மனைவி ஊக்குவித்ததால் இயக்குநரான தயாரிப்பாளர்!



தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர்களில் ஒருவரான தனஞ்செயன், தற்போது  புதியதோர் அத்தியாயத்திற்கு தயாராகியுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக ஆரம்பித்து சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயணித்து, இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கும் தனஞ்செயன் தற்போது படைப்பாளி உலகில்  இணைந்து இயக்குநராக மாறியுள்ளார். ஒரு தயாரிப்பாளராக ஏராளமான படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் தனஞ்செயன் தனது இயக்குநர் அவதாரம் பற்றிக் கூறியதாவது...

‘‘எல்லாருக்குள்ளும் ஒரு படைப்பாளி இருப்பார்கள். வாய்ப்பு வரும்போதுதான் டைரக்‌ஷன் பண்ணமுடியும். டைரக்‌ஷன் என்பது எளிமையான ஜாப் கிடையாது. அது ஃபுல்டைம் ஜாப். ஒரு இயக்குநராக வர வேண்டும் என்ற கனவோடுதான் சினிமாவுக்கு வந்தேன். தயாரிப்பாளராக வரணும் என்று நினைத்ததில்லை. காரணம்... தயாரிப்பாளருக்கு மதிப்பு இல்லை.

தயாரிப்பு என்பது  தேங்க் லெஸ் ஜாப். இயக்குநர்களுக்குத்தான் நன்றி தெரிவிக்கிறார்கள். தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் என்பவர் ஒரு பணப் பெட்டி. அதனால் என்னை ஒரு இயக்குநராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் நிர்வாகத் தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது அந்தப்படங்களின் கதை விவாதத்திலும், திரைக்கதை உருவாக்கத்திலும், பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றி யுள்ளேன். படத்தின் வெற்றி தோல்விகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் படத்தினை உருவாக்குவதில் நிறைய பாடங்களைக் கற்றுத் தந்தது.

என்னுடைய திரைப்படக் கல்லூரி யில் எனது சினிமா பயணம் பல சினிமா ஜாம்பவான்களுடன் அவர்களது பொன்னான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பெருமையான தருணமாக  அமைந்தது. அந்த அனுபவங்கள் எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை விதைத்தது. வேலைப் பளு காரணமாக அந்தக் கனவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

ஒரு கதையை உருவாக்கினேன். அதைக் கேட்ட என் மனைவி என்கரேஜ் பண்ணினார். இறுதியில் எனது மனைவி இந்தப் பயணத்தை ஊக்குவித்து துவக்கி வைத்தார்.கடந்த நான்கு மாதங்களாக நானும் எனது குழுவும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். பின்னர் லைம்லைட்டில் உள்ள  நடிகர்களிடமும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் எனது திரைக்கதையைச் சொன்னபோது அவர்கள் வெகுவாகப் பாராட்டி, மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினார்கள். படத்தில் மொத்தம் மூன்று ஹீரோக்கள். இரண்டு ஹீரோக்கள் கமிட்டாகிவிட்டார்கள்.

இயக்குநர்களில் கே.பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என்று அனைவரின் ஸ்டைலும் எனக்குப் பிடிக்கும். எனக்கு கமர்ஷியல் படங்கள் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது. ஆனால் கமர்ஷியல் படங்கள்தான் சினிமாவையும் தயாரிப்பாளரையும் வாழவைக்கும்.

அந்த வகையில் என்னுடைய படம் கமர்ஷியல் கலந்த பெருமைமிகு படமாக இருக்கும். சமீபத்தில் வந்த ‘விக்ரம் வேதா’ அப்படிப்பட்ட படம்தான்.
தற்போது ‘கபடதாரி’, விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. எனது மனைவியின் பிறந்தநாளையொட்டி சிறப்பான தருணத்தில் இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்தப்படத்தில் பங்குபெறவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரத்தை இந்த டிசம்பரில் வெளியிட உள்ளோம். ஜனவரி 2020 ல் படப்பிடிப்பைத் துவங்க உள்ளோம். இது ஒரு புதிய வகை  க்ரைம் திரில்லர் படமாக ஒரு புத்தம்புது அனுபவமாக இருக்கும்.

த்ரில்லருக்காக இந்தப் படத்தை எடுக்கவில்லை. ஒரு படைப்பாளியாக வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் என்னுடைய ஆசையை ரசிகர்கள் மீது திணிக்கமாட்டேன். நான் இயக்கும் முதல் படம் ரசிகர்களுக்கான படமாக இருக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தனஞ்செயன்.

- எஸ்