பூமராங்கம்ப்யூட்டர் வேணாம்! கலப்பையை பிடிங்க!!

விவசாயத் தொழிலின் பிரச்சினைகள், விவசாயிகளின் இன்னல்கள் மற்றும் அருமை பெருமைகளைப் பேசும் படங்கள்தான் இப்போது கோலிவுட்டில் டிரெண்டு. ஆக்‌ஷன் படமான ‘பூமராங்’கிலும் இதே கதைதான்.
தீ விபத்து ஒன்றில் முகம் பொசுங்கிப் போன ஒருவருக்கு, முகமாற்று அறுவை சிகிச்சை மூலமாக அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் சிலர் அவரைக் கொல்ல முயல்கிறார்கள். அப்போதுதான் தன்னுடைய முகத்துக்குச் சொந்தக்காரரான எதிரிகள் இவர்கள் என்பதை அறிகிறார். அவர்கள் ஏன் கொல்ல முயன்றார்கள் என்கிற பின்னணியைத் தேடிப்போகும்போது கதை விஸ்வரூபம் எடுக்கிறது.

அதர்வா, சாப்ட்வேர் என்ஜினியர் மற்றும் விவசாயத்தைக் காக்கத் துடிக்கும் இளைஞர் ஆகிய வேடங்களில் அழகாகப் பொருந்துகிறார். துடிப்புடன் இருக்கிறார். கனமான பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

மேகா ஆகாஷுக்கும் அவருக்குமான காதல் சுவாரஸ்யம். ஒரு பாடல், சில காட்சிகள் என்கிற சிறிய வேடமென்றாலும் கவனம் ஈர்க்கிறார் மேகா. இன்னொரு நாயகியாக இந்துஜா. விவசாயக் குடும்பப் பெண்களின் பிரதி நிதியாக வருகிறார். நகைச்சுவைக்கு சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவர் இருக்கிறார்கள். தியேட்டரில் இருவருடைய காமெடிக்கும் லேசாக கைத்தட்டல் கிடைக்கிறது.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில், வெடித்துக் கிடக்கும் நிலங்கள் நெஞ்சம் பதற வைக்கின்றன. புழுதி பறக்க ஒரு பேருந்து வரும் காட்சியில் உள்ள நிலப்பரப்பு நடுங்க வைக்கிறது. ரதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ‘முகையாழி’ பாடல் ரசிகர்கள் மனதைக் கவரும். பின்னணி இசையும் நன்று.

நீட் தேர்வு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் போன்ற கரண்ட் விஷயங்களை கூர்மையான வசனங்களிலும் தேவையான காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் இயக்குநரின் சமூக அக்கறையை உணர முடிகிறது.

நதிநீர் இணைப்பு என்கிற நாடளாவிய பிரச்சினைக்கு எளிமையான முறையில் தீர்வு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். சஸ்பென்ஸ் வெளியான இரண்டாம் பாதி  கதையோட்டத்தின் போதுதான், படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள்  தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கின்றனவோ என்கிற எண்ணம் வருகிறது. இன்னும்  கொஞ்சம் கிரிஸ்ப்பாக திரைக்கதை அமைத்திருந்தால் பூமராங், தாக்க வேண்டிய  இலக்கை சரியாகத் தாக்கியிருக்கும்.