ராஜாவுக்கும் ராணிக்கும் கெமிஸ்ட்ரி பத்திக்கிச்சி!



விஜய் சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ என்கிற திரில்லரை கொடுத்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, இப்போது ஹரிஷ் கல்யாணை ஹீரோவாக்கி ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் மூலமாக களமிறங்குகிறார்.“இந்தப் படமும் வித்தியாசமான கோணத்துலே இருக்குமா?” என்கிற கேள்வியோடு ரஞ்சித் ஜெயக்கொடியை சந்தித்தோம்.

“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் சார். இதுவும் இன்னொரு காதல் கதைதான். வித்தியாசமான கதைன்னுலாம் கதை விடலாம். ஆனா, அப்படியெல்லாம் எதுவும் தனியா கிடையாது. நாம பார்த்தது, நாம கேட்டது, நாம படிச்சதுல்லாம்தான் கதை. ஏற்கனவே நமக்குத் தெரிஞ்ச கதையை எப்படி சுவாரஸ்யமா, புதுக்கோணத்துலே கொடுக்கிறோம் என்பதில்தான் ஒரு படத்தை மத்த படங்களில் இருந்து வேறுபடுத்தி தனிச்சி காமிக்க முடியும். யங்ஸ்டர்ஸ் நிறைய பேரை ஈர்க்கிற வகையில்தான் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ கதையை பிரசன்ட் பண்ணியிருக்கேன்.

சுவாரஸ்யமா இருக்கும் என்பதற்கு நான் கியாரண்டி.” “உங்க முந்தைய படமான ‘புரியாத புதிர்’ திரில்லரா இருந்தது. இதுலே காதல் தெரியுது. ஒருவேளை ரொமாண்டிக் திரில்லரோ?”

“நோ... நோ... இது ரொமாண்டிக் திரில்லர் கிடையாது. அதே சமயம் ரொமாண்டிக் காமெடி படமும் இல்லை. அழுத்தமான காதல் கதையிது. பிடிவாத குணம் கொண்ட ஒருத்தனைப் பற்றிய கதை. வாழ்க்கையிலே தனக்கு எது வேணும்னு நினைக்கிறானோ அதை அடைய பிடிவாதம் காட்டுற ஒருத்தனைப் பற்றிய கதை  இது.

அதேபோல அவனது கேரக்டருக்கு முற்றிலும் எதிர்மாறான கேரக்டர் கொண்ட ஒரு பொண்ணு. எந்தக் கட்டத்துலேயும் யாருக்கும் தன்னால பிரச்னை வரக்கூடாது, தன்னோட ஒரு செயலால ஒருத்தருக்கும் பாதிப்பு வரக்கூடாதுன்னு நினைக்கிற பொண்ணு. எதையும் விட்டுக் கொடுத்து வாழத் தெரிஞ்சவள்.

இவங்களுக்கு இடையே காதல் வந்தா எப்படி இருக்கும்கிறதுதான் இந்தப் படத்தோட மையம். இன்னிக்கு யங்ஸ்டர்ஸ் மத்தியில காதல்னா என்ன, பிரிவுன்னா என்ன, நிராகரிப்புன்னா என்னங்கிற விளக்கமெல்லாம் வேற மாதிரி இருக்கு. புனிதமான காதல், தெய்வீகக் காதல்னு எல்லாம் சொல்லிக்கிறது ஒரு காலத்துல சாத்தியமா இருந்துச்சு.

இன்னிக்கு அதெல்லாம் நடைமுறையில சாத்தியமில்லைங்கிறதை விட, காதலுக்கான அந்த பழைய விளக்கமெல்லாமே அதிகப்படியான பூஸ்டப்பாக இருக்கிறதோ என்றுகூட தோன்றவைக்கிற சூழல் இருக்கு. இதையெல்லாம் யங்ஸ்டர்ஸ் எப்படி பார்க்கிறாங்க, அவங்களோட அகராதியில காதலுக்கான விளக்கம் என்னவாக இருக்குங்கிறதுதான் இந்தப் படத்தோட திரைக்கதையில பேசுற விஷயமா இருக்கும்.”

