ரௌத்திரம் சென்றாயன்



டைட்டில்ஸ் டாக்-107

‘ரெளத்ரம்’ என்றால் கோபம் என்று பொருள். கோபம் நெருப்பைப் போன்றது. மிக எளிதில் அருகில் உள்ளவரைப் பற்றிக்கொள்ளும். சிறிய தீக்குச்சி பெரிய காட்டையே அழித்து விடும். அதுபோல வாழ்க்கையில் தேவையில்லாத விஷயங்களுக்கு ரெளத்ரமாக நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  ஒரு முறை நீங்கள் ரெளத்ரமாக நடந்துகொண்டால், ஏற்படும் பின் விளைவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.

அதற்காக கோபமே படாமலும் இருக்க முடியாது. பாரதியே ‘ரெளத்திரம் பழகு’ என்று சொல்லியிருக்காரு. இந்த கோபம் என்னும் நெருப்பை காட்டுத்தீயாக பரவ விடாமல், கட்டுப்படுத்தி ஆக்கபூர்வமான விஷயங்களுக்குத்தான் ரெளத்ரம் பழக வேண்டும்.1995ல் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன்.

படிப்படியாக முன்னேறித்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ரெளத்ரம்’ படங்களில் நன்கு கவனிக்கப்பட்டேன்.‘ரெளத்ரம்’ மனதுக்கு நெருக்கமான படம். காரணம், அந்தப் படத்தில் நான் தான் மெயின் வில்லன். எனக்கு வாய்ப்பு அளித்த கோகுல் சாருக்கு நன்றி.

மனிதனாகப் பிறந்த எல்லோரிடமும் ரெளத்ரம் இருக்கும். ‘அழற குழந்தைதான் பால் குடிக்கும்’ என்பார்கள். அந்த இடத்தில் அந்தக் குழந்தையின் அழுகைதான் ‘ரெளத்ரம்’. இவ்வளவு ஏன், நாய்,  பூனையில் தொடங்கி காட்டு ராஜா சிங்கத்திடம் கூட ரெளத்ரத்தைப் பார்க்கலாம்.
பொதுவா பசங்க அவங்க அப்பாவிடம்தான் ரெளத்ரத்தை பார்த்திருப்பார்கள். என்னுடைய அப்பா ரெளத்ரமாக இருந்ததை நான் பார்த்ததே இல்லை. முதன்முதலாக எனக்கு ரெளத்ரத்தைக் காண்பித்தது என்றால் என்னுடைய ஆசிரியர் தான்.

அவர் பெயர் ராமசாமி. அவர் ஒரு முறை வீட்டுப் பாடம் எழுதி வரச் சொன்னார். நான் பம்பரம், கோலி என்று விளையாட ஆரம்பித்ததால் வீட்டுப் பாடம் பண்ணவில்லை. மறுநாள் ஆசிரியர் வகுப்பில் ஏகத்துக்கும் பேச ஆரம்பித்தார். அவர் பொதுவாக அமைதியானவர். அப்படிப்பட்டவர் ருத்ரதாண்டவம் ஆடியதால் அதன் பிறகு எனக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது. சின்ன வயதில் ஆசிரியரின் ரெளத்ரத்தைப் பார்த்துவிட்டு படிக்காமல் போனதைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஆசிரியரின் ரெளத்ரம் நல்லது என்று காலம் கடந்துதான் உணர்ந்துகொண்டேன். அந்த வயதில் நான்தான் பொறுமை காத்திருக்கணும். அதை மிஸ் பண்ணியதால் படிப்பு வாசனையே என் மீது விழவில்லை. உலகத்திலேயே பெஸ்ட் போன் என்று சொல்லி ஆப்பிள் போனை விற்பனை செய்கிறார்கள். அந்த போன் என்னிடம் இருக்கிறது. அந்த போனை எப்படி பயன்படுத்துவது என்பது கூட எனக்குத் தெரியாது.

