது தேவையில்லை.

நான் பத்து வருடம் வெயிட்டிங் மோடில் இருந்துவிட்டுதான் இப்போது ஆக்டிவ் மோடுக்கு மாறியிருக்கிறேன். நான் சந்திக்கும் இயக்குநர்கள் ‘உன்னிடம் திறமை  இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.  நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

தொகுப்பு :சுரேஷ்ராஜா

(தொடரும்)