28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள் ராஜ்கிரண் - மீனா!
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வரும் படம் ‘குபேரன்’. இதில் மம்முட்டி, ராஜ்கிரண், மீனா, அர்த்தனா பினு நடிக்கிறார்கள். ‘2.O’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சித்திக் நடித்துள்ளார்.
ராஜ்கிரண் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத் திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். ‘என் ராசாவின் மனசிலே’, ‘பாசமுள்ள பாண்டியரே’ படங்களைத் தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ‘ராஜாதிராஜா’, ‘மாஸ்டர்பீஸ்’ போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர். மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே. இந்தப் படத்துக்கு மலையாளத்தில் ‘ஷைலாக்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன், அனீஸ் ஹமீது எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு ரணதீவ். மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இவர் ஏற்கனவே தமிழில் ‘தோழா’, ‘பெங்களூரு நாட்கள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் இயக்கியிருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை. தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகில் அதிகரித்துள்ள சூழ்நிலையில் படத்தில் நடித்துள்ள அர்த்தனாவிடம் பேசினோம்.‘‘தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
நல்ல படம் வந்தால் நடிக்கலாம் என்று நினைத்தபோது கிடைத்த வாய்ப்பு இது. மம்முட்டி, ராஜ்கிரண், மீனா போன்ற ஆளுமைகளுடன் நடித்தது நல்ல அனுபவம். முக்கியமாக என்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் மூன்று வருடங்களுக்குப் பிறகு நடிப்பதில் மகிழ்ச்சி. மம்முட்டி சாருடன் நான் நடிக்கும் முதல் படம் இது. அவருடன் நடிப்பது வழக்கமான வாய்ப்பு அல்ல. அவருடன் நன்றாக பேசிப் பழக முடிந்தது. என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய நடிப்பை கிட்டயிருந்து கவனித்தாலே போதும். எல்லோரிடமும் மரியாதையாகப் பழகுவார். வெளிப்படையாகப் பேசக் கூடியவர். அந்த வகையில் லெஜண்ட்... லெஜண்ட்தான்!’’ என்கிறார் அர்த்தனா.
- எஸ்ரா
|