அந்த போனில் எல்லாமே ஆங்கில மயம் என்பதால் அதை பயன்படுத்த ரொம்பவே சிரமப்பட்டேன். இப்போது எளிமையான போனுக்கு மாறிவிட்டேன். இந்த விஷயத்தில் நானாவது பரவாயில்லை. என் நண்பர் ஒருத்தரிடமும் விலையுர்ந்த போன் இருக்கிறது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சிவப்பு பட்டன், பச்சை பட்டன் மட்டுமே.

மனிதன் என்றால் சூடு, சொரணை இருக்கணும் என்று சொல்வார்கள். அந்த வகையில் ரெளத்ரத்தை கையாளவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஓட்டலுக்கு சாப்பிடச் செல்லும் போது அமைதியான குரலில் ஆர்டர் கொடுத்தால் ‘வரும்... வரும்...’ என்று பதில் கிடைக்கும். சில சமயம் பதில் கிடைக்காதபோது ‘வந்து எவ்வளவு நேரமாச்சு... தண்ணி கொடுங்கய்யா...’ என்று சவுண்ட் விட்டால் உடனே ஓடி வருவாங்க.

அதே சமயம் சில இடங்களில் செய்த வேலைக்கு சம்பளம் கேட்கும்போது இழுத்தடிப்பார்கள். அந்த இடத்தில் ரெளத்ரமாக கேட்கும் போது ஊதியம் கிடைக்கும். சிலர் ரெளத்ரத்தின் உச்சத்துக்கு போவார்கள். அது கூடாது. 90 எம். எல் அருந்துபவர்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குப் போவது நல்லது. தண்ணி அடித்ததற்காகவே வம்பு பண்ணக்கூடாது. அது தேவையில்லாத ரெளத்ரமாக மாறிவிடும். அப்படி நடந்து கொள்வதால் பணம், பொருள், சில சமயம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

சினிமாவில் ரெளத்ரத்தோட இருந்தால்தான் வேலை நடக்கும். ‘வடசென்னை’யில் ஒரு காட்சியில் என்னால் டயலாக் சரியாகப் பேச முடியவில்லை. இயக்குநரிடம் திட்டு வாங்கக் கூடாது என்ற பயத்திலேயே என்னால் அந்தக் காட்சியை சரியாகப் பண்ணமுடியவில்லை.

இயக்குநர் என்பவர் ஒரு படத்தோட கேப்டன் என்பதால் எல்லாமே அவர் தலைமையின் கீழ் இருக்கும். சில சமயம் ‘சைலன்ட்’  என்று சொன்னாலும் சத்தம் குறையாது. அந்த மாதிரி சமயங்களில் ரெளத்ரமாக குரல் கொடுத்தால்தான் அமைதி ஏற்படும். என்னை வளர்த்தெடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன் சார். அவர் என்னைத் திட்டினால் கோபப்படமாட்டேன். ஆனால் அன்று பயங்கரமாகத் திட்டினார்.

அந்த சத்தத்தில் செட்ல இருந்த  எல்லாருமே பேசுவதை நிறுத்திவிட்டார்கள். இயக்குநர் போட்ட சத்தத்தில் நான் சரியாகப் பண்ணிவிட்டேன். காட்சி முடிந்ததும் வெற்றி சார் ‘நல்லா இருந்தது’ என்றார். பிறகு உதவி இயக்குநர் என்னை தனியாக அழைத்து ‘செட்ல இருக்கிற எல்லோரையும் கன்ட்ரோலுக்கு கொண்டு வருவதற்குத்தான் இயக்குநர் உங்களிடம் அப்படி நடந்து கொண்டார்’ என்று விளக்கம் அளித்தார்.

நான் மன வருத்தம் அடையக் கூடாது என்று வெற்றி சார் எடுத்துக்கொண்ட அந்த முயற்சியைத்தான் ரெளத்ரத்தின் இன்னொரு அழகாகப் பார்க்கிறேன்.விங் கமாண்டர் அபிநந்தனை ரெளத்ரத்துடன் இணைத்துப் பார்க்க முடியும். தாய்நாட்டுக்காக உயிரைத் துச்சமாக நினைத்து எதிரி நாட்டின் போர் விமானங்களை வீழ்த்தியவர். சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் சிறையில் இருந்த அபிநந்தனிடம் ரெளத்ரமும் இருந்தது, சாந்தமும் இருந்தது. ரெளத்ரம் இருந்ததால்தான் அவரால் தைரியமாகப் பேச முடிந்தது.