“ஹரிஷ் கல்யாண் இப்போ இளம்பெண்களின் மனசுக்கு நெருக்கமான ஹீரோ. அவருக்கு என்ன கேரக்டர்?”

“படத்துலே மிடில் கிளாஸ் பையனா ஹரிஷ் கல்யாண் நடிச்சிருக்கார். அவரோட கேரக்டர் முரட்டுத்தனமான, வீட்டுக்கு அடங்காத பையனா நடிச்சிருப்பார். ஒரு கம்பெனியில வேலை பார்க்கிறார். ஹீரோயின் ஷில்பாவும் புரஃபஷனலிஸ்ட்தான். அவங்க ரெண்டு பேரும் ஒரு கட்டத்துல சந்திக்கிறதும் அவங்களுக்கு இடையிலான நெருக்கமும் வித்தியாசப்படுத்தி காட்டுற விஷயமா இருக்கும்.”

“உங்க முதல் பட ஹீரோ விஜய் சேதுபதியுடன் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்றதா கேள்விப்பட்டோமே?”

“நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். ‘புரியாத புதிர்’ படத்தின்போதே எங்களுக்குள்ளே நல்ல நட்பும் புரிதலும் இருந்துச்சு. அப்போவே திரும்ப படம் பண்றதுன்னு முடிவாச்சு. இதுக்கு இடையே இந்தக் கதை அமைஞ்சதால படம் ஆரம்பிச்சிட்டேன். நாங்க சேர்ந்து பண்ற படம் அடுத்த ஆண்டு துவங்கும்.”

“திரில்லர் எடுத்தவரு, லவ் சப்ஜெக்ட்டிற்கு மாறிட்டீங்களே? ஜெயிக்கிற குதிரையை ஓட்டுவோம்னு எண்ணமா?”
“அப்படியெல்லாம் இல்லை. ‘புரியாத புதிர்’ திரில்லர் கதையாக எடுத்திருந்தேன். அடுத்ததும் அதேபோல திரில்லர் படமாகவே எடுக்க விருப்பமில்ல. ஒவ்வொரு படத்துக்குமே வித்தியாசம் காட்ட விரும்புறேன். எல்லாவிதமான கதைகளையும் படமாக்கணும்கிறதுதான் என்னோட ஒரே நோக்கம். முதல் படம் திரில்லர் பண்ணிட்டு இப்போ லவ்வை தொட்டிருக்கிற மாதிரி, அடுத்த படம் இந்த ரெண்டு ஜானருக்கும் சம்பந்தமே இல்லாத கதையாக இருக்கும்.”

“இந்தப் படத்துக்கு முன்பு தான் ‘பியார் பிரேமா காதல்’ படம் ஹரிஷ் கல்யாணுக்கு வெளிவந்துச்சு. திரும்பவும் காதல் கதையான்னு கேள்வி எழுதே?”
“காதல் கதைன்னு எடுத்துக்கிட்டா வருஷத்துக்கு எத்தனை படங்கள் வருது. எல்லாம் ஒரே மாதிரியான கதைகளா? ஆக்‌ஷன் படமும் அப்படித்தானே. படம் சொல்கிற விஷயத்தைத்தான் ரசிகர்களும் பார்ப்பாங்க. அந்தப் படத்துல வீட்டுக்கு ரொம்பவே அடங்கிப்போகிற அமைதியான ஹரிஷ் கல்யாணை பார்த்திருப்பீங்க. இதுல அப்படியே எதிர்மாறான ஹரிஷைத்தான் ரசிகர்கள் பார்க்கப்போறாங்க. ‘பியார் பிரேமா காதல்’, காமெடியும் சீரியஸான விஷயமும் தொட்டிருக்கிற படமாக வந்துச்சு. அந்த காதல் சொன்ன விஷயமும் வேற. அதேபோல இந்தப் படம் பேசப்போற விஷயம் வேற.”

“ஹரிஷ், ஷில்பா கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு?”

“ரொம்பவே ரொமாண்டிக் கெமிஸ்ட்ரியா இவங்க ஜோடி அமைஞ்சிருக்கு. இந்தக் கதைக்கு ஒரேடியா ஸ்டார்ஸை நாடிப்போக முடியாது. அதே சமயம் புதுமுகத்தை நடிக்க வச்சாலும் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்க மாட்டார். பிரபல முகம் படத்துக்கு தேவையா இருந்தார். அதனாலதான் ஹரிஷை இதுல நடிக்க வைக்க முடிவு பண்ணினேன்.

ஹீரோயின் வேடத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் ஆகாத ஒரு முகம் தேவையா இருந்ததால, அந்த கேரக்டருக்கு ஷில்பாவை நடிக்க வைக்க முடிவு பண்ணினோம். ரெண்டு பேருக்குமான காதல், ஊடல் எல்லாமே ரசிகர்களுக்கு ஃபிரெஷ்ஷான ட்ரீட்டாக இருக்கும். படத்துல ம.கா.பா. ஆனந்த், பாலசரவணன், பிரேம்ஜி இவங்க மூணு பேரும் படத்தோட கலகலப்பான ஏரியாவை கவனிச்சிக்கிறாங்க. ஆனாஅவங்க வெறும் காமெடிக்கான கேரக்டர்கள் கிடையாது. அவங்களோட பார்ட் கதையில முக்கியமாக இருக்கும்.”

“படத்தோட தலைப்புக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?”

“ரெண்டு கேரக்டரை சுற்றித்தான் முழுப் படமும் நகரும். இந்த ரெண்டு பேரும்தான் படத்தோட ஹைலட் கேரக்டர்கள். அவங்களோட கேரக்டர்களை விவரிக்கிற மாதிரியான தலைப்பு தான் இது. இன்னொரு முக்கிய அம்சம், இது ஜெயகாந்தனோட சிறுகதையோட தலைப்பு. அவரோட கதை தலைப்புக்கு மரியாதை செலுத்துற வகையில இந்த படத்துக்கு இந்தத் தலைப்பு வச்சிருக்கோம்.”

“விமர்சகர்கள் பாராட்டியும் ‘புரியாத புதிர்’ படம், எதிர்பார்த்த வணிக வெற்றியைப் பெறாம போனதுக்கு ஏதாவது காரணம்?”

“தாமதம் ஒரு முக்கிய காரணமா சொல்லலாம். படத்தோட வெளியீடு நம்ம கையில கிடையாது. அதை சினிமால தீர்மானிக்கவே முடியாது. எப்போ எந்த பிரச்னை வரும்னு சொல்லவும் முடியாது. படத்துக்கான எதிர்பார்ப்புகள் நிறைய இருந்துச்சு. ஆனா, அதுக்கேத்த மாதிரி படம் சரியான நேரத்துல திரைக்கு வராம போனது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமபோனதுக்கு காரணமா அமைஞ்சிருச்சி.”

“இதுலே விஜய் சேதுபதியை ஒரு பாட்டுல பயன்படுத்தி இருக்கீங்க?”

“ஆமாம். அது பட்டினத்தாரோட பாடல் வரிகள். பெண்ணாகி வந்த ஒரு மாயபிம்பம் அப்படின்னு கவிதை நடை கலந்து வசனமா பேசணும். அதுக்கு வித்தியாசமான குரல் தேவையா இருந்துச்சு. அதுக்கு விஜய் சேதுபதிதான் சரியாக இருப்பாருன்னு நினைச்சேன். அவரோட குரல்ல இயல்பாக ஒரு சிரிப்பு இருக்கும். இதுல அந்தப் பாடலுடைய வசனத்துக்கு அந்த குரல்தான் எனக்கு தேவையா இருந்துச்சு.”

“காதல் கதைக்கு பாடல்கள் ரொம்ப முக்கியமாச்சே?”

“ஆமாம். சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் எல்லாமே சிறப்பாக வந்திருக்கு. படத்துல மொத்தம் அஞ்சு பாட்டு இருக்கு. கதையோட டிராவல் ஆகுற பாடல்களா எல்லாமே இருக்கும். அதனால அளவுக்கு அதிகமாக பாடல்களைத் தேர்வு பண்ணல.”

- ஜியா