அந்த ரெளத்ரத்தை நல்லதுக்கு பயன்படுத்தினார். விவேகத்துடன் நடந்து கொண்டார். அதன் மூலம் விடுதலையும் கிடைத்தது. விவேகத்துடன் கலந்த ரெளத்ரம் இருந்ததால்தான் இன்று உலகமறிந்த மனிதனாக மாற முடிந்தது. பசி, பாசம், இன்பம், துன்பம் மாதிரிதான் ரெளத்ரம். வாழ்க்கையில் எப்போதும் சூடு பார்ட்டியாக இருக்கக் கூடாது.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எங்கு தேவைப் படுமோ அங்குதான் ரெளத்ரம் வெளிப்படுத்துவேன். சிலபேர் பத்து பேரை தெறிக்க விட்டேன் என்று சொல்வாங்க. அது சும்மா... வாய்ச் சவடால்.சமீபத்தில் ஒரு சம்பவம். பத்துப் பேர் என்னை ரவுண்ட் கட்டினார்கள். நான் மதுரக்காரன் என்பதற்காக வீர வசனம் பேசாமல் ‘சாரி’ கேட்டுவிட்டு தப்பித்து வந்தேன். இந்த அணுகு முறை நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.

வீட்ல எனக்கு ரெளத்ரம் வெளிப்படுத்த வாய்ப்பு இருக்காது. என் மனைவி என் முகத்தை வைத்தே புரிந்துக்கொள்வார். ஹேப்பியா இருந்தால் ‘கண்ணே கனியே...’ என்று கொஞ்சலோடு உள்ளே வருவேன். மூடு மாறி இருந்தால் டோன் வெற லெவல்ல இருக்கும். என்னுடைய இந்த அப்ரோச்சை வைத்தே என் மனைவி தேவையில்லாத பேச்சைக் குறைத்து சண்டை சச்சரவைத் தவிர்த்துவிடுவார்.

இது டெக்னாலஜி உலகம். தவழும் குழந்தையிடம் செல்போன் தவழுவதால் குழந்தைகள் அறிவாளியாக இருக்கிறார்கள். அறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு இந்தக் காலத்து பசங்களிடம் ரெளத்ரமும் அதிகமாக இருக்கு. அதற்கு பிள்ளைகளை குறை சொல்வதை விட வளர்ப்பு முறையைத்தான் குறை சொல்ல வேண்டும். காரணம்... பிள்ளைகள் கேட்கும் எந்த ஒரு விஷயத்தையும் பெற்றோர் யோசிக்காமல் வாங்கித் தருகிறார்கள். சமீபத்தில் ஒரு பையன் மூன்றெழுத்து வெளிநாட்டு பைக்தான் வேண்டும்  என்று அடம்பிடித்து வாங்கியுள்ளான.

அதி வேகத் திறன் கொண்ட அந்த பைக்கை ஓட்டிய அந்தப் பையன் விபத்து காரணமாக அதி வேகமாக இந்த உலகத்தை விட்டே சென்றுவிட்டான். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் கேட்டவுடன் எதையும் வாங்கித் தராதீர். நீங்கள் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரிய வேண்டும். புரிய வேண்டும். அதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் இரண்டு மூணு நாள் கழித்து வாங்கித் தாங்க.

அப்போதுதான் குழந்தை உங்கள் கஷ்டத்தைப்புரிந்துகொள்ளும். ரெளத்ரம் ஒவ்வொருவருக்கும் தேவைதான். அதை அளவோடு பயன்படுத்த வேண்டும். யாரிடம் கோபித்தாலும் அன்றைய தினமே சமாதான முயற்சி எடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் ரெளத்ரம் பழகுவது நல்லது.